தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – கவி.கா.மு ஷெரீப்

இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள சுன்னாகம் என்னும் ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பெற்ற தன் தாயைக் கவனிக்காமல் புறக்கணித்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஒரு நாள் தேநீர் கடை ஒன்றில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த போது கவியின் “அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை அவர் அடி தொழ மறுப்பவர் மனிதரில்லை மண்ணில் மனிதரில்லை” என்ற பாடலை அங்கு ஒலிக்கக் கேட்டு அதன் காரணமாக மனம் திருந்தி தாயைப் போற்ற ஆரம்பித்தாராம். இந்தச் சம்பவத்தை “அறுபது ஆண்டுகள் கால திரைப்படப் பாடல்கள்” என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் அதன் ஆசிரியர் சிலோன் விஜயேந்திரன்

அரிதினும் இனிதான தமிழ்க்காதலர். தமிழுக்கும் தமிழர்க்கும் ஊறு என்றால் பொங்கி எழும் சிங்கக்கவி என பெயர் பெற்றவர். இஸ்லாமியர் என்ற போதும் புலால் உணவை மறுத்து சைவராகவே வாழ்ந்தவர் .

வழக்கமாக எதற்கும் எவருக்கும் கவலைப்படாத ஜெயகாந்தன் காமு ஷெரீப்பை சந்திக்கும் போது அவர் மீதுள்ள மரியாதையால் புகைக்க மறுத்து அதை நண்பர்களிடமும் சொல்லி பெருமைப்பட்டவர்.

கவி.கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா | கவி.கா.மு.ஷெரீப்

கவி கா.மு. ஷெரீப் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பக உரிமையாளர், அரசியல்வாதி, ஆன்மிகவாதி எனப் பன்முகத் தன்மை கொண்டவர்.மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர், கருணாநிதி இரண்டு முதல்வர்களுக்கு முதல் வாசல் அமைத்துக்கொடுத்த மந்திரிகுமாரியின் வெற்றியில் மிக முக்கிய பங்களிப்பு செய்தவர் தான் கவி. க.மு.ஷெரீப் . இன்னும் சொல்லப்போனால் அந்த படம் உருவாக முக்கிய காரணியாக இருந்தவர் என்று கூட சொல்லலாம்

சினிமாவுக்கு வருவதற்கு முன் திருவாரூரில் நாடகம் போடுவதில் முனைப்பாக இருந்தார் கருணாநிதி . அப்படித்தான் குண்டலகேசி’ காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ‘மந்திரி குமாரி’ என்ற நாடகத்தை எழுதினார் .கும்பகோணத்திலே அரங்கேற்றப்பட்ட அந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல நாட்கள் கும்பகோணத்தில் நடத்தப்பட்ட அந்த நாடகத்தைப் பற்றி கவிஞர் கா.மு.செரீப், மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரத்திடம் கூற டி.ஆர்.சுந்தரம், இயக்குனர் எல்லிஸ் ஆர்.டங்கன் ஆகிய இருவரும் கும்பகோணம் சென்று அந்த நாடகத்தைப் பார்த்தனர். நாடகம் அவர்கள் இருவருக்குமே மிகவும் பிடித்திருந்தது. அதைத் தொடர்ந்து கலைஞரை சந்தித்து அந்த நாடகத்தைப் படமாக்கும் உரிமைகளை வாங்கி வருவதற்காக கா.மு.செரீப்பை திருவாரூருக்கு அனுப்பி வைத்தார் டி. ஆர். சுந்தரம் . இக்காலத்தில் ஜூபிடரில் கலைஞர் ராஜகுமாரி படத்தில் பணி செய்து வெளியீட்டுக்காக காத்திருந்தர். ராஜகுமாரியில் அவருக்கு உரித்தான வசனம் எனும் முழுமையான தகுதி அட்டை கிடைக்கவில்லை. இச்சூழலில் தான் மந்திரிகுமாரி கதைக்காக கா மு ஷெரீப் மூலம் முழுமையான கதை வசனம் என்ற தகுதி அவருக்கு கிடைத்தது. அப்படியாக கா மு ஷெரிப் அவர்கள் செய்த இந்த காரியத்தால் மீண்டும் எம் ஜி ஆர் கருணாநிதி ஆகியோரின் வாழ்க்கையில் முக்கிய திருப்பம் உண்டானது என்பது அறியப்படாத வரலாறு

