அரசு மானியங்களை பெற ஆதார் எண் இனி கட்டாயம்: யு.ஐ.டி.ஏ.ஐ திட்டவட்டம்!!

யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம், ஆதார் அட்டைகளை வினியோகித்து வருகிறது. மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள், வங்கி சேவைகள் உட்பட பல்வேறு விதமான சேவைகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

யு.ஐ.டி.ஏ.ஐ., அளித்த புள்ளி விபரத்தின்படி, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட 99 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆதார் சட்டப்பிரிவு 7ன்படி, ஆதார் அட்டை பெறாதவர்கள், அரசு அளித்துள்ள இதர அதிகாரப்பூர்வ அடையாள அட்டை வாயிலாக சேவைகளை பெறுவதற்கு தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில், யு.ஐ.டி.ஏ.ஐ., சில மாற்றங்களை தற்போது அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, மத்திய அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளுக்கு, யு.ஐ.டி.ஏ.ஐ., கடந்த 11ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியது. அதன் விபரம்:மத்திய – மாநில அரசுகளின் பல்வேறு நலத்திட்ட உதவிகள், மானியங்கள் உள்ளிட்டவை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள், மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள், அட்டை வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். அட்டை கிடைக்கும் வரை, விண்ணப்பித்ததற்கான ஒப்புகை சீட்டுடன், அரசு அளித்த அதிகாரப்பூர்வ அடையாள அட்டையையும் சேர்த்து சமர்ப்பித்து உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *