மதுரையில் எங்கெல்லாம் மெட்ரோ ரயில் நிலையம் அமைய வாய்ப்பு?- நிர்வாக இயக்குநர் ஆய்வு!

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குநர் சித்திக் தலைமையில் முதல்கட்ட ஆய்வு இன்று நடைபெற்றது.

மதுரையில் மெட்ரோ ரயில் சேவை ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்த நிலையில், மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் விவாதத்தின் போது மதுரை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மே மாதம் அறிக்கை தயாராகும் எனவும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

இன்று அதற்கான முதல்கட்ட ஆய்வு சென்னை மெட்ரோ ரயில்வே நிர்வாக இயக்குனர் சித்திக் தலைமையில் மதுரையில் நடைபெற்றது.
உடன் மெட்ரோ ரயில்வே செயல்பாடு மற்றும் திட்ட இயக்குனர்கள், மாநகராட்சி ஆணையர், மாவட்ட வருவாய் அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வில் பங்கேற்றனர்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள தோப்பூர் பகுதியில் இருந்து ஒத்தக்கடை வேளாண் கல்லூரி வரையில் சுமார் 35 கி.மீ. தொலைவுக்கான ஆய்வு நடைபெற்றது.

தோப்பூர், திருப்பரங்குன்றம், பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், புதூர், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உயர்நீதிமன்ற கிளை, ஒத்தக்கடை வேளாண் கல்லூரி ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வு நடைபெற்றது.

இந்த ஆய்வின் அடிப்படையில் மெட்ரோ ரயில் சேவைக்கான நோக்கங்கள், மக்களுக்கான போக்குவரத்து பயன்பாடு, நிலத்தேவை உள்ளிட்ட விபரங்களுடன் சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்ட பின்னர், திட்டத்துக்கான நிதித்தேவை, வழித்தட அமைப்பு, நிலையங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.