HR உன்ன கூப்பிடுறார்…(16)

தொழிலாளர் நலன் அவசியமா?

ஒவ்வொரு தொழிலும் மேம்பட மேம்படத்தான் பொருளாதாரம் நல்லதொரு சிறப்பான நிலையை அடையும், அப்படி ஒரு நிலையை எட்ட அடித்தளமாக இருப்பது தொழிலாளர்கள்தான், எந்த நிறுவனம் தொழிலாளர் நலனில் அக்கறை காட்டுகிறதோ அந்த நிறுவனம் நிச்சயம் நல்லதொரு உயர்வினை அடையும். தொழிலில் வெற்றிபெற்று உச்சத்தை அடைந்த அனைவரும் கூறுவது “எனக்குக் கிடைத்த நல்ல தொழிலாளர்களால்’ தான் இந்த உயர்வை எட்ட முடிந்தது என்று. இப்படிப்பட்ட தொழிலாளர் நலனை நிறுவனங்களில் உறுதிப்படுத்துவதில் மனிதவளத்துறை முக்கிய பங்காற்றுகிறது.

10 Best Qualities Of A Good Employee

அரசின் தொழிலாளர் நலத்துறையும் சீரிய முயற்சிகளை எடுத்து, தொழிலாளி மற்றும் முதலாளி எனும் இருபிரிவினருக்கு இடையே சச்சரவுகள் சண்டைகள் வரும்போது சரியான மற்றும் சுமுகமான முறையில் தீர்வுகாண முயற்சிக்கும். ஏனெனில் இந்த இருவருமே பொருளாதாரத்திற்கு அச்சாணிகள், இது முறிவுபடாமல் சென்றால்தான் நல்லது. அப்படியே பிரச்சனைகள் வரும்போது அதை சரியாக அணுகி தீர்வுகாணும் முயற்சியில் இறங்கி செயலாற்றுவது HRகளின் முக்கியப்பணி.

பிரச்சனைகளைக் கையாளும்போது எண்ணியதெல்லாம் பேசுவதைவிட எண்ணி எதையெல்லாம் பேசுவது எனப் புரிந்து கொண்டு நடந்தாலே பாதி பிரச்சனைகள் காணாமல் போய்விடும். வார்த்தைக் கவனம் அதிகம் தேவைப்படும், இடம் பொருள் சூழல் அறியாது நம்மை மீறி வெளிப்படும் வார்த்தைகள்தான் மிகப்பெரிய தீர்க்க இயலா சிக்கல்களை உண்டாக்கிவிடுகிறது.

மனிதவளத்துறைனர் தொழிலாளர் நலன் சார்ந்து எடுக்கும் முயற்சிக்கு நிச்சயம் நல்லதொரு வரவேற்பு கிடைக்கும், அதேநேரத்தில் பிரச்சனைகள் சார்ந்து அவர்களை அணுகும்போது நிறுவனத்தினுடைய நிலையாணைகள் (Standing Orders), தொழிலாளர் நலன் சார்ந்த அரசாணைகள் (GO – Government Orders) போன்றவற்றை நன்றாகத் தெரிந்து, மேலும் அண்மையில் இது தொடர்பாக அரசும், நிறுவனமும் வெளியிட்டுள்ள கொள்கைகளையும் (Policy) மனதில் பதித்து செயல்படுவது சிறப்பான அணுகுமுறையாக இருக்கும், ஏனெனில் பிரச்னையோடு சண்டையிடும் நோக்கத்தில் வருகிறவர்கள் நம்மை விட அதிகமாக, ஆழமாக இவையனைத்தையும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

