தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – 40 திருடர்களுடன் தமிழ் சினிமாவை மிரட்டிய அலிபாபா

மலைக்கள்ளன் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு வெளியான கூண்டுக்கிளி, குலேபகாவலி இரண்டும் அதை ஈடு செய்யும் வகையில் அமையவில்லை. கூண்டுக்கிளி அன்றைய இரண்டு நம்பிக்கை நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். படத்திற்கு மிகப்பெரிய எதிர் பார்ப்பு இருந்த போதும் படம் தோல்வியைத் தழுவியது. எழுத்தாளர் விந்தன் எழுதிய இக்கதையை டி.ஆர் ராஜகுமாரி தன் தம்பியை டி.ஆர் ராமண்னாவை இயக்குனராக்கும் பொருட்டு அன்றைய இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களையும் சம்மதிக்க வைத்து நடிக்க வைத்தார்.

BS Saroja talks about working with MGR and Sivaji Ganesan in 'Koondukkili'  - The Hindu

சண்டைக்காகப் பேர் பெற்ற எம்.ஜி.ஆரை கோழையாகக் காண்பித்த விதம் பலருக்கும் பிடிக்கவில்லை . இதுவே படத்தின் தோல்விக்குக் காரணம் என கருதப்பட்டத இதனையடுத்து எம் .ஜி.ஆரை வீரனாக காண்பிக்க முடிவெடுத்து சூட்டோடு சூடாக குலேபகாவலி படத்தைத் துவக்கி அதில் எம்.ஜி.ஆர்க்கு கத்தி சண்டைக் காட்சிகள் வைத்து அவரின் வீரதீர பராக்கிரம சூரனாகக் காண்பிக்கும் வகையில் திரைக்கதையை எழுதினார். உடன் அதில் வில்லியாக தன் அக்கா டி.ஆர் ராஜகுமாரியையும் நடிக்க வைத்தார். படம் சுமாரான வெற்றி என்பது மட்டுமல்லாமல் கூண்டுக்கிளி தோல்வியிலிருந்து ராமண்னாவை காப்பாற்றியது எனலாம். ஆனாலும் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு மலைக்கள்ளன் வெற்றியை குலேபகாவலி ஈடு செய்யவில்லை . அதற்கு முக்கியக்காரணம் மலைக்கள்ளனில் இருந்த த்ரில்லான திரைக்கதை மற்றும் பிரம்மாண்டம். மட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய காரணம் ஜோடி. எம்.ஜி.ஆருக்கு ஜோடியாகப் பானுமதி இணைந்து தோன்றும் காட்சிகள் வரும் போது திரையரங்கில் ஒரு மேஜிக் நிகழ்ந்தது. அந்த மேஜிக்கோடு இன்னும் சில ஐட்டங்கள் சேர்த்தால் வெற்றி நிச்சயம் எனக் கணக்குப் போட்டுக் காத்திருந்தார் இயக்குனர் டி. ஆர். ராமண்ணா. அப்படி ஒரு மேஜிக்கான திரைக்கதையுடன் மாடர்ன் தியேட்டர் டி.ஆர் சுந்தரம் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அழைப்பு விட்டார் . அப்படி நிகழ்ந்த அதிசய படம் தான் ”அலிபாபாவும் 40 திருடர்களும்.”

Alibabavum 40 Thirudargalum Full Movie Climax - YouTube

ஏற்கனவே மந்திரி குமாரிக்கு ஒப்பந்தம் செய்யும் போதே மூன்று படங்களுக்குச் சேர்த்து ஒப்பந்தம் செய்திருந்தார் டி.ஆர் சுந்தரம். அடுத்து சர்வாதிகாரி படம் சரியாகப் போகவில்லை. இடைப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆரின் சந்தை மதிப்பு கிடுகிடுவென ஏறிவிட்டதால் கொஞ்சம் பிரம்மாண்ட கதையாகத் தேடினார். அப்போது அவர் மத்தியில் உதித்த எண்ணம் தான் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்.”

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் ஒன்று ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’. மரம் வெட்டுதலைத் தொழிலாகக் கொண்ட அலிபாபா, நடனப் பெண்ணான மார்ஜியானாவை சில கயவர்களிடம் இருந்து காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். தனித்துவம் நிறைந்த அலிபாபாவின் இயல்பு, அவர் மீது மார்ஜியானாவை காதல் கொள்ளச் செய்கிறது.

Alibabavum 40 Thirudargalum [1956] - Tamil Movie in Part 7/10 -  M.G.Ramachandran - P. Bhanumathi - YouTube

ஒருநாள் காட்டுக்கு மரம் வெட்டச் செல்லும் அலிபாபா, அபு ஹூசேன் எனும் கொடூர கொள்ளைக்காரன் தலைமையில் திருடர்கள் குகையொன்றிலிருந்து வெளியே வருவதைப் பார்க்கிறார்.பாறையினால் மூடப்பட்ட குகையைத் திறக்க அவர்கள் பயன்படுத்திய சொல்லைத் தெரிந்துகொண்டவர், உள்ளே நுழைகிறார். தங்கமும் வைரமும் அங்குக் கொட்டிக்கிடப்பதைப் பார்த்தவுடன், அவையனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டவை என்பதை உணர்கிறார் அலிபாபா. சில மூட்டைகளில் அவற்றை எடுத்துக் கொண்டு வெளியேறுகிறார்.

