HR உன்ன கூப்பிடுறார் … (23)

பொறுப்புள்ள அதிகாரம்

அதிகாரம் என்பது மிகப்பெரிய போதை அதை சரியாகக் கையாண்டால் அதுவே மிகப்பெரிய பாதை என்பதை நம்மில் பலர் நம் நடைமுறை வாழ்வில் கண்ணெதிரே கண்டிருப்போம். அதிகாரத்தால் வாழ்வடைந்தவர்களும் உண்டு, வாழ்விழந்தவர்களும் உண்டு. அது யார் கையில் உள்ளது என்பதைப்பொறுத்து இந்த மாற்றம் நிகழும். சட்டென்று மாறும் வானிலைபோல, சட்டென்று மாறும் மனநிலையும் இந்த அதிகாரத்தால்தான் நிகழ்கிறது. யாராக இருந்தாலும் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களது முடிவுரையும் எழுதப்படுகிறது. அடித்துப்பிடித்து அதிகாரத்திற்கு வந்ததும் அதே அடித்தல் பிடித்தல் முறையைக் கையாண்டு எவரையும் அந்த இடத்திற்கு வரவிடாமல் செய்வதும் அதிகாரம்தான்.

Jefe déspota de oficina | Vector Premium

ஏன் அதிகாரத்தைப் பற்றி இப்படி எதிர்மறைக் கருத்துகளால் வறுத்தெடுக்கிறீர்கள்? எனக் கேட்கலாம், அதிகாரம் நேர்திசையில் செல்லும்போது வரவேற்பது நம் கடமை அதுவே எதிர்திசையில் பயணித்தால் எல்லோருக்கும் அது அழிவுதான். இதை நெறிப்படுத்த வழியேயில்லையா? இருக்கு. அதுதான் பொறுப்பு. நாமெல்லாம் பொறுப்புள்ள மனிதர்களாக வாழ 133 அதிகாரங்களைத் தந்துள்ளார் நம் திருவள்ளுவர். அப்படியானால் பொறுப்பும் அதிகாரமும் ஒன்றுதானா? இல்லை, இணைபிரியா இரட்டைத் தண்டவாளங்கள் என்பதுதான் மிகப்பொருத்தமாகும்.

435 Grumpy Old Man Illustrations & Clip Art - iStock

இந்தப் பொறுப்புள்ள அதிகாரம் நிறுவனத்திற்கு மட்டுமல்ல எல்லா இடத்திற்கும் தேவையான ஒன்று. பொறுப்புள்ள மனிதரிடம் அதிகாரம் இருப்பது, நீர்நிலை ஓரம் நடப்பட்ட கனிதரும் மரத்திற்கு ஒப்பாகும். இல்லையென்றால் அது ஒப்புக்குக் கொடுக்கப்பட்ட ஒன்றாக மாறிவிடும். எனக்கு மட்டும் இந்த அதிகாரம் கிடைச்சதுனா உண்டு இல்லைனு ஆக்கியிருப்பேன் என நாம்கூட சிலநேரம் நமக்குள்ளே சொல்லியிருப்போம். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அதிகாரம் இவ்வளவு வலிமை பொருந்தியதா? என ஆச்சர்யபடத்தோணும், அந்த அதிகாரம் பிறருக்கு வலிகளைத் தராமல் வழிகளைத் தந்தால் மெச்சத்தக்கதாக மாறிவிடும். அதிகார முட்டல் மோதல் எல்லா இடங்களிலும் நடப்பது இயல்புதான், அதை எப்படி சரிசெய்வது என்பதை பொறுத்துத்தான் வெற்றிப்பாதை தீர்மானிக்கப்படும். ஓ… நிறுவனங்களில் இதையும் மனிதவளத்துறையில் உள்ளவர்கள்தான் கையாளுகிறார்களா? இல்லை இல்லை, ஆனால் அதனுடைய தாக்கம் இங்கு அதிகமாக இருக்கும்.

Here's why it feels like you're working in 'The Office'

முடிவுகளை எடுக்கும் அதிகாரம் நிறுவனத்தின் மேல்நிலையில் உள்ளவர்கள் கையில், அதை செயல்படுத்தும் பொறுப்பு அதற்கடுத்தநிலையில் உள்ளவர்களிடம் இருக்கும். இந்த செயல்படுத்தும் பொறுப்பு அல்லது அதிகாரம் பெரும்பாலும் மனிதவளத்துறையிடம்தான் தரப்படும். முடிவுகளை நாம் எளிதில் எடுத்துவிடலாம் ஆனால் அதை செயல்படுத்துவதில்தான் ஏகப்பட்ட சிக்கல்கள் இருக்கும். அந்த சிக்கல்களை கவனமாகக் கையாண்டு நடைமுறைப்படுத்த பொறுப்பும், பொறுமையும் அவசியம். அப்படியானால் அதிகாரம் குறிப்பிட்ட ஒருவரிடம் மட்டும்தான் இருக்குமா? அப்படி வைப்பது நல்லதல்ல, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரமாக இருப்பதுதான் நல்லது, உச்ச அதிகாரம் ஒருவரிடமும், மிச்ச அதிகாரம் அவரவர் வகிக்கும் பொறுப்பின் தன்மையைப் பொறுத்து பகிர்ந்தளிப்பதன் மூலம் ஒரு நிறுவனம் அதன் உயர்நிலையை எளிதில் அடையும். சரியாகப் பகிர்ந்தளிக்கப்படாத அதிகாரத்தால் (ஆணவத்தால்) எத்தனையோ நிறுவனங்கள் அதன் வளர்ச்சி நிலையை எட்டாமல் பாழாகும் நிலையை நாம் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆதலால் ஓரிடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள அதிகாரம், உறங்கும் வெடிமருந்திற்கு (கண்ணிவெடிக்கு) சமம்.

83,996 Meeting Cartoon Stock Vector Illustration and Royalty Free Meeting  Cartoon Clipart

நாம் ஓட்டுநர் உரிமம் வாங்கும்போது, அந்த உரிமத்தை சட்டப்படி செல்லுபடியாக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் (RTO) கையொப்பம் அவசியம். கையெழுத்திடும் அதிகாரம் அவருக்கு, பொறுப்புள்ள வகையில் வாகனத்தைச் செலுத்தும் அதிகாரம் நமக்கு., இந்த இடத்தில் கையெழுத்திடும் உச்ச அதிகாரத்தை நாம் கையில் எடுக்கமுடியாது, எடுக்கவும் கூடாது. ஆணைகளை (உத்தரவு) வழங்கும் திறன் அதிகாரம், ஆணைகளை நடைமுறைப்படுத்தும் திறன் பொறுப்பு, எனப் புரிந்துகொள்வது எளிதாக இருக்கும் என நினைக்கிறேன். பொறுப்புள்ள அதிகாரமாக மாறும்போது அது அளப்பெரிய மாற்றத்தை அள்ளித்தரும். தரட்டும் என்பதே நம் விருப்பம்.

சில நிறுவனங்களில் பெரிய பெரிய பொறுப்புகள் தரப்பட்டிருக்கும் ஆனால் உரிய அதிகாரம் மறுக்கப்பட்டிருக்கும், அந்தப் பொறுப்பை வைத்து நாம் எதுவும் செய்யமுடியாது. அது ஓர் அலங்கரிக்கும் பொறுப்பாக இருக்குமே ஒழிய, அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாக இருக்க வாய்ப்பே இல்லை. அலங்கரிக்கப்பட்ட பொறுப்பே போதும் என மகிழ்ச்சியடையும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள், அந்தப் பதவி அவர்களுக்குச் சுகத்தை தரும் ஆனால் வளத்தை தருமா? தராது.

நேர்கொண்ட பார்வையும் நன்னெறி கொண்ட சிந்தனையும் உள்ளடக்கிய பொறுப்புள்ள தலைமைப்பண்புதான் ஒரு நிறுவனத்தை மட்டுமல்ல, நாட்டையும் நல்ல நிலைக்குக் கொண்டுசெல்லும். அந்தப் பொறுப்புள்ள தலைமைப்பண்பை நமதாக்க நாளும் முயல்வோம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. Well presented, Power and Responsibily should travel parallely. Power without responsibilty is Danger. Responsibilty without Power is a Waste. Power in the hands of the responsible people it will be gift to the society.You have covered everything Simply.

  2. ரெஜினா சந்திரா says:

    அதிகாரத்துக்கும் பொறுப்புக்கும் உள்ள வித்தியாசத்தை அழகாக விளக்கியுள்ளீர்கள். உங்கள் எதுகை மோனைச் சொற்கள் கட்டுரையைச் சுவாரசியமாக்குகின்றன.