விஸ்வரூபம் எடுக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்; வசமாக சிக்கிய வாட்ஸ்அப் குழுவினர்… அட்மின் உட்பட 10 பேரிடம் தீவிர விசாரணை!

ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி டிஎண்:55 என்று வாட்ஸ் அப் குழு அமைத்து 400 நபர்களை அந்த குழுவில் சேர்த்து மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு புதுக்கோட்டையில் அணி திரள்வோம் என்று பதிவிட்டு வாட்ஸ்அப் குழுவின் அட்மின் ஆக செயல்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் சிக்கம்பட்டி சேர்ந்த ஐயப்பன் மற்றும் அவருக்கு உறுதுணையாக இருந்த மாங்கோட்டையை சேர்ந்த மணிராஜா உள்ளிட்ட அந்த குழுவில் உறுப்பினர்களாக இருந்த பத்துக்கும் மேற்பட்டோரிடம் புதுக்கோட்டை போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை தொடர்ந்து அவர் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மாணவி படித்த தனியார் பள்ளியை கடந்த 17ம் தேதி சூறையாடினர். மேலும் போராட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் ஒருங்கிணைந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது. இதனையடுத்து போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களை வீடியோ ஆதாரத்தைக் கொண்டு 200-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜஸ்டிஸ் பார் ஸ்ரீமதி டிஎண்: 55 என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு அதில் 400க்கும் மேற்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். மேலும் அந்த குழுவில் ஸ்ரீமதிக்காக புதுக்கோட்டையில் அணி திரள்வோம் நீதி கேட்போம் என்று பதிவுகளை பகிர்ந்தது புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொள்கையில் புதுக்கோட்டை மாவட்டம் சிக்கம்பட்டியை சேர்ந்த ஐயப்பன் என்பவர் அந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆக செயல்பட்டதும் புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மணிராஜா என்பவர் போராட்டம் குறித்து பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்ததும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து போலீசார் வாட்ஸப் குழுவின் அட்மினாக செயல்பட்ட ஐயப்பன் அவருக்கு உடந்தையாக இருந்த மணிராஜா உள்ளிட்ட வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக இருந்த பத்துக்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.