சவூதிக்கு சென்ற இளம் பெண்ணின் கணவர் நிலை என்ன?… அறிக்கை அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவு!

சவுதி சென்ற இளம் பெண்ணின் கணவரை நிலை என்ன. அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஒன்றிய அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

பரமக்குடியைச் சேர்ந்த கிரிஜா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் கணவர் சரத்குமார்(30). சவூதி அரேபியாவில் பெட்ரோல் பங்க் வேலைக்காக கடந்த ஜூனில் பெங்களூருவில் இருந்து ரியாத் சென்றார். முன்னதாக ஏர்வாடியைச் சேர்ந்த ஒருவர் அங்குள்ள ஒருவரிடம் கொடுக்குமாறு கருவாடு பார்சல் ெகாடுத்துள்ளார்.

விமான நிலையத்தில் போலீசார் பரிசோதித்த போது கருவாட்டு பார்சலில் சவூதியில் தடை செய்யப்பட்ட ஏதோவொரு பொருள் இருந்துள்ளது. இதன் பிறகு எந்த தகவலும் இல்லை. என்ன ஆனார் எனத் தெரியவில்லை. எனவே, என் கணவரை ஆஜர்படுத்து மாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில், ராமநாதபுரம் கலெக்டர் உடனடியாக வெளிநாடு வாழ் தமிழர் நலன் ஆணையத்தின் இயக்குநருக்கு கடிதம் எழுதியுள்ளார் என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், மனுதாரரின் கணவரை நிலை என்ன. அவரை மீட்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஒன்றிய அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.