புத்தகப் பரிந்துரை : இதனால் சபையோருக்கு தெரிவிப்பது என்னவென்றால்!…
“சீதா பூ பறித்துகொண்டிருந்தாள்”
“கண்ணன் பந்து விளையாடினான்”
“Rama ate apple”
இதெல்லாம் என்னனு புரியலையா? மத்த யாரை விடவும் 90s கிட்ஸ்க்கு நல்லா புரியுமே. சரி நானே சொல்றேன். தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வெளியிடப்படும் தமிழ், இங்கிலிஷ் ரெண்டு பாட புத்தகத்துலயுமே இலக்கண பகுதிகளில் இந்த மாதிரி உதாரணங்கள் தான் சொல்லப்படிருக்கும். இதைவிட்டால் செல்வி, முருகன், மீனா போன்ற பெயர்கள் இடம்பெறலாம். அது ஆறாம் வகுப்புனாலும் சரி, பத்தாம் வகுப்புனாலும் சரி. வாக்கியங்கள் மாறுமே தவிர. பெயர்கள் மாறாது.
1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களில் வண்ண பக்கங்கள் இருந்ததா என்று நினைவில் இல்லை. ஆனால் 6 முதல் 12 வரை கண்டிப்பாக வண்ணம் என்றே வார்த்தைக்கே இடமில்லை. பாடங்களின் நடுவே வரும் ஒன்றிரண்டு படங்கள் கூட கருப்பு வெள்ளையில், சில சமயங்களில் ஒழுங்காக அச்சாகாமல் கூட இருக்கும். வடிவேலு ஒரு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிப்பவரிடம் நகைச்சுவையாக ஒன்று சொல்வார், “என்ன 10 மாசம் சொமந்து பெத்தேன்னு சொல்லிட்டே இருக்க? உள்ள ஒரே இருட்டு, ஒரு பேன் கிடையாது, லைட் கிடையாது, தவிச்ச வாய்க்கு தண்ணி குடுக்க ஆள் கிடையாது” என்று. அந்த வசனம் மாதிரி தான் இந்த புத்தகங்களும், ஒரு முன்னுரை கிடையாது, ஏன் இந்த பாடத்தை படிக்கணுமுனு தெரியாது, ஒரு கலர் படம் கிடையாது, ஒரு விளக்கப்படம் கிடையாது, பல வருடங்களுக்கு ஒரு அப்டேட்டும் கிடையாது. சரி உள்ளடக்கம் தான் இப்படி இருக்குனு பார்த்தல், புத்தகங்களின் அட்டைப்படம் தோழா படத்துல வர கார்த்தி பெய்ண்டிங் மாதிரி இருக்கும். எவனக்கும் புரியாது. (வாத்தியாருக்கும் தான்). இது போதாதுனு ஒவ்வொரு பாட புத்தகமும் ஒவ்வொரு அளவுல இருக்கும். மொத்தத்துல புத்தகத்தை பார்த்தால் தெறித்து ஓடும் மனநிலை தான். கட்டாயத்தின் பேரில்தான் படிக்கனும்.
ஆனால், சில வருடங்களுக்கு முன்பு மாற்றியமைக்கப்பட்ட பாட புத்தகங்களைப் பார்த்தேன். 1 முதல் 12ஆம் வகுப்பு வரை, முன் அட்டை முதல் பின் அட்டை வரை அத்தனையும் வண்ண பக்கங்கள், எல்லாம் ஒரே அளவில், அதிலும் அந்த முன் அட்டை வடிவமைப்பிற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் கொடுக்கலாம். வழமையான ராமன், கண்ணா பெர்களை விடுத்து தமிழ்நிலா, ஆதினி, பூ வேந்தன், வெண்பா போன்ற இனிமையான தமிழ் பெயர்களும், வகுப்பரை, பட்டிமன்றம் போன்று சூழல்கள் வரும் பகுதிகளில் ஆயிஷா, முகமது, பாத்திமா, ஜான் போன்ற எல்லா மதத்தினைச் சேர்ந்த பெயர்களும் இடம் பெற்றுள்ளன. கூடவே ஒவ்வொரு பாடத்திற்கும் கவிதைப் போல ஒரு தலைப்பிட்டு, முன்னுரை, முடிவுரையுடன் அழகாக விளக்கியுள்ளனர். பார்க்க பார்க்க அவ்வளவு ஆசையாக உள்ளது. நாம படிக்கும்போது இப்படியில்லையே என்று ஏங்க வைத்தது. சரி இவ்வளவு மாற்றங்களுக்கும் யார் காரணமா இருந்திருப்பாங்க?
