தேசிய கைத்தறி தின விழா: சிறப்பாக கொண்டாடிய மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி..!

மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பருத்திப்பட்டு, ஆவடி, சென்னையில் ‘தேசிய கைத்தறி தின விழா’ ஆகஸ்ட்  மாதம் 03-ம் தேதி புதன்கிழமை அன்று கல்லூரிக் கலையரங்கத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா நிகழ்ச்சியானது மகாலட்சுமி கல்விக் குழுமத்தின் கல்லூரி நிர்வாக இயக்குநர் திரு.சு.கு. திருக்குமரன் அவர்கள் தலைமையில், அகத்தர மதிப்பீட்டு துறையின் ஒருங்கிணைப்பாளர் திருமதி கே.ரேகா அவர்கள் வரவேற்புரை நல்க,கல்லூரி முதல்வர் முனைவர் இரா.குமுதினி அவர்கள்  கைத்தறி தமிழகத்தில் எத்தகு மதிப்பைப் பெற்றுள்ளது என்பதையும், மாணவிகள் அனைவரும் கைத்தறி உரையினை அணிந்து வருவது உடலுக்கு நன்மையைத் தரும் என்றும் வாழ்விழந்த நெசவாளர்களுக்கு பயன் விளைய மற்றவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று  நயம்பட வாழ்த்துரை வழங்கினார்கள்.

பின்னர் முனைவர் அ. இஸ்பா அவர்கள் சிறப்பு விருந்தினரை முறையாக அறிமுகம் செய்து வைத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக  அமெரிக்கா வாஷிங்டன் டிசி என்னும் பகுதியில் எனர்ஜெல் LLC யின் நிறுவனரும், எய்ம்ஸ் இந்தியா அறக்கட்டளையின் இயக்குநருமாகிய திரு.மகேந்திரன் பெரியசாமி  அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

இவருக்கு கல்லூரி நிர்வாகம் ‘சொல்லின் செல்வர் ‘ விருது வழங்கி கௌரவித்தது. மேலும் அவர்,” செயற்கரிய செய்” என்னும் இருபதங்களை அடிப்படையாகக்கொண்டு இலக்கியம், அறிவியல், வாழ்வியல், சமூகம், சமகால சூழல் ஆகியவற்றை தனது மேம்பட்ட உரையாடல் திறம்பட விளக்கியுரைத்தும், தன்னம்பிக்கை சார்ந்த விழிப்புணர்வு கருத்துகளை மாணவிகளின் மனதில் பதிய வைத்து சிறப்பாக  எடுத்துரைத்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் நமது கல்லூரி சுயதொழில் முனைவோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.திருமதி. கிருஷ்ணவேணி அவர்கள்  மாணவிகளை கொண்டு கைத்தறி ஆடைகள் கண்காட்சியை ஒழுங்கு செய்திருந்தார்கள்.

இதை அனைவரும் பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் கைத்தறி ஆடைகளை விலை கொடுத்தும் வாங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றதோடு, திருமதி வெ.சிவசங்கரி அவர்கள் நன்றியுரை நல்க, நாட்டுப்பண் இசைக்கப்பட்டு விழா இனிதே நிறைவுற்றது. முனைவர் மு. துர்கா அவர்களும், திருமதி. கி.மூ. பண்பரசி அவர்களும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *