புத்தகப் பரிந்துரை : “மீசை என்பது வெறும் மயிர்”
“மீசை என்பது வெறும் மயிர்” ஆமா. இதுதான் அந்த நாவலோடா பெயர். என்ன? ‘மயிர்’ ங்குற வார்த்தையெல்லாம் தலைப்புல இருக்குற ஒரு புத்தகத்தை படிக்கத் தான் வேண்டுமா? எனக் கேட்டால். வேண்டாம் என்பதே பதில். என் பதில் இல்லை. இந்த நாவலின் ஆசிரியர் ஆதவன் தீட்சண்யாவின் பதில். ஆமா. மயிரை, மயிர் என்று தானே கூற முடியும், அதுமட்டுமில்லாமல் அது தான் தமிழ் சொல்லும் கூட. மனித உடலின் சில பாகங்களை கெட்ட வார்த்தைகளாக்கி அருவருக்கத் தக்குக மாற்றியுள்ள உயர் வகை தத்துவ கோட்பாடுகளிலிருந்து மயிரும் தப்பவில்லை. “மயிர் தானே எல்லாருக்கும் முக்கியம். அது தான் நீளமாக வளர வேண்டும். அது தான் கொட்டக் கூடாது. அதுதான் நரைக்கக் கூடாது. அதை ஒழுங்குபடுத்தவும், அழகுபடுத்தவும் அத்தனை மெனக்கெடல்கள்.
ஆனால், அது கெட்ட வார்த்தையா?” எனக் கேட்கும் ஆதவன், “மயிர் என்ற வார்த்தை அட்டைப் படத்தில் இருப்பதை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், அந்த புத்தகத்தை வெளிப்படையாக கையில் வைத்துக்கொள்ள தயங்குகிறவர்கள், இந்த புத்தகத்தின் உள்ளடகத்தை படிக்க தெம்பற்றவர்கள். எனவே அவர்கள் படிக்க வேண்டாம்” எனக் கூறுகிறார். அதையே நானும் வழி மொழிகிறேன்.
சரி. விசயத்துக்கு வருவோம். “மீசை என்பது வெறும் மயிர்” என்ற தலைப்பை படித்தவுடன் “நா மீசை வச்ச ஆம்பளை டி” மாதிரியான தமிழ் சினிமா டைலாக்குகள் காதுகளின் கதவைத் தட்ட, ஏதோ பெண்ணியம் பேசும் புத்தகம் என்று நினைத்து விட்டேன். ஆனால், ஆதவன் நம்மை கூட்டிச் செல்வது இந்தியாவின் ஆன்மாவிடம். இந்த நாவல் முழுக்க அவர் எதைப் பற்றி பேசுகிறார்? ஏன் இந்த நாவலை படிக்க வேண்டுமென கூறுவதற்கு முன்னால், ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் புத்தக அறிமுகத்தைப் பற்றி கிண்டலாக ஆதவன் கூறியதை உங்களுக்கு சொல்கிறேன்.
“பொதுவாக புத்தகத்தை அறிமுகம் செய்து பேசுபவர்கள் செய்வது இரண்டு விஷயம்.
- புத்தகத்தைப் பற்றி வரிவரியாக பேசி, அதற்கு கோனார் உரை போட்டு, அதான் எல்லாத்தையும் இவரே சொல்லிட்டாரே? இனி அந்த புத்தகத்தை வாங்கணுமா? என நினைக்க வைப்பது.
- புத்தகத்தை படிக்காமல், ஆசிரியர் நல்லவர், அப்பேர்ப்பட்டவர் என்று எதையாவது பேசிவிட்டு செல்வது”
ஆக. ஆதவனின் புத்தகத்தைப் பற்றி எழுதும் இந்த மதிப்புரையில் மேற்கூறிய இரண்டு வழிகளையும் பயன்படுத்தக் கூடாத கட்டாயத்தில் நான் உள்ளது உங்களுக்கு புரிகிறது தானே?. எனவே புத்தகம் தொட்டுச் செல்லும் இடங்களையும், ஏன் அதை படிக்க வேண்டும் என்று மட்டும் கூறுகிறேன்.
சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்தைப் போலவே, இதுவும் ஒரு non-linear வகைமையைச் சார்ந்தது தான். “பதிப்பக அடிமைகள் பலரும் தண்டி தண்டியாக எழுதி வண்டி வண்டியாக ஏற்றிக் கொண்டிருக்கும் காலம்” என்று நாவலில் வரும் அவரின் கூற்றிற்கு இணங்க தலையணை ஏதும் தயாரிக்காமல் வெறும் 176 பக்கங்களை மட்டுமே இந்த நாவல் கொண்டிருக்கிறது.
