கர்நாடக அணைகளில் நீர் திறப்பு; காலை முதல் மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாட்டிலும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு அணைகளும் நிரம்பும் நிலையில் இருப்பதால் அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை முதல் மேட்டூர் அணைக்கு வரத் துவங்கியது.

நேற்று காலை வினாடிக்கு 2,141கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 3149 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்தாலும் அணைக்கு வரும் நீரின் அளவை விட, பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு 12 ஆயிரம் கன அடியாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.91 அடியிலிருந்து 98.29அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 12,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர் இருப்பு 62.64 டி.எம்.சியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று மாலையோ அல்லது நாளை காலை மேலும் அதிகரிக்கும் என்று நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.