தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – உப்புமா மோடி ஆனது ஏன்?

உப்புமா என்று சொன்னால் பெரும்பாலோருக்கு ‘அலர்ஜி’யாக இருக்கிறது. Go back Modi என்பது போல கோபத்துடன் அதனை ட்ரெண்டாக்கி விடுகிறார்கள். உண்மையில், மோடி ஆட்சி அளவுக்கு உப்புமா மோசமானதல்ல. அது நல்ல உணவு. நலமான உணவு.

அரசு மருத்துவமனை செவிலியரான அம்மா காலையிலேயே பணிக்குச் சென்று விடுவார் என்பதால் எங்கள் வீட்டின் சமையல் கட்டு பாட்டி (அப்பாவின் அம்மா) வசம்தான். நான் சென்னைக்கு வரும் வரை அவர்தான் சமையல். சளைக்காமல் மூன்று வேளையும் விறகு அடுப்பில் சமைப்பார். எப்போதாவது உடல்நிலை முடியாவிட்டால், இட்லி-தோசைக்குப் பதில் உப்புமா செய்வார். அதற்கு, ஜீனியைத் தொட்டுக் கொள்ள வேண்டும். உப்புமாவைத் தனியாகத் தின்பதற்கும் பிடிக்காமல், ஜீனியுடனான கூட்டணியையும் விரும்பாமல், டிபன் தட்டைக் கோபத்தோடு வீசியிருக்கிறேன்.

பாட்டி கொஞ்சம் ரெசிபியை மாற்றி, லேசாக வனஸ்பதி சேர்த்து, அதில் ரவையை வறுத்து, தக்காளியை வதக்கி, பச்சை மிளகாய் கடலைப்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய கேரட் துண்டுகளையும் வேகவைத்து, அதனுடன் வறுத்த ரவையை சேர்த்து கொஞ்சம் குழைவாக கொதிக்க வைத்து ‘பாத்’ என்ற பெயரில் கொடுப்பார். சிவப்பு, ஆரஞ்சு, பச்சை, பொன்னிறம் எல்லாம் கலந்த அந்தக் கூட்டணி கொஞ்சம் பிடித்திருந்தது.

பள்ளிக்கு டிபன் பாக்ஸ் எடுத்து வரும் நண்பன் முரளி எனக்கு அமுதசுரபி. அவன் அம்மா சமையலின் உப்பு இன்னமும் என் ரத்தத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில நாட்களில் மதிய உணவாக, உப்புமா மீது தேவையான அளவு ஜீனியைத் தூவிக் கொடுத்து அனுப்புவார். காலையில் தூவப்பட்ட அந்த ஜீனியின் இனிப்புச் சாறு மதியத்திற்கு முன்பாக உப்புமாவின் அடியாழம் வரை இறங்கியிருக்கும். வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே, சத்தம் கேட்காமல் டிபன் பாக்ஸை ஓப்பன் செய்து, இனிப்பும் காரமும் நேர்த்தியான கலவையாக அமைந்த அந்த உப்புமாவை ருசிப்பது தனி அனுபவம்.

சென்னைக்கு வேலைக்கு வந்து, மிகக் குறைந்த வருமானத்துடன் மேன்ஷனில் தங்கி, மெஸ் சாப்பாட்டில் காலம் தள்ளத் தொடங்கிய போது, உப்புமாவை மட்டுமல்ல, வெறும் மாவைக் கொடுத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடும் ஜென் ஞானியாக மாறத் தொடங்கினேன்.

Vegetable Upma Recipe - Rava Upma Recipe - Sooji Upma

அப்போது ஒரு முறை, மேன்ஷன்வாசிகளான பதி அண்ணன் மற்றும் நண்பர்களுடன் கம்பன் எக்ஸ்பிரஸில் திருவாரூருக்கு சென்றோம். நள்ளிரவு நேரத்தில், விழுப்புரம் ஜங்ஷனில் வண்டி நின்றது. பேச்சும் அரட்டையுமாக பயணித்ததால் செம பசி. எலக்ட்ரிக் ரயில் இன்ஜினை மாற்றிவிட்டு, டீசல் இன்ஜினை கோக்கும்வரை நேரம் இருக்கும் என்பதால், பதி அண்ணன் வேறு ஒரு ஃப்ளாட்பாரத்திற்குச் சென்று, சூடான உப்புமா வாங்கிக் கொடுத்தார். அந்த நேரத்திற்கு அது அமுதமாக இருந்தது. . அதன்பிறகு எப்போது கம்பன் எக்ஸ்பிரஸில் ஊருக்குச் சென்றாலும், எந்த ஃப்ளாட்பாரத்தில் ரயில் நின்றாலும், அந்த உப்புமா விற்கும் ஃப்ளாட்பாரத்தைத் தேடிச் சென்று, சுடச்சுட வாங்கிச் சாப்பிடுவது வழக்கமானது.