File:Manthiri Kumari 1950 film.jpg - Wikimedia Commons

11.08.1914 அன்று கீழத் தஞ்சை மாவட்டம் அபிவிருத்தீஸ்வரம் என்ற கிராமத்தில், காதர்ஷா இராவுத்தர்-பாத்துமா அம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார் ஷெரீப். அவர் முறையாகப் பள்ளிக்கூடம் சென்று பயின்றவரல்ல. 5 வயது முதல் 14 வயதுவரை சொந்தமாகவே ஆசிரியர் ஒருவரிடம் தமிழ் கற்றார். தந்தையாரின் தூண்டுதல் காரணமாகத் தமிழ் இலக்கணத்தையும் இலக்கியங்களையும் கற்றார். இளமையிலேயே அவர் கவிதை இயற்றும் திறன் பெற்றிருந்தார்.

அவரது முதல் கவிதை 1933-ம் ஆண்டு பெரியாரின் குடியரசு நாளிதழில் வெளிவந்தது. அக்கவிதை பெரியாரைப் போற்றி எழுதப்பட்ட கவிதை. ஆரம்ப காலத்தில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். இவரது சிறுகதைகள் ஆனந்த விகடனில் வெளிவந்துள்ளன. காதல் வேண்டாம், காதலும் கடமையும், கனகாம்பரம் ஆகியன இவரது சிறுகதைத் தொகுப்புகளாகும். நல்ல மனைவி, விதியை வெல்வோம், தஞ்சை இளவரசி ஆகிய புதினங்களையும் எழுதியுள்ளார்.

1934-ம் ஆண்டில் கவிஞர் மண வாழ்க்கையைக் கண்டார். அவரின் மனைவி முகம்மது பீவி அவர்கள், உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளிலேயே மரணித்துப் போய்விட்டார். மனைவியின் பிரிவில் சில காலம் கழித்த கவிஞர், 1940-ம் ஆண்டில் ஜமீலா பீவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஒன்பது ஆண்களும், இரண்டு பெண்களும் என பதினோரு பிள்ளைகளுக்குத் தந்தையாக விளங்கிய கவிஞர், பன்னிரண்டாவதாக ஒரு வளர்ப்பு மகளையும், எடுத்து வளர்த்தினார்இவள் வேறு யாருமல்ல, கவிஞருடைய நண்பரின் மகள்தான். இந்த நண்பர், ஒரு பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர்.

கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு, 1946-ம் ஆண்டில் வெளியானது. இது “ஒளி” எனும் தலைப்பைப் பெற்று, ஒளி வீசியதை, தமிழ் இலக்கிய உலகம் என்றைக்கும் மறைந்து போய் விட முடியாது. இந்தக் கவிதைத் தொகுப்பிலும், கவிஞரின் விடுதலை வேட்கையை நம்மால் காண முடியும். இதில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள், விடுதலை கீதங்களாக ஒலித்துக் கொண்டுள்ளன. பாட்டில் புரட்சி செய்த பாரதியைப் போற்றும் நம் தமிழ் மக்கள், கவிஞரின் சுந்திர கீதங்களை சுவாசிக்க மறந்து போய்விட்டனர்.

தத்துவ பாடலாசிரியர் என அறியப்படுகிற கண்ணதாசனுக்கெல்லாம் மூத்தவரும், வழிகாட்டியுமாக விளங்கியிருக்கிறார், கவிஞர் அவர்கள். இதனைக் கண்ணதாசனின் ஒரு கூற்றிலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.

“அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே, அவரின் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டது. “ஒளி” எனும் தலைப்புடைய அந்தத் தொகுதியை, நான் சுவைத்திருக்கிறேன்”என்கிறது கவியரசர் கண்ணதாசனின், காமு ஷெரீப் அவர்களைப் பற்றிய கூற்று.

Kannadasan found Krishna within - The Hindu

இதனைத் தொடர்ந்து கவிஞர் கா.மு. அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் இயற்றி, காலத்தால் இன்றளவும் தனித்துவத்தோடு விளங்கும் பாடல்களில் சில:

”சிட்டுக் குருவி சிட்டுக் குருவி செய்தி தெரியுமா?, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போகுமா?, வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, அன்னையைப் போல ஒரு தெய்வமில்லை, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?, பூவா மரமும் பூத்தது பொன்னும், மணியும் விளைந்தது, வானில் முழு மதியைக் கண்டேன். வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய்” போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம்.

அலிபாபாவும் 40 திருடர்களும் எனும் படத்தில் இடம் பெற்ற, ‘மாசிலா உண்மைக் காதலே’ எனும் பாடலுக்கு பல்லவியை அமைத்துக் கொடுத்தவர் கவி அவர்களே. இந்தப் பாட்டின் சரணத்தை, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் அமைத்திருக்கிறார். இதுபோக, சில பாடல்களில் மருதகாசி அவர்களோடு சேர்ந்தும் வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அவர்கள்.

திரைத் துறையிலிருந்தும் வறுமை நீங்காத கவிஞர், திரைத் துறையிலிருந்து திடீரென வெளியேறினார். இனிமேல் சினிமாவில் பாடல் எழுதப் போவதில்லை என அறிவிப்பு செய்தார். இதனைச் சொல்லுகிறபோது அவர், புகழின் உச்சியில் இருந்திருக்கிறார்சினிமா உலகில் சுற்றியடித்துக் கொண்டிருந்த போதே கவிஞர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டுத்தான் கொண்டிருந்தார்.

ஆங்கில மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும், தமிழரசுக் கழகத்தின் முன்னனி தலைவராய் இருந்து சுழன்றிருக்கிறார் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்.

சென்னையை ஆந்திராவிலிருந்து மீட்டெடுத்த போராட்டமாகட்டும், கன்னியாகுமரியைக் கேரளத்திடமிருந்து காப்பாற்றிய போராட்டமாகட்டும், திருத்தணியைத் தமிழகத்திற்குத் திருப்பிய போராட்டமாகட்டுமென எல்லை மீட்பு போராட்டங்களில் வீரியத்தோடு போராடியும் சிறைகளைக் கண்டவராகவும் இருந்திருக்கிறார் கவிஞர்.

தை மாதப் பிறப்பன்று பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் வென்று காட்டினார்கள் தமிழரசுக் கழகத்தினர். இந்தக் கோரிக்கைகாவும், கவிஞர் பலவாறு ம.பொ.சி அவர்களோடு தோள் நின்று உழைத்திருக்கிறார்.

இதேபோல, “மெட்ராஸ்” என்று ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழரசுக் கழகம் தீர்மானம் போட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முற்றுகைப் போராட்டங்களை நடத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், ம.பொ.சி கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக ம.பொ.சி ஸ்தானத்தில் கவிஞர்தான் அதிகமாகத் தலைமை வகிப்பார். அப்படி இந்தப் போராட்டத்திலும் கவிஞரே தலைமை வகித்து, தொண்டர்களை தினந்தோறும் சரியாக அணிவகுத்துக் கொண்டு போராடினார். அப்படிப் போராடி, இதிலும் சிறைகளைக் கண்டார் கவிஞர்.

இந்தியா சுதந்திரத்திலும் அடைந்தற்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு “தியாகி பென்ஷன்” கொடுக்கப்பட்டது. அப்படி இது கவிஞருக்கும் அறிவிக்கப்பட்டபோது, கவிஞர் அதனை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். இதேபோல கவிஞரின் கவித்துவத்தைக் குறித்து,   “தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டு கொண்டேன். அவருடையப் பாக்களை படித்து, அதனின்றும் இன்பத்தைக் கங்கு, கரையின்றி அனுபவிப்பீர்களாக.”

என்று 1946-ம் ஆண்டில் பாரட்டியுள்ளார், அறிஞர் வ.ரா அவர்கள்.

“கலைமாமணி விருது பெற்ற கவிஞர். அருந்தமிழ் இலக்கியங்கள்

இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்” என்று போற்றுகிறார், சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.

இப்படிப் பலராலும் பற்பல பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார் கவிஞர். அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.

இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான கவிஞர், 07.07.1994-ம் ஆண்டில், சென்னை மாநகரில், தனது இறுதி நாளைக் கண்டார். தமிழ் மொழியின், தமிழ் நாட்டின் அடையாளங்களுள் ஒருவரான கவிஞர், அன்றைய தினத்தில் காலமாகிப் போனார். தமிழினத்தின், தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற ஓர் விடுதலைக் குரல் அன்று ஓய்ந்து போனது.

Leave a Reply

Your email address will not be published.