HR உன்ன கூப்பிடுறார்…(20)

ஆகட்டும் என்ற சொல்லே அடித்தளம்

வேலைக்கான தேடலில் எல்லாவற்றையும் சரியாகச் செய்யும் நமக்கு, நேர்முகத்தேர்வில் (Interview) மட்டும் சில பதட்டங்கள் நம்மை அறியாமலே தொற்றிக்கொள்ளும் அது ஏனென்றே சிலருக்குப் புரியாது, அது ஒரு வகையறியா பயம். எதைக்கண்டாலும் பயம், எல்லாம் பயம் என்று தெனாலி படத்தில் கமல் சொல்வதுபோலத்தான் சிலருக்கு படபடவென்று இருக்கும். ஆகட்டும் பாத்துரலாம் என நெஞ்சுரம் கொண்டு இறங்க முடிவெடுத்தாலே முக்கால்வாசி பயம் மற்றும் பதற்றம் நம்மைவிட்டு ஓடிவிடும். இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் (Civil Services Examination), பலர் கோட்டைவிடுவது இந்த நேர்முகத்தேர்வில் தான். நம்மைப்போல அவர்களும் மனிதர்கள்தான், நாம் சிறப்பாக செய்யவில்லை என்றால் கொலையா செய்துவிடுவார்கள் எனும் மனநிலையில் செல்வேன் என்று எனது மனிதவள நண்பர் சொல்வது ஒருவகையில் ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய கருத்துதான். நான் துவக்கக் காலத்தில் வேலைதேடி ஏறக்குறைய 15 நிறுவனங்கள் ஏறி இறங்கியதைப் படித்துவிட்டு ஒரு மாணவர் சொன்னார், எனக்கெல்லாம் இப்படி நடந்ததுனா வெறுத்துப்போயிருப்பேன் சார் என்றான். தம்பி நம்மைப் பற்றியும் பிற மனிதர்களைப் பற்றியும் அறிய நமக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு எனக் கருத வேண்டும் என்றேன்.

நம்மில் ஒருசிலரோ ஏறக்குறைய 10 நிறுவனங்களில் பணிக்கான ஆணையை (Offer or Appointment Order) வாங்கிவிட்டு அவர்களை இவர்கள் பின் சுற்ற வைக்கும் திறன் கொண்டவர்களும் உண்டு. இது நல்ல பண்பா இல்லையா என்பது பற்றி பிறகு பேசுவோம். நேர்முகத்தேர்வுக்கான நேரம் எவ்வளவு இருக்கலாம் என்று ஒருசிலர் என்னிடம் கேட்பதுண்டு, அது எவ்வளவு நேரம் என்பதை தீர்மானிப்பதே முதலில் நாம்தான் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும், எதுவுமே சொல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்தால் வேறென்ன நம்மிடம் கேட்கமுடியும். Better Luck Next Time என்று இருவருமே சொல்லிக்கொள்ளவேண்டியதுதான். என்னைப்பொறுத்தவரை அதிகபட்சமாக 10 நிமிடங்கள் தான் எடுத்துக்கொள்வேன் அதற்குமேல் எடுத்துக்கொல்(ள்)வது எனக்குப் பிடிக்காது. அந்த 10 நிமிடத்தில் அவரைப்பற்றி முழுதும் அறியமுடியுமா? எனும் கேள்வி வரலாம், யாரைப்பற்றியும் முழுமையாக அறிய முடியாது, அதேநேரத்தில் அவர் இந்த வேலைக்குத் தகுதியானவரா? சரியானவரா? என கணிக்க முடியும், அதற்கு நம்மிடமும் சில திறன்கள் இருக்கவேண்டும்.

Your Make-or-Break Interview Moment: 'Tell Me About Yourself'

கங்கை நதிக்கரையில் இக்கரையில் இருந்து அக்கரைக்கு அக்கறையோடு பயணிகளை அழைத்துச்செல்லும் உபபாத்யாவைப் பற்றி இங்கு நாம் பேசியாகவேண்டும். 70 வயதுடைய அவர் படகு செலுத்துவதில் ஏறக்குறைய 40 வருட அனுபவம் உடையவர். இதுவரை எந்த விபத்தும் நடந்ததில்லை, இதை ஆச்சரியத்தோடு பலர் அவரிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில், நான் நதியோடு பேசுகிறேன் என்பதுதான். பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் படித்தபோது பல கடற்கரை கிராமங்களுக்குச் சென்றதுண்டு சில கடலோடிகளிடம் பேசியபோது அவர்கள் சொல்வதும் இதேதான் “நாங்கள் கடலோடு பேசுகிறோம்”. இயற்கையோடு பேசுபவர்களும் இருக்கிறார்கள், (கடவுளோடு பேசுபவர்கள் பற்றி எனக்குத் தெரியாது). இதற்குள் அடங்கியிருப்பது ஒரு இனம்புரியா நேயம்தான், அந்த நேயம் மனிதவளத்துறையில் உள்ளவர்களுக்கு இருக்கவேண்டியது அவசியம். அந்த நேயம்தான் சக மனிதரை மதிக்கவும் மாண்புள்ளவராக மாற்றவும் செய்யும். சகமனிதனிடம் வெறுப்பு காட்டி கடவுளிடம் நெருக்கம் காட்டுவது சரியான பண்பல்ல. நேயம் என்பது வெறுமனே அன்புகாட்டிச் செல்வது அல்ல மாறாக வழிகாட்டிச்செல்வது, அந்த வழிகாட்டலாக எத்தனையோ HRகள் எத்தனையோ நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் என்பதை சற்று சீர்தூக்கிப்பாருங்கள். 10 நிமிடங்களுக்கு மேல் நேர்முகத்தேர்வைக் கொண்டுசென்றால் திறனான HR இல்லையா? அப்படியெல்லாம் இல்லை, அதற்குமேல் அங்கு பேச ஒன்றுமில்லை என்பது என் கருத்து, அதைத்தாண்டி வெகுநேரம் செல்வது இருபக்கமும் உள்ள தேவை மற்றும் கருத்தாக்கத்தைப் பொறுத்து அமையும்.

How Strong Storytelling Can Help You Nail A Job Interview | Monster.com

நேர்முகத்தேர்வுக்கு வந்த அத்தனைப்பேருமே திறன் உள்ளவர்களாக இருந்தால்? திறனைத் தாண்டி சில காரணிகளும் உள்ளே அடங்கும், எவ்வளவு காலத்தில் நீங்கள் வேலைக்குச் சேரமுடியும், உங்களது எதிர்பார்ப்பு, சம்பளம், நீங்கள் நிறுவனத்திற்கு தரவிருக்கும் பங்களிப்பு, புதுவித சிந்தனை, நல்ல கருத்தாக்கம், எல்லாவற்றிற்கும் மேலாக உங்களுக்கு மேல் இருப்பவருக்கு (Reporting Boss) எப்படிப் பொருந்திப்போகும் (Aligning with Boss) எண்ணம் உள்ளவர் என்றெல்லாம் பார்க்கப்படும். இவையெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் உங்கள் எதிர்பார்ப்பு செயல்வடிவத்துக்கு வரும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. சு சுசிலா says:

    அருமையான கருத்துக்கள் தோழர். பாராட்டுக்கள். சில நேரங்களில் பரீட்சை எழுதத் தயாராகும் மாணவர்கள் கூட பாத்துக்கலாம் என்று அசட்டையாக பதில் சொல்கிறார்கள். இதில் அந்தப் பொருளும் உண்டு.