இத்தனைக்கும் இந்த மாற்றங்களெல்லாம் அரங்கேறிய சமயத்தில், தமிழகத்தில் ஒரு அரசியல் நிலையாமை நிலவிய காலகட்டம். எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்குப் பார்வையுடன், புத்தகத்தில் வரும் சில பகுதிகளை பற்றி மேலும் விரிவாக அறிய நவீன தொழில்நுட்பதிற்கு ஏற்ப QR Code முறையெல்லாம் அறிமுகப்படுத்த தூண்டுகோலாக இருந்தது யார்?
தமிழ்நாடு பாட புத்தகங்கள் திறன் வாந்ததாக இல்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால் இன்று UPSC தேர்வில் வென்றவர்கள் கூட (வெளி மாநிலத்தவர்கள்) சில பாடத்திற்கு SCERT (தமிழக பாட புத்தகங்கள்) தான் படித்தேன் என்று கூறுமளவிற்கு தரம் உயர்த்தியது யார்?
எல்லா கேள்விகளுக்கும் ஒற்றை பெயர் தான் பதில். மரியாதைக்குரிய திரு. உதயச்சந்திரன் IAS அவர்கள். ஆம். தற்பொழுது முதல்வரின் தனிச் செயலாளர்கள் 5 பேரில் ஒருவராக உள்ள அதே உதயச்சந்திரன் தான். பள்ளிக் கல்வி துறை செயலராக பணியாற்றியபோது தான் மேற்கூறிய மாற்றங்களை கொண்டுவந்தார்.
🔅10, 12 ஆம் வகுப்பு பொதுதேர்வில் மாநில அளவில், மாவட்ட அளவில், பள்ளியளவில், பஞ்சாயத்து அளவில் இன்னும் என்னென்ன அளவெல்லாம் உள்ளதோ எல்லா அளவிலும் முதல் மூன்று இடங்களை பெரும் மாணவர்களை கொண்டாடி கொண்டிருந்த காலகட்டத்தில், சில மதிப்பெண்கள் வித்தியாசத்தில் அந்த இடங்களை தவற விட்டவர்கள், குறைவான மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வில் தோல்வியடைந்தவர்கள் என எல்லாரையும் கருத்தில் கொண்டு தர வரிசை (rank list) அறிவிக்கும் முறையை நீக்கியது.
🔅ராமநாதபுரத்தில் பேருந்தில் நிலையங்களை சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை ஆக்சன் படத்தில் வரும் காட்சியைப் போன்று பிளான் பண்ணி அகற்றியது.
🔅மதுரையில் 10 வருடங்களாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மங்களம் என்ற 3 கிராமகளில் சாதி மோதல்களால் நடைபெறாமல் இருந்த உள்ளாட்சி தேர்தலை மூன்று மாத உழைப்பில் நடத்திக் காட்டியது.
🔅ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்து பின் அனுமதி வழங்கிய போது பல்வேறு கட்டுப்படுகளுடன், மரபையும் காத்து அதை வெற்றிகரமாக நடத்தியது.
🔅சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மண்ணில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவது, மீனாட்சி கோவில் திருவிழாவை அடுத்து மாவட்டமே கொண்டாடிய மாபெரும் அறிவுத் திருவிழாவான புத்தக திருவிழாவை நடத்தியாது. (இன்று தமிழகம் முழுவதும் எல்லா மாவட்டங்களிலும் நடைபெறுகிறது).
🔅ஈரோடு மாவட்டத்தில் கல்விக் கடன் முகாம் மூலம் 8000 பேருக்கு 110 கோடி கடன் வழங்கியது. (தற்பொழுது எல்லா மாவட்டங்களிலும் கல்வி கடன் முகாம் நடைபெறுகிறது).
🔅 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வைணையத்தின் செயலராக இருந்த போது TNPSC ல் நடக்கும் ஊழல்களை பட்டியலிட்டு அவர்கள் மீது புகராளித்ததோடு மட்டுமில்லாமல், இணையவழி விண்ணப்பங்கள் அறிமுகம், கலந்துரையாடல் மற்றும் நேர்முக தேர்வை வீடியோ ரெகார்ட் செய்வது போன்ற புரட்சிக்கர திட்டங்களை கொண்டுவந்தது.
🔅நீலகிரியில் சிறு தேயிலை விவசாயிகளின் கூட்டுறவு தொழிற்சாலைகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் போது, தெற்க்காசியாவிலேயே முதல் முறையாக எலக்ட்ரானிக் தேயிலை ஏல முறையை அறிமுகப்படுத்தி இடைத்தரகர்களை ஒழித்தது.
🔅தமிழகமே கொண்டாடி தீர்த்த கீழடியை தமிழக்கூறும் நல்லுகத்திற்கு கொண்டு சேர்த்தது.
இப்படி KGF பட ராக்கி பாய் மாதிரி “நான் பத்து பேரை அடிச்சி ரவுடியானவன் இல்ல, நான் அடிச்ச பத்து பேருமே ரவுடி தான்” னு மாஸ் டயலாக் பேச தகுதியானவர்.
