குவாரிகளில் இருந்து கல், ஜல்லி, எம்-சாண்ட் எடுத்துச் செல்லப்பட்ட தடை நீக்கம்… நீதிமன்றம் அதிரடி!

நெல்லை மாவட்டத்தில் குவாரிகள் வழக்கம் போல் செயல்பட அனுமதிக்க உத்தரவிடக்கோரிய வழக்கு. அனுமதி பெற்ற குவாரிகள் கல், ஜல்லி மற்றும் எம்-சான்ட் போன்ற கனிமங்களை கொண்டு செல்ல எந்த தடையும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் கல்குவாரியில் மே 14 இரவு திடீரென பாறை சரிந்து விழுந்தது. இதில் 4 பேர் பலியாயினர். இதை தொடர்ந்து மாவட்டத்தில் குவாரிகள், கிரசர்கள் இயங்க வாய்மொழி தடை விதிக்கப்பட்டது . டிரான்சிட் பாஸ் அனுமதியை வழங்க நெல்லை புவியியல் மற்றும் சுரங்க உதவி இயக்குநர் அனுமதி வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரர்கள் இங்கு க்ரஷர் யூனிட்கள் , கல்குவாரிகள் நடத்தி வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட குவாரியில் மனித உயிர்கள் பலியாவதற்கு வழிவகுத்த துயர சம்பவம் நடந்ததால், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து குவாரிகள் மற்றும் கிரஷர் யூனிட்களை மூடுமாறு நெல்லை மாவட்ட நிர்வாகம் வாய்மொழியாக உத்தரவிட்டு உள்ளது.
எந்தவித அடிப்படையும் இன்றி , இது போன்ற வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . அதிகார பூர்வமாக இல்லாமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. எனவே நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே, நெல்லை , மாவட்டத்தில் அனுமதி பெற்ற குவாரிகளிகளில் இருந்து கல், ஜல்லி மற்றும் எம்-சாண்ட் போன்ற சிறு கனிமங்களை சேமித்து வைக்கவும், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் விதிக்கப்பட்ட வாய்மொழி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்ககப்படுகிறது.
மேலும் மனுதாரர்கள் கோரிக்கை குறித்து, நெல்லை கனிம வளத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்டு 2 ம் தேதி ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.