செஸ் ஒலிம்பியாட்: பிரம்மாண்ட கலைநிகழ்ச்சிகள்

நேரு உள் விளையாட்டு அரங்கில் முதற்கட்டமாக தேசிய கீதம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான கலை நிகழ்ச்சிகள் தொடங்கின.

சர்வதேச வீரர்களின் அணிவகுப்பில் வீரர்களுக்கு முன்னதாக மாவட்ட அளவில் செஸ் போட்டிகளில் வென்ற அரசுப்பள்ளி மாணவர்கள் நாடுகளின் பெயர் கொண்ட பதாகைகளை தாங்கிச் சென்றனர்.

முதற்கட்டமாக மாமல்லபுரம், செஸ் ஒலிம்பியாட் அடையாள சின்னத்தை பிரதிபலிக்கும் குதிரை சின்னமான ‘தம்பி’ மற்றும் செஸ் போட்டி நடக்கும் அரங்கம், பிரதமர் மோடியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட உருவங்கள் மணற்சிற்பம் மூலம் வரையப்பட்டன.

இதனையடுத்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் தமிழ்நாடு வரலாறு தொடர்பான நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்த நிகழ்த்துக்கலை நடைபெற்றது. இதில் முப்பரிமாண வடிவில் காட்சிகள் விவரிக்கப்பட்டன.

கமல் ஹாசன் குரலில், “கல்தோண்றா மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தகுடி என்ற வாசகத்துடன்” தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவசாயம் முதல் கடல் கடந்து வணிகம் செய்தது வரை பல்வேறு தமிழர்களின் பாரம்பரியங்கள் விளக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து லிடியன் நாதஸ்வரத்தின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்த லிடியன், அதன் பின்னர் இரண்டு கைகளிலும் ஒரே நேரத்தில் இரண்டு பியானோக்களை வாசித்து அசத்தினார். ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய பாடல்களை லிடியன் ஒரே நேரத்தில் வாசித்தார். இதனை வெளிநாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் ஆச்சர்யத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

தமிழர்களின் கலையை பறைசாற்றும் விதமாக தெருக்கூத்து, கரகாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனையடுத்து உலக அளவில் ட்ரெண்டான ‘எஞ்ஜாய் எஞ்சாமி’ பாடலை திதீ பாட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

செஸ் ஒலிம்பியாட் விழாவில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக கடற்கரை கோயில் வெண்கலை சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இறுதியாக உலக செஸ் சாம்பியன் விஸ்வநாத் ஆனந்த் செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மேடைக்கு கொண்டு வந்து பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, பிரக்ஞானந்தா செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்று நிகழ்ச்சியைத் தொடங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.