Business Cartoon Images | Free Vectors, Stock Photos & PSD

என்னதான் நாம் அதிகாரத்தில் உயர் இடத்திலிருந்தாலும் தொழிலாளர் ஆற்றல் என்பது அளப்பெரியது அந்த ஆற்றலை முறையாகக் கையாளாகாமல் ஏனோதானோவென்று இருந்த எத்தனையோ HRகள் வேலையிழந்து அல்லது தாக்குதலுக்கு உள்ளான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஆதலால் அந்த ஆற்றலை நாம் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது. கும்பல் அல்லது கூட்ட மனநிலை மிகவும் ஆபத்தானது மேலும் அது எதையும் செய்யத் தயாராக மாறிவிடும் (The mob mentality is very dangerous and ready to do for anything). நிலவர நிலையைச் சரிவர தெரிந்திருக்காவிட்டால் கலவர நிலையை அடக்க நமக்கு ஆற்றல் போதாது, இது எல்லா இடத்திற்கும் பொருந்தும். அந்த நிலவர நிலையை சரிவர அறிந்துகொள்ள ஒவ்வொரு நிறுவனத்திலும் Whistleblower இருப்பார்கள், யார் இந்த Whistleblower? பிரச்சனைகளை முன்கூட்டியே அறிந்து அதன் உண்மை நிலையை நமக்கு தெரியப்படுத்துபவர்கள் தான் இவர்கள்.

அரசின் செயல்பாடுகளில் இவர்களை உளவுத்துறை என்பார்கள். நிறுவனத்துக்கு அனுசரணையாக இருந்து ஒத்து ஊதுபவர்கள் அல்லது போட்டுக்கொடுப்பவர்கள் எனும் கொச்சையான முறையில் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டாம். முதல் அல்லது இரண்டாவது முறையிலேயே அவர்களது பேச்சில் இருக்கும் உண்மைத்தன்மை தெரிந்துவிடும். பேச்சில் உண்மைத்தன்மை இல்லாது யாரையாவது பழிவாங்கவோ அல்லது காழ்ப்புணர்ச்சி அடிப்படையிலோ அவர்கள் (Whistleblower-இடித்துரைப்பவர்கள்) செயல்பட்டால் பின்னடைவு அவர்களுக்குத்தான்.

The Personal Toll of Whistle-Blowing | The New Yorker

நீங்கள் சொல்வதைப்பார்த்தால் தொழிலாளர்களை மறைமுகக் குற்றவாளிகள் போல் சித்தரிப்பதாக உள்ளது என உங்களுக்கு கேட்கத்தோணும். கோவிலுக்கு நாம் முழுமனதோடு சாமி கும்பிடப்போனாலும் அங்கு நமக்குத் தெரியாமல் இருக்கும் திருடர்களை நினைத்து சற்று உள்ளூர பயம் இருக்கத்தானே செய்யும், அதுபோல்தான் இதுவும். ஒரு நிறுவனம் நன்றாக செயல்பட தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியம், அந்த ஒத்துழைப்பை சீர்குலைக்கும் செயலில் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை (Disciplinary Action) எடுத்து அதை முறைப்படுத்துவது மனிதவளத்துறையில் உள்ளவர்களின் தலையாய கடமை.

தொழிலாளர் நலனை உறுதிப்படுத்துவதில் உங்களுக்கு ஏற்பட்ட சவால்கள் ஏதேனும் உண்டா? என போன வாரமே கேள்வி கேட்டு இந்தத்தொடரை தொடர்ந்து படிக்கும் வாசகர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், ஒன்றா ரெண்டா ஆசைகள் எனும் பாடலை மனதுக்குள் ஓடவிட்டு, ஒன்றா இரண்டா? ஏராளம், சொல்லலாம் என்றேன். அடுத்தவாரம் அதைபற்றிப் பேசலாம்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply to K.Victor Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. Anyone can easily understand the basics by reading your article and make them to read in depth from people and books. Go ahead….

  2. சு சுசிலா says:

    பல நிறுவனங்கள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர முடியாமல் திணறுவதும் பேச்சு வார்த்தை தோல்வி அடைவதும் தொழிலாளர் நலன் குறித்து சிறிதேனும் அக்கறை இல்லாமல் போவது தான் . குறைந்த பட்சம் பணியாளர் நலன் மீது அக்கறை காட்டுவது போல் பேசவாவது வேண்டும். அப்போது தான் பணி சிறப்புறும்