பஞ்சாலை அதிபர் பணத்திற்காக கடத்தல்… டெல்லி விரைந்தது தனிப்படை!

திண்டுக்கல் அருகே உள்ள சென்னமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வில்வபதி (வயது 54). இவர் இடையகோட்டை சாலையில் சுக்காம்பட்டி அடுத்துள்ள கொண்ட சமுத்திரப்பட்டி அருகே ஜெய கிருஷ்ணா ஸ்பின்னிங் மில் வைத்து நடத்தி வருகிறார். இவர் மில்லுக்கு தேவையான பஞ்சு பேல்களை வெளிமாநிலங்களில் இருந்து வாங்குவது வழக்கம். பஞ்சுவில் இருந்து நூல்களாக மாற்றி வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்து வந்தார்.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் புதிதாக நூல் விற்பனை செய்யும் ஏஜென்ட் சிவக்குமார் என்பவரது அறிமுகம் கிடைத்தது. இதனை அடுத்து கடந்த 05.07.22 ம் தேதி டெல்லியில் இருந்து ