மீன் வலையில் சிக்கிய பாம்புகள்… மணப்பாறை மீன்பிடி திருவிழாவில் பரபரப்பு!

மணப்பாறை அருகே மீன்பிடித் திருவில் மீன் வலைகளில் சிக்கிய 15க்கும் மேற்பட்ட பாம்புகளால் பரபரப்பு. உற்சாகத்துடன் நடைபெற்ற விழா.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கன்னிராஜாப்பட்டியில் சுமார் 60 ஏக்கர் பரப்பளவில் கன்னிகுளம் உள்ளது. அப்பகுதி மக்களின் பிரதான நீராதாரமாக விளங்கும் இக்குளம் சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழையின் போது குளத்தில் நீர் முழுவதுமாக நிறைந்து அதிகளவில் மீன்கள் துள்ளிவிளையாடின. இந்நிலையில் தற்போது நீர் மட்டம் குறைந்து விட்டதால் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.

அதன்படி காலை ஊர் முக்கியஸ்தர் அருணாச்சலம் என்பவர் குளத்தின் கரையில் நின்று வெள்ளைத் துண்டை தலைக்குமேல் சுழற்றி குளத்தில் மீன்கள் பிடிக்க அனுமதி அளித்தனர். அதுவரை தண்ணீருக்கு வெளியே காத்திருந்த மக்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்பிடி வலைகளுடன் தண்ணீரில் இறங்கி மீன்களை பிடிக்கத்துவங்கினர். ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் ஆர்வமுடன் மீன்களை பிடித்தனர்.

மீன் பிடி வலைகள் மட்டுமல்லாது மீன் பிடிக்க சிலர் கொசுவலை, மூங்கில் கூடை, கம்பி வலைகளை பயன்படுத்தியும் மீன்களை பிடித்தனர். அப்போது குளத்தின் வளர்ந்திருந்த செடி மறைவிற்குச் சென்ற மீன்களைப்பிடிக்க உள்ளே சென்றபோது மீன்வலைகளில் பாம்புகளும் சிக்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த மீன்பிடி ஆர்வலர்கள் வலைகளில் இருந்து பாம்புகளை பிரித்தெடுக்க படாதபாடுபட்டனர். இதேபோல் வரிசையாக சுமார் 15 க்கும் மேற்பட்ட பாம்புகள் மீன்களோடு மீன்களாக வலைகளில் சிக்கின. மீன் வலைகளில் விசப்பாம்புகள் சிக்கினாலும் அதனை எடுத்துப்போட்டுவிட்டு மீண்டும் உற்சாகமாக மீன் பிடித்தனர். இதுவரை இல்லாத அளவிற்கு இங்கு மட்டுமே அதிகளவில் பாம்புகள் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

கெண்டை, கெளுத்தி, கட்லா, ரோகு, ஜிலேபி என வகைவகையான மீன்கள் அனைவருக்கும் சிக்கியது. விழாவில் திருச்சி மாவட்டம், மட்டுமல்லாது கரூர், திண்டுக்கல், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் மீன்பிடி திருவிழாவில் கலந்துகொண்டு உற்சாகத்துடன் மீன்களை பிடித்து பைகளில் அள்ளிச் சென்றனர். மீன்களுடன் பாம்புகள் சிக்கிய சம்பவம் மீன்பிடி திருவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *