கருமுட்டை விவகாரம்: ஈரோட்டில் பிரபல மருத்துவமனையின் 4 அறைகளுக்கு சீல்… விடிய விடிய நடந்த தீவிர சோதனை!

16 வயது சிறுமியின் கருமுட்டை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய, ஈரோடு சுதா மருத்துவமனையில் விடிய விடிய ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கிருந்த 10 ஸ்கேன் இயந்திரங்களுக்கும், 4 அறைகளுக்கும் தனித்தனியாக சீல் வைக்கும் பணியை அதிகாலை வரை மேற்கொண்டனர்..

தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஈரோடு 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்த மருத்துவ உயர்மட்ட குழுவினர் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தனர். இதில் மருத்துவமனைகள் விதிமுறைகளை பின்பற்றாததும், பல்வேறு குறைபாடுகள் இருந்ததும் தெரியவந்தது.

அதன் அடிப்படையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஈரோடு பெருந்துறை சேலம் ஓசூர் பகுதிகளில் 4 தனியார் மருத்துவமனைகளில் உடனடியாக ஸ்கேன் சென்டர்களை மூடவும் 15 நாட்கள் அவகாசம் கொடுத்து மருத்துவமனைகளை நிரந்தரமாக மூடவும் மக்கள் நல்வாழ்வுத்துறை உத்தரவிட்டது. இதன்பேரில் மருத்துவமனைகள் மீதான நடவடிக்கையை அந்தந்த மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

ஈரோட்டில் சுதா மருத்துவமனையில் நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி, வட்டாச்சியர் பாலசுப்பிரமணி மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் பிற்பகல் 2 மணி முதல் ஸ்கேன் மையங்களுக்கு சீல் வைக்கும் பணியை தொடங்கினர்.. மருத்துவமனையில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள் அங்கிருந்த ஸ்கேன் கருவிகளை ஆய்வு செய்தனர். மொத்தம் 10 ஸ்கேன் இயந்திரங்களின் ஆவணங்களை பதிவு செய்த பின் அவற்றிற்கு தனித்தனியாக சீல் வைக்கப்பட்டது. மேலும் ஸ்கேன் மையமாக செயல்பட்ட நான்கு அறைகளும் மூடி முத்திரையிடப்பட்டது.

இந்த நடவடிக்கை அதிகாலை 3 மணி வரை நீடித்தது. மேலும், மருத்துவமனையை நிரந்தரமாக மூடும் வகையில், அடுத்த 15 தினங்களுக்குள் இங்குள்ள நோயாளிகளை முழுமையாக வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகிகளிடம் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.