HR உன்ன கூப்பிடுறார்…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்

சென்றவாரத்தொடர் நிறையப்பேருடைய மனதுக்கு நெருக்கமாக அமைந்ததாக அலைபேசி அழைப்புகள் மூலம் தகவல் தந்தனர். எழுத்து என்னவெல்லாம் செய்யும் என்பதை எழுத்தையும் வாசிப்பையும் நேசிப்பவர்களுக்கு நன்றாகத் தெரியும். யாரையும் தொந்தரவு செய்யாத எழுத்து எதற்கு? என்று புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் கூறுவதுண்டு. அதுபோல என் எழுத்தும் எதோ ஒரு சிறு விதையை சிலரது மனதுக்குள் விதைத்து, தாக்கத்தையும், ஊக்கத்தையும் எண்ணற்றோருக்கு தருவது கண்டு பெரு மகிழ்ச்சி. ஆற்றுப்படுத்தலுக்கு எடுத்துக்காட்டாக நான் சென்றவாரம் சொன்ன ஓலங்கள் படத்தினைப் பார்க்க ஆசை, வாழ்வியல் புரிதலை மையப்படுத்தும் இதுபோன்ற கதைகள் இன்னும் பெருகவேண்டும் என, வழக்குரைஞர் பணியில் உயர்பொறுப்பில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் கூறியது மனதுக்கு மகிழ்வாகவும் நிறைவாகவும் இருந்தது.

What Is Human Resource Management? | Maryville Online

ஒவ்வொரு பழமும் ஒரு சுவை, ஒவ்வொரு மலரும் தனி ரகம், இதைப்போல் இயற்கையின் படைப்பை அடுக்கிக்கொண்டே போகலாம், இப்படி ஒவ்வொன்றையும் அதனதன் தனித்தன்மையோடு ஏற்கத்தெறிந்த மனிதனுக்கு சக மனிதனை மட்டும் வெவ் வேறு கோணத்தில் கண்டு இறுதிவரை ஏற்றுக்கொள்ள மனமில்லாமல் ஒதுங்கிப்போகும் நிலை எதனால்? அடுத்தவரை நமது போட்டியாளராக கருதும் எண்ணத்தால்தான். மேலும், ஒருசில தவறுகளால் ஒட்டுமொத்தமாக ஒதுக்குவதும் ஒரு காரணம். ஆற்றுப்படுத்தல் என்பது தவறுகளை நியாயப்படுத்தி, ஊக்கப்படுத்துவது எனத் தவறாக பொருள்கொள்ள வேண்டாம்.

Basics of Human Resource Management — Recruitment and Selection (Week 2) |  by Le Huyen Doan | Medium

ஒருவரை நெறிப்படுத்துவதும், முறைப்படுத்துவதும் மட்டுமே அதன் தலையாய கடமையாகும். இப்படிப்பட்ட பணியினை என்னைப்போன்ற மனிதவளத்துறையில் உள்ளவர்கள் சிறப்புடனும், உள்ள உவகையுடனும் செய்வது மனிதத்தின் மீதுகொண்ட பேரன்பின்றி வேறென்ன.? ஆற்றுப்படுத்தும் பணியினை இன்னும் சிறப்புடன் செய்யவேண்டும் எனும் நோக்கத்தில்தான் உளவியலையும் கற்க எனக்கு ஆவல் மேலிட்டது. இதையெல்லாம் நான் இங்கு குறிப்பிடக்காரணம். மனிதனை நேசியுங்கள் உங்களுக்கு மதம் பிடிக்காது எனும் உயர் கருத்தினை நாம் உள்வாங்கவேண்டும் என்பதற்காகத்தான். ஆற்றுப்படுத்தலில் கடைபிடிக்கும் மாண்பு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அனுபவமிக்க மனிதவள மேலாளர்கள் (நானும்) தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களில் தவறுகள் நடக்கும்போதும் கீழ்க்காணும் படிநிலைகளை கையாள்வார்கள்.

· கண்டும் காணாமல் கடந்துபோக வேண்டியது தவறுகள்

· மன்னிக்கப்படவேண்டிய தவறுகள்

· கண்டிக்கப்பட வேண்டிய தவறுகள்

· தண்டிக்கப்பட வேண்டிய தவறுகள்.

கண்டும் காணாமல் கடந்துபோக வேண்டியது தவறுகள்

ஒருசில தவறுகள் நடக்கும், அது எவ்வித பாதிப்பையும் யாருக்கும் ஏற்படுத்தாது, அந்த நேரத்திற்கான ஒரு அரட்டையாக அது இருக்கும், அதை கண்டும் காணாமல் செல்வதுதான் நல்லது, இல்லை இல்லை அதன் அடியாழத்தைக் கண்டுபிடிக்காமல் விடமாட்டேன் எனச் சென்றால், சிக்கல் நமக்குத்தான். சனியன தூக்கி ஏன்டா பனியன்ல போட்ட என நம் இளசுகள் பயன்படுத்தும் சொல்லாடலை நினைவில் வைத்துக்கொள்வோம். அதேநேரத்தில் அவர் செய்த தவறு நமக்குத் தெரியும் என்பதை, அந்தத் தவறினை செய்தவருக்கு நேரிடையாக அல்ல மாறாக மறைமுகமாக உணர்த்திவிடுவது நல்லது.

மன்னிக்கப்படவேண்டிய தவறுகள்

எல்லாவற்றுக்கும் தண்டனை மட்டுமே தீர்வு என்றால் இங்கு எவரும் உயிர்வாழ முடியாது. ஆதலால் மன்னிப்பு என்பது மிகப்பெரிய மருந்து, அந்த மருந்தை எங்கு எப்போது எதற்காக எனும் பொருள் நிலையோடு பயன்படுத்தினால் மட்டுமே அந்த மன்னிப்புக்கு மதிப்புண்டு. இல்லையெனில் இவருகிட்ட என்ன பண்ணிட்டு போனாலும் விட்டுருவாரு எனும் பிம்பத்தை நாமே உருவாக்கிவிடக்கூடாது. மன்னிப்பவருக்கும், மன்னிப்பை பெறுபவருக்கும் மட்டுமே மன்னிப்பின் மகத்துவம் புரியும், வெளியிலிருந்து பார்க்கும் அனைவருக்கும் இது ஒரு நாடகம் என்றே தோன்றும்.

கண்டிக்கப்பட வேண்டிய தவறுகள்

செய்த தவறால் பிறகுக்கு பாதிப்பில்லை ஆனால் அதைச் செய்தவருக்கு பாதிப்பும்,நன்மதிப்பும் குறையும் என்றால் அது கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. அப்படி நம் கண்டிப்பை பதிவுசெய்யும்போது அவரது நலனுக்காக என்பதை உணரவைக்கவேண்டும்.

தண்டிக்கப்பட வேண்டிய தவறுகள்.

இதில் எவ்வித சமரசமின்றி தண்டனை தருவது மட்டுமே நல்லது. தன்னையும், சுற்றியிருப்பவரையும் பாதிக்கும் செயல் என்பதால், கடுமையாக நடக்கவேண்டியது அவசியமாகும், இதுபோன்றதொரு தவறை வேறுயாரும் எத்தருணத்திலும் செய்துவிடக்கூடாது என பதிவுசெய்யவேண்டியது HRன் கடமையாகும்.பிறரின் நிறைகுறைகளை சீர்தூக்கி முடிவிடும் அதிகாரத்தை இயற்கை யாருக்கும் தந்ததில்லை, ஆனால் அதே நேரத்தில் நம் தவறுகளையும், பிறர் தவறுகளையும் மட்டுப்படுத்த, கட்டுப்படுத்த மற்றும் சீர்செய்ய நம் அனைவருக்குமே கடமை உண்டு.

ஆற்றுப்படுத்தலிலும், பிரச்னைகளைக் கையாள்வதிலும் இந்தப்படி நிலைகளை பின்பற்றுவது எனது வழக்கம். இந்த மாண்புகளைத்தான் நான் விரும்பிப் பயன்படுத்துவேன். இதுபோன்று பல வழிகளை என்னைப்போன்ற HRகள் பயன்படுத்துவதுண்டு, அதையெல்லாம் உங்களுக்கு தெரிந்த மனிதவளத்துறையில் உள்ளவர்களோடு உறவாடி பெற்றுக்கொள்ளுங்கள்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published.