திமுக மூத்த அமைச்சரை காப்பாற்றிய சித்த மருத்துவர்… அமைச்சர் கே. என்.நேரு பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

KN Nehru

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் சார்பில் சித்த மருத்துவத்திற்கு முன்னுரிமை அளித்து வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மண்டபத்தில் அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கே.எஸ். சுப்பையா பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாக துறை
அமைச்சர் கே. என்.நேரு கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவத்தில் சாதனை புரிந்த சிறந்த மருத்துவர்களுக்கு விருது வழங்கி மாநாடு மலரை வெளியிட்டு பேசினார். நான் சித்த மருத்துவத்தின் சிறப்பினை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்க விரும்புகிறேன்.

தற்போது மூத்த அமைச்சராக இருக்கும் துரைமுருகன் கீழே விழுந்ததில் அவரின் இடுப்பில் வலி ஏற்பட்டது. இதை அடுத்து சென்னையில் அலோபதி டாக்டரை சந்தித்து கேட்டபோது ஊசி போட்டால் ஆறு மாதத்துக்கு மரத்துப் போய்விடும். பின்னர் வழி சரியாகிவிடும் என தெரிவித்தார்கள். அதைத்தொடர்ந்து அலோபதியை தவிர்த்து விட்டு வேலூரில் உள்ள ஒரு சித்த மருத்துவரை சென்று பார்த்தார். அந்த நம்ம ஊர் மருத்துவர் அடிபட்ட இடத்தில் ஒரு தைலத்தை தடவி நாளைக்கு சரியாகிவிடும் என்று கூறி அனுப்பினார். மறுநாள் அமைச்சரும் தமது வேலைக்கு வந்து விட்டார்.

ஆகவே நிபுணத்துவம் உள்ள சித்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உரிய அனுமதி பெற்று மருத்துவம் செய்ய முன்வந்தால் அதற்குரிய அனுமதியை தமிழக முதல்வர் தருவார்.

தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் சுகாதாரத் துறைக்கும் கல்வித்துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருவது அனைவருக்கும் தெரியும். திருச்சியில் ஒரு சித்த மருத்துவக் கல்லூரியை கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறேன். இதற்கான அனுமதியை முதல்வர் இந்த ஆண்டு வழங்குவார் என நம்புகிறேன். 30 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் செயல்பாடுகளை பார்த்து வருகிறேன்.சித்த மருத்துவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் உட்பட தமிழகம் முழுவதும் இருந்து சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோ, யோகா ,அக்குபஞ்சர் மற்றும் இயற்கை முறை பட்டதாரி மருத்துவர்கள் பாரம்பரிய மருத்துவர்கள் திரளாக பங்கேற்றனர்…

Leave a Reply

Your email address will not be published.