திடீரென்று பணக்காரர் ஆனவுடன், தன்னிடம் இருக்கும் செல்வத்தைத் தானங்களில் செலவழிக்கிறார் அலிபாபா. இதனைக் கேள்விப்படும் காசிம், அவரை விருந்துக்கு அழைத்து நடந்த உண்மையைக் கேட்டறிகிறார்.அலிபாபா சொன்னபடி குகைக்குள் நுழைந்த காசிமுக்கு, அங்கிருக்கும் செல்வத்தைப் பார்த்தவுடன் வெளியேறுவதற்கான கடவுச்சொல் மறந்துவிடுகிறது. இதனால், குகை திரும்பும் கொள்ளையர்களிடம் மாட்டி உயிரை விடுகிறார். இதன்பிறகு காசிம் பிணத்தை அலிபாபா மீட்டெடுப்பதும், வந்தது யார் என்ற உண்மையை அறியக் கொள்ளையர்கள் அலிபாபாவின் வீட்டைத் தேடுவதும் பின்பாதி திரைக்கதையைச் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

Masila Unmai Kathale - Alibabavum 40 Thirudargalum Song - MGR, P. Bhanumathi

இக்கதை 1941இல் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடிப்பில் இதே பெயருடன் தமிழில் ஒருபடம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படம் பெரிதாக மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை.

1954ஆம் ஆண்டு ஹோமி வாடியா இயக்கத்தில் இந்தியில் வெளியான அலிபாபா அவுர் 40 சோர் திரைப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் சுந்தரத்தை ஈர்க்க, அவர் இதனைத் தமிழில் தயாரிக்க முடிவு செய்தார். படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு எம்.ஜி.ஆர், பானுமதி, டி.ஆர் சுந்தரம் ஆகிய மேதைகளின் சங்கமம் ஒரு காரணம். இருந்தாலும் இத்தோடு இன்ன பிற காரணங்களையும் அடுக்கலாம். அதில் ஒளிப்பதிவு, பிரமாண்டமான செட்டுகள் , விறுவிறு திரைக்கதை அட்டகாசமான பாடல்கள் ,ஆக்‌ஷன் காட்சிகள் நடன அமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பு என பட்டியலிட்டு கொண்டே போகலாம் .

Alibabhavum Narpathu Thirudargalum (1956) - IMDb

சந்திர லேகா, அந்த நாள், மலைக்கள்ளன் ஆகிய படங்களுக்குப்பிறகு தமிழ் சினிமாவில் தொழில் நுட்பத்தில் மிகச்சிறப்பாக உருவான படம் “அலிபாபாவும் 40 திருடர்களும்” எனலாம் . குறிப்பாகக் குதிரையில் 40 திருடர்கள் குகை நோக்கி வரும் காட்சியில் காமிராவின் கட்டமைவும் நகர்வு என்பது அது வரையில் தமிழ் சினிமாவில் நிகழாத பிரம்மாண்டம். டபிள்யூ. ஆர் சுப்பாராவ் எனும் ஒளிப்பதிவு மேதையின் திறமை அதிகம் கொண்டாடப்படாமல் போனது ஒரு துயரம் . அது போல இப்படத்தின் இன்னொரு மேதை கலை இயக்குனர். ஏ.ஜே.டொமினிக். ஒவ்வொரு முறை குகை திறக்க பயன் படுத்தப்பட்ட தொழில்நுட்பமும் செயல் படுத்திய விதமும் அபாரம் . இன்று வரையும் அப்படி ஒரு மிரட்சியை யாரும் தமிழ் சினிமாவில் உருவாக்கவில்லை எனலாம். இந்தக் குகையின் வெளிப்புறப்பகுதி மைசூரிலும், உட்புறப்பகுதி சேலத்திலும் வடிவமைக்கப்பட்டு படமாக்கப்பட்டன. அதேபோல அலிபாபா மற்றும் காசிம் வீடுகள், மார்ஜியானா நடனமாடும் விடுதி, கடைத்தெரு, அதில் இருக்கும் நடைபாலம் போன்றவை கதை நடக்கும் அரேபிய உலகத்துக்கே அழைத்து சென்றது என்றால் மிகையில்லை. கிளைமேக்ஸில் இடம்பெற்ற சண்டைக்காட்சியும் கூட, கொதிக்கும் நீரோட்டத்தின் மீது அமைக்கப்பட்ட தொங்கு பாலத்தின் மீது நடப்பதாகக் காட்டியது மேலும் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தது.

En Aattamellam - Alibabavum 40 Thirudargalum Song - MGR, P. Bhanumathi

அந்த காட்சியின் ஒளிப்பதிவும், இசையும், ஆர்ட் டைரக்‌ஷனும் சேர்ந்து நிகழ்த்திய மாயாஜாலம் டி.ஆர் சுந்தரம் அவர்களின் மேதைமைக்கு எடுத்துக்காட்டு. அதுபோல பாடல்கள் ‘அழகான பொண்ணுதான் அதுக்கேத்த கண்ணுதான்’ ,‘மாசிலா உண்மைக் காதலே’, ‘சின்னஞ்சிறு சிட்டே என் சீனா கற்கண்டே உல்லாச உலகம் எனக்கே சொந்தம்’ பாடலும், ‘அன்பினாலே ஆளவந்த அழகு பூபதி’’,.எனப் படத்தில் வந்த அனைத்து பாடல்களும் பெரிதாக கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் தட்சிணாமூர்த்தி இந்த பாடல்களை பெரும்பாலம் இந்தி மூலப்படத்தை தழுவியே மெட்டமைத்திருந்தார்.

இப்படத்தின் துவக்கத்தில் வரும் ‘சலாம் பாபு சலாம் பாபு என்னைப் பாருங்க’ என்ற பாடலுக்கு நடனம் ஆடிய பெண் தான் பிற்பாடு இந்திக்குப் போய் வஹிதா ரஹ்மான் எனும் புகழ்பெற்ற நடிகையாகக் கொடிகட்டிப் பறந்தார் . அந்த சலாம் பாபுவுக்கு பிறகு கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தின் மூலம் தமிழுக்குத் திரும்பி வந்தார். இப்படத்தில் எம்.ஜி.ஆர் நடிக்கவிருந்த ஒரு பாடலையும் சண்டைக் காட்சியையும் அவர் இல்லாதபோது டூப் கொண்டு சுந்தரம் படமாக்கியதாகச் சில தகவல்கள் இணையத்தில் உண்டு. ‘என் ஆட்டமெல்லாம்’ பாடலில் மட்டுமே பி.எஸ்.வீரப்பாவும் எம்ஜிஆரும் சேர்ந்திருப்பது போன்ற ஷாட்கள் பெரிதாக இராது. அதனைத் தொடர்ந்து வரும் குதிரை சவாரி காட்சியிலும் டூப் பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வரும். வேறெங்கும் இதற்கான சுவடு கூடத் தெரியாது. இப்படத்துக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் நடிக்கவில்லை. அந்த காலகட்டத்தில், ஸ்டூடியோ தயாரிப்பாளர்களின் படங்களில் நடிப்பதை அவர் குறைத்துக் கொண்டார் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

இப்படத்தில் காசிம் வேடத்தில் நடித்தவர் எம்.ஜி.ஆரின் சகோதரர் சக்கரபாணி. அவரது மனைவியாக நடித்தவர் வித்யாவதி. (இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சித்தி ஆவார்). மாடர்ன் தியேட்டர்ஸ் கதை இலாகா என்றே திரைக்கதை வசனத்துக்கான கிரெடிட் டைட்டிலில் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்படத்துக்கு வசனம் எழுதியவர் முரசொலி மாறன் என்றும், ஏ.எல்.நாராயணன் என்றும் இரு வேறு தகவல்கள் உண்டு. கேவா கலர் என்றாலே சிவப்பு சாயத்தில் கருப்பு வெள்ளை படத்தை முக்கியெடுத்தது போன்றிருக்கும் என்ற நினைவு என் மனதில் உண்டு.இப்படத்தில் பானுமதி மற்றும் எம்.ஜி.ஆர் பச்சை நிற உடை உடுத்தியிருப்பதை உணரும்போது, அப்படியொரு எண்ணத்தில் இருந்து விடுபட சுப்பாராவ் எப்படிப் பணியாற்றியிருக்கிறார் என்பது தெரிகிறது.

1956 பொங்கலையொட்டி வெளியான ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ திரைப்படம் தமிழகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போதுவரை இத்திரைப்படம் உருவாக்கிய சாதனையை வேறு படம் முறியடிக்கவில்லை. இதன் தொடர்ச்சியாக ‘அரசிளங்குமரி’, ‘பாக்தாத் திருடன்’ போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தாலும், இதுபோன்ற ஒரு பேண்டஸி படத்தை எம்.ஜி.ஆரால் கூடத் திரும்பத் தர முடியவில்லை. அந்த படம் பல வகையில் சாதனை நிகழ்த்தினாலும் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முழு நீள வண்ணப்படம் என்ற பெருமையுடன் அழிக்க முடியாத தடத்தை தக்க வைத்துக்கொண்டது என்பதும் உண்மை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

One Comment

  1. Mathivanan V says:

    அருமை யான தொகுப்பு. என் தந்தையுடன் இந்த படம் பார்த்த பழைய நினைவுகள். அவர் பகிர்ந்த பல தகவல்கள் இங்கு தரவுகளாக பதிவு செய்யப் பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கு.??☺️