‘அழகன்’ படத்தில் மம்முட்டியை ஒரு நிகழ்ச்சியில் திடீரென மேடையேற்றி பேச வைப்பார்கள். ஓட்டல் முதலாளியான அவர், தன்னுடைய பேச்சை, திடீர் டிபனான உப்புமாவுடன் ஒப்பிடுவார். But உப்புமாவும் டேஸ்ட்டாக இருக்கும் என்று அவர் சொல்லும்போது, எனக்கு விழுப்புரம் ஜங்ஷனும் முரளியின் டிபன் பாக்ஸூம் நினைவுக்கு வரும்.

Azhagan movie Opening Scene | Azhagan Tamil Movie Scenes | Mammootty |  Bhanupriya | Thamizh Padam - YouTube

திருவாரூரில் நண்பன் வெங்கடேஷின் ரோஸ்லேன்ட்ஸ் ஓட்டலில் ஓர் இரவு நேரத்தில் கடை கட்டும் பொழுதில், டூரிஸ்ட் வேன் வந்து நின்றிருக்கிறது. மொத்தப் பயணிகளுக்கும் பசியாற்றும் வகையில் உப்புமா செய்து பரிமாறியதையும், பசி அடங்கிய நிம்மதியுடன் அவர்கள் நன்றி சொல்லிப் புறப்பட்டதையும் பசியாறிய கும்பகோணத்துக்குகாரர் ஒருவர் சொல்லிக் கேட்டபோது என் நண்பன் ‘அழகனாக’த் தெரிந்தான்.

திருமணமான புதிதில் மனைவிக்கு சமையல் கற்றுக் கொடுத்தேன். எளிய டிபனாகத் தொடங்கியது உப்புமாவில்தான். “இவ்வளவுதானாங்க” என்று ஆச்சரியமாகக் கேட்டவர், எவ்வளவு முறை முடியுமோ அவ்வளவு தடவை உப்புமா செய்து, வீட்டின் தேசிய உணவாக மாற்றினார். அப்புறம், அப்படியே பொங்கல், இட்லி, தோசை என்று ட்ரெய்னிங் கொடுத்து ஒரு லெவலுக்கு கொண்டு வர வேண்டியிருந்தது. அதன்பிறகு, அவரே விதவிதமான டிபன் செய்து அசத்தினார். அவ்வப்போது வெரைட்டியான உப்புமா செய்தும் அசத்துவார்.

இயற்கை அங்காடிக்கு மனைவியுடன் சென்றபோது வரகு அரிசி வாங்கினோம். “இதில் உப்புமா செய்யலாம் தோழர்” என்றார் அருண். வீட்டுக்கு வந்ததும் மனைவி அதனை ட்ரை பண்ணி, என்னை சாப்பிட வைத்து, பரிசோதனையில் பாஸ் ஆனார். சிறுதானிய உப்புமா என்பது இப்போது ஓட்டல்களிலும் திருமணப் பந்திகளிலும் ஸ்பெஷல் மெனுவாக இருக்கிறது.

Breakfast special: Here's how you can prepare a healthy plate of ragi flake  upma | Lifestyle News,The Indian Express

ருசிக்கேற்ற வகையில் உப்புமா வகைகள் பரிமாறப்படும் காலத்தில், பசியுடன் வகுப்பறைக்கு வரும் குழந்தைகளால் பாடத்தைக் கவனிக்க முடியாது என்பதால் மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, பள்ளிகளில் காலை உணவாக உப்புமா, கிச்சடி, பொங்கல் எனப் பரிமாறுகிறது. அரசாணையில் உள்ள அட்டவணையைப் பின்பற்றி தரமான முறையில்-சரியான அளவில்-சுவையான வகையில் உணவு வழங்குவதை உறுதி செய்து, அனைத்துப் பள்ளிகளுக்கும் இதனை விரிவாக்க வேண்டும்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு இலவச உணவு என்பது திராவிட இயக்கத்தின் மூலவரான பிட்டி.தியாகராயர் தொடங்கி வைத்த நீதிக்கட்சி ஆட்சியின் திட்டம். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் அது மதிய உணவுத் திட்டமாக மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டது. பின்னர், எம்.ஜி.ஆரின் சத்துணவில் கலைஞரின் முட்டை சேர்ந்தது போல, காலை சிற்றுண்டியின் மெனுவும் திராவிட மாடல் ஆட்சியில் வலுவேறலாம்.

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிறது தமிழ் இலக்கியம். உப்புமா கொடுப்பவரும் உயிர் கொடுப்பவரே!

Leave a Reply

Your email address will not be published.