சீர்மரபினர், பழங்குடியினர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கு… முதன்மைச் செயலருக்கு பறந்த அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் சீர்மரபினர் பழங்குடியினர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்தக்கோரிய வழக்கில்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை ஆத்திகுளத்தைச் சேர்ந்த விஜயகுமார் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், “மதம், சமூகம், பால் ஆகிய பல்வேறு தளங்களில் பின்தங்கியோரை முன்னேற்றும் விதமாக குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கணக்கெடுப்பு நடத்தும் முறையை அரசு கொண்டு வந்தது. கடந்த 2010 டிசம்பரில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் முறையான கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நிறைவடையவில்லை. சமூக நலத்துறை அமைச்சகம் தமிழகம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கு அறிவிப்பை அனுப்பி, வீடுதோறும் கணக்கெடுப்பை நடத்தி சீர்மரபினரின் விபரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. ஆனால் அது பெயரளவிலேயே உள்ளது.

ஆகவே சமூக நலத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பின் அடிப்படையில், தமிழகத்தில் வீடுதோறும் கணக்கெடுப்பை நடத்தி சீர்மரபினர் பழங்குடியினர் தொடர்பான கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம் ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு குறித்து தமிழக பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மைச் செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.