கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“என்ன மொசக்குட்டி… ரொம்ப கசங்கிப்போயி வந்திருக்க… எதாவது புதுப்படம் பார்த்துட்டு வர்றியா?”
“ஆமா… வாரியர் படம் படம் பார்த்துட்டு வர்றேன் சித்தப்பு”
“என்னது வாரியார் படமா? கிருபானந்த வாரியார் பத்தி பக்திப்படமா? அதெல்லாம் பாக்குற ஆளில்லையே நீ!”
“சித்தப்பு இது வாரியார் இல்ல… வாரியர்! அப்டீன்னா போர் வீரன்னு அர்த்தம்!”
“ஓ… இது வரலாற்றுப்படமா?”
“அதெல்லாம் இல்ல சித்தப்பு… நம்ம லிங்குசாமி டைரக்சன்ல வந்த மசாலாப்படம் தான்!”
“அவர் தான் கத்த வித்தையெல்லாம் இறக்கியிருப்பாரே… இது தமிழ்ப்படம் தான?”
“இது தமிழ், தெலுங்கு ரெண்டு மொழிப்படம் சித்தப்பு… அதனால ஹீரோ, ஹீரோயின்… நடிகர்கள் எல்லாருமே ரெண்டு சைடுலருந்தும் இருக்காங்க!”
“அப்போ இந்த படம் சரிப்படாதேடா மொசக்குட்டி!”
“என்ன சித்தப்பு படத்தப் பார்க்காமலேயே பொசுக்குன்னு இப்டி சொல்ற?”
“ரெண்டு மொழி… ரெட்டை இலை… ரெட்டை தலைமைன்னாலே எப்பவுமே பிரச்சனை தான்!”
“ஓ… நீ அரசியலைச் சொல்றியா? சொல்லப்போனால் வாரியல் படத்தை விட தமிழ்நாட்டு அரசியல் பயங்கர மசாலாவா இருக்கு சித்தப்பு!”
“தமிழ்நாட்டு அரசியலையெல்லாம் இப்ப யாராவது சொன்னா கேட்டுக்கறதோட சரி… சரி சொல்லு… இப்ப ஓபிஎஸ் ஈபிஎஸ் அண்ணன் தம்பி சண்டை எந்த அளவுல இருக்குது?”
“மசாலா படத்துல வில்லன் கோஷ்டியும் ஹீரோ குரூப்பும் மாறிமாறி சுட்டுப்பாங்கல்ல… அந்த கிளைமாக்ஸ் ஃபைட் சீன் மாதிரி தான் அரசியலும் இருக்கு சித்தப்பு!”
“என்னது? துப்பாக்கியால சுட்டுக்கறாங்களா?”
“க்கும்… அது ஒண்ணு தான் பாக்கி! பொதுக்குழுக் கூட்டத்துல எடப்பாடிய தற்காலிக பொதுச்செயலாளர்னு தேர்ந்தெடுத்தாங்க சித்தப்பு…”
“ஓ… அப்புறம்?”
“அப்புறமென்ன… அதே நேரத்துல ஓபிஎஸ் தன்னோட அடியாட்களோட அதிமுக அலுவலகத்துக்கு வந்துட்டாரு… அங்க, அலுவலகத்துக்கு முன்ன போர்க்களம் மாதிரி ரெண்டு கோஷ்டியும் மாத்தி மாத்தி ஒருத்தர் மேல ஒருத்தர் கல்லைத்தூக்கி எறிஞ்சி மோதிக்கிட்டாங்க!”
“அடக்கொடுமையே! ஓபிஎஸ் முன்னாலயா இதெல்லாம்?”
“பின்ன, அதோட நின்னா பரவாயில்லையே… ரவுடி கேங் லீடர் மாதிரியே அதிமுக தலைமை அலுவலக கதவோட பூட்டை, அவரோட அடியாட்களை வச்சு உடைச்சு… உள்ள புகுந்து துவம்சம் பண்ணிட்டாரு!”
“அய்யோடா! அப்புறம் என்னாச்சு?”
“அதுவரைக்கும் கம்முன்னு பார்த்துட்டு இருந்த போலீஸுக்கு அடுத்து ஆர்டர் வந்துடுச்சு… தாசில்தார் ரெண்டு பேர் வந்தாங்க… பூட்டை உடைச்சுட்டீங்களே… இனிமே புதுப்பூட்டுக்கு எங்க போவாங்கன்னு நினைச்சு, அவங்களே அலுவலகத்தை பூட்டி சீல் வச்சுட்டாங்க!”

“இம்புட்டு சம்பவத்தை ஓபிஎஸ் பண்றப்ப எடப்பாடி பார்த்துக்கிட்டு சும்மாவா இருந்தாரு?
“அவரெப்படி சும்மா இருப்பாரு? புதுப்பதவி கிடைச்சதும் தன்னோட பவர எடப்பாடி காட்டத் தொடங்கிட்டாரு! ஓ.பி.எஸ். அவரோட சேர்ந்த ஆதரவாளர்கள்னு பல பேரை அதிமுகலருந்து நீக்குறதா அதிரடியா அறிவிச்சுட்டாரு!”
“அட… அப்போ ஓபிஎஸ் எதிர்காலமே போச்சா?”
“அதான இல்ல… உடனே நம்ம ஓபிஎஸ் பதிலுக்கு எடப்பாடி பழனிசாமிலருந்து அவரோட டீம்ல அவர்கூட இருக்குற அத்தனை தலைகளையும் கட்சிய விட்டு நீக்கிட்டாரு!”
“ஆஹா! இதென்ன புது விளையாட்டால்ல இருக்கு? அதுசரி, ஓபிஎஸ் பையன் ஒருத்தரு எம்பியா இருக்காப்லயே… அவரு நிலைமை?”
“மொத நாளு அவரை கட்சிய விட்டு நீக்காமத்தான் எடப்பாடி வச்சிருந்தாப்ல… மறுநாள் ஓபிஎஸ் பையனையும் கட்சியை விட்டு தூக்கிட்டாரு… இந்த கூத்துக்கு இடைல நம்ம பொன்னையன் வேற ஒருகூத்து பண்ணிட்டாப்ல!”
“இவரு என்ன பண்ணாரு மொசக்குட்டி?”
“இவருகிட்ட பன்னீரோட ஆளு ஒருத்தரு ரொம்ப பாசமா பேசி விசாரிக்கிற மாதிரி பிட்டப் போட்டு, எடப்பாடி சைடு ஆளுங்க எல்லாரைப் பத்தியும் விசாரிக்க, இவரும் என்னவோ குடிகாரன் உளறிவச்ச மாதிரி, எடப்பாடி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி, தங்கமணின்னு ஒவ்வொருத்தரைப் பத்தியும் அவர் மனசுல இருந்த அத்தனை விஷயத்தியும் கொட்டிட்டாரு! அதுல எடப்பாடிக்கு எம்.எல்.ஏ. பலமே இல்லைன்னும், மத்த முன்னாள் அமைச்சர்கள் எப்பவேணாலும் எடப்பாடிக்கு எதிரா திரும்புவாங்கன்னும்… சி.வி.சண்முகம் பகல்ல கூட குடிச்சுட்டே இருக்குற மொடாக்குடிகாரர்னும் எக்கச்சக்கமா பேசிட்டாரு! அவரு பேசுன அத்தனையையும் எதிர்ல பேசுனவரு ரெக்கார்ட் பண்ணி சுத்தவிட்டுட்டாரு!”
“போச்சுடா! தர்மசங்கடமா போயிருக்குமே! பொன்னையன கட்சிய விட்டு தூக்கிட்டாங்களா?”

“பொன்னையன தூக்கி வீசுனால் அவரு பேசுனதெல்லாம் நிஜமாயிடுமேன்னு பொன்னையனை விட்டே மறுப்பு அறிக்கை விட வச்சாங்க… அவரும் தன்னோட குரலை மிமிக்ரி பண்ணிட்டதா சொன்னாரு!”
“செம தமாசு! அவரென்ன நடிகரா? அவர் குரலை மிமிக்ரி பண்றதுக்கு! ஹஹஹ!”
“அதேதான் சித்தப்பு… இப்ப அதிமுக வாரியர்கள் தான் வெறியா மோதிட்டு இருக்காங்க… இதுக்கு மத்தியில அந்த படம் என்னத்த! ஹஹஹஹ!”
“அதேதான் சித்தப்பு… இப்ப அதிமுக வாரியர்கள் தான் வெறியா மோதிட்டு இருக்காங்க… இதுக்கு மத்தியில அந்த படம் என்னத்த! ஹஹஹஹ!”
-புத்தன்