சரி நான் மேல சொன்ன தகவல் எல்லாமே உதயச்சந்திரன் IAS னு போட்டவே விக்கிபீடியாவுலயே கிடைக்குமே. இதுல ஸ்பெஷல் என்ன இருக்குனு தான கேக்குறீங்க? இருக்கு.
மேல சொன்ன சாதனைகளை அவர் பண்ணும் போது அதிகார வர்க்கம் உருவாக்கி வச்சிருக்க தடைகளை அவர் எப்படி எதிர்கொண்டார்? அவர் கொண்டு வந்த ஒவ்வொரு புது திட்டங்களும் உருவாக காரணமாக இருந்த அவர் வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் என்ன?
அவர் எதிர்கொண்ட எளிய மனிதர்கள் பலர் இன்று வரை அவருடன் கதைப்பது எப்படி?
இப்படி பல விஷயங்களை அவரே எழுதி 10 மாதங்கள், விகடனில் தொடராக வெளிவந்த 40 கட்டுரைகளின் தொகுப்பு தான் “மாபெரும் சபைதனில்” எனும் புத்தகம்.
“கலெக்டர் எனும் மந்திர சொல்லில் ஆரம்பித்து, அஞ்சல் அட்டை எனும் இறுதி கட்டுரை வரை அத்தனையும் அழகான சிறுகதைகள் என்று நான் சொல்லல, எழுத்தாளர் எஸ். ரா அணிந்துரையில் கூறியுள்ளார். அரசு அலுவலர்களும், ஊழியர்களுக்கும் தேவையான கை விளக்கு இந்த புத்தகம் என இறையன்பு IAS கூறியுள்ளார். ஆனால் அவர்களை விடவும், “எங்கங்க அரசு அலுவலர்கள் வேலை செய்றாங்க? யாருமே சரி இல்லங்க?” இப்படி புலம்புகிறவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
ஒவ்வொரு கட்டுரையிலும், வரலாறு, இலக்கியம், பண்பாடு, மானுடவியல், தொழில்நுட்பம், அறிவியல் இப்படி பலதுறைகளின் தகவல்கள், ஐரோப்பியர்கள் இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் செய்த நன்மை, தீமைகள், காந்திக்கும் தமிழர்களுக்குமான உறவு, பணிக்காலத்தில் அவரை வியக்க வைத்த சாதாரண மனிதர்கள், அரசின் கடை நிலை ஊழியர்கள் இப்படி நீளும். அதுமட்டுமில்லாம் 40 கட்டுரைகளிலுமே “சபைக்குறிப்பு என்றொரு பகுதியில் நிறைய தமிழ், ஆங்கில நூல்கள், அயல்மொழி திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவண படங்கள் என பலவற்றை அறிமுகப்படுத்துகிறார்.
நாம சாதாரணமா நண்பர்களிடம் பேசும்போது கூட சொல்லுவோம் “இவரு பெரிய கலெக்டரு”. ஆனா அந்த பெரிய கலக்ட்ரருக்கும் எப்படி பணி சூழல் இருக்கும், எவ்வளவு சாவால்கள் இருக்கும்னு படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கும். அதிலும் VAO, தாசில்தார் இன்னும் எத்தனை அதிகாரிகள் இருந்தாலும் மக்களுக்கு ஏன் கலெக்டர் மிக நெருக்கமான சொல்லாக இருக்குனு சொல்லும் போது, நிஜமாவே ” பேசாம நாமளும் கலெக்டர் ஆகிடலாமான்னு தோணும்”.
இந்த புத்தகத்தை படிக்கும் போது, உதச்சந்திரன் அவர்கள், பல்வேறு புரட்சி திட்டங்களை உருவாக்கிய ஹீரோ என்ற பிம்பம் உயர்ந்து கொண்டே போகும்போது, தமிழ் இலக்கிய புலமையுடையவர், கிரிக்கெட், கால்பந்தாட்டங்களை விரும்பி பார்ப்பவர், ஓவியம், கட்டிடக்கலை, இசை, சினிமா அபிமானி இப்படி ஒரு கலா ரசிகனாக இன்னொரு பிம்பம் உயர்ந்து போட்டி போடும். சரி ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து உதயச்சந்திரனை நம் மனதில் ஒரு உருவத்தில் அடைக்கலாம் என்று பார்த்தால், “வெற்றிலை போட்டால் கோழி முட்டும்” என்று சின்ன வயதில் அம்மா சொல்லியதை நம்புவதால் இன்றுவரை வெற்றிலை போடுவதில்லை என்று அவர் கூறும் போது வெடித்து சிரித்து விடுவோம்.
குறிப்பு:
மாபெரும் சபைதனில்
த. உதயச்சந்திரன்
விகடன் பிரசுரம்
விலை: 300