சந்திப்பு, நேர்காணல், நாவல் சுருக்கம் என்றுள்ள இப்புத்தகம் எனக்கு தெரிந்த வரையில் நாவல் வடிவத்தில் ஒரு புதியவகை. மொழிபெயர்ப்பின் அரசியல், இரண்டாம் உலகப் போர், உலகம் முழுவதும் போர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக புத்தகங்கள் அழிக்கப்படுவது, ஈஜின் நிலவரை நூலகம், பிடல் காஸ்ட்ரோவின் சுருட்டு, தனுஷ்கோடி புயல், இலங்கையின் வளர்ச்சி சித்திரத்தைத் தீட்டிய தமிழர்களின் ரத்தம், இலங்கை பூர்வீக தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களிடையேயான அரசியல், முடியை சவரம் செய்யும் நாவிதர்களுக்கும் மருத்துவத்திற்கும் உள்ள சம்பந்தம் இப்படி விரியும் இந்நாவலின் மையச்சரடு, இந்தியாவை புராண காலம் தொட்டு, இன்றுவரை இறுக்கிக் கட்டி வைத்துள்ள மந்திர கயிறுதான். என்ன அது?
“நாடு திரும்பா எழுத்தாளர் வரிசை: நந்தஜோதி பீம்தாஸ்” என புத்தக முகப்பட்டையில் உள்ளது. அப்படியானால் இது மொழிபெயர்ப்பு புத்தகமா? யார் அந்த பீம் தாஸ்? போதாக்குறைக்கு இதில் சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி மற்றும் ஆண்களற்ற நகரம் என்று இரு சிறு கதைகளும், ஒரு fantasy storyயும் வேறு உள்ளது. சரி. இதற்கும் “மீசை என்பது வெறும் மயிர்” என்ற அந்த தலைப்பிற்கும் என்ன சம்பந்தம்? எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள இபுத்தகத்தை பற்றி விக்கிபீடியாவை தடவாமல், you tube ஐ அணத்தாமல், புத்தக அறிமுக உரைகளில் குறிப்பெடுக்காமல் அதைப் படிப்பது ஒன்றே வழி. அதை நீங்களே வாசிக்கும் பொழுது வரும் உணர்வை, புரிதலை, அனுபவத்தை, அழுகையை என் மதிப்புரை கெடுத்துவிடக்கூடாதுதென்பதே இத்தனை திரைச்சீலை வரிகளுக்கும் ஒரே காரணம். நிச்சயம் வேறெந்த புத்தகத்தையும் படித்தபோது கிடைக்காத ஒரு அனுபவம் இதில் காத்திருக்கிறது. Don’t miss this book.
கொஞ்சம் பொறுங்கள். உடனே புத்தகத்தை ஆர்டர் பண்ண மொபைலை தேட வேண்டாம். உங்கள் ஆர்வத்தை மேலும் கூட்ட, புத்தகத்தின் சில வரிகளை கீழே சொல்கிறேன். அதையும் படித்துவிட்டு செல்லுங்கள். (அந்த வரிகள் எந்த வகையிலும் புத்தகத்தின் கதையை வெளிப்படுத்தி விடாது. அதாவது, ட்ரெயிலர், டீசர் வகைகளைச் சார்ந்தது).
🔅இருக்கும் வெளிச்சம் குறைவென்றாலும் எல்லாமும் கண்ணுக்கு தெரியும் தானே?
🔅பிறந்து வளர்ந்த மண் காலில் ஒட்டிக்கொள்கிறது மனதிலோ உதிர்ந்துகொண்டிருக்கிறது.
🔅தலைக்கு விலை வைத்து கொல்லப்பட்ட பௌத்தர்களின் தோலை உரித்துப் போர்த்திக்கொண்டதால் கிடைத்திருக்கும் அகிம்சை வேடத்தைக் கலைத்து இந்தியாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் கடப்பாடு கொண்ட எழுத்து.
🔅போர் முடிந்து விட்டது என்று சொல்வது கூட, போரின் ஒரு பகுதிதான்.
🔅 தேசியத்தின் பெயரால் அழிவுகள் நடக்கும்போது, முடிந்த மட்டிலும் தேசத்துரோகியாக வாழ்வது அவசியம்.
🔅வாழ்க்கை எனும் கடலை ஊறஊற குடித்தவர்போல் அமைதியுற்றிருக்கும் அவருக்குள் தான் எத்தனை கொந்தளிப்புகள்.
🔅மனிதர்களுக்கு பெயர் எதற்கு?
🔅எவ்வளவு பெருமிதம் கொண்டதாய் இருந்தாலும் ஒரு ரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட பிறகு ஓர் அழுகிய பிணமாகி விடுகிறதல்லவா கடந்தகாலம்?
🔅புனைவு என்பது இரண்டு அட்டைகளுக்கு நடுவே தொடங்கி முடிவதல்ல. அது முன்னட்டையின் மேல் நுனியிலே தொடங்கி பின்னட்டையின் ஈற்றிலே முற்று பெறுகிறது.
அப்றம் என்ன? ஆரம்பிக்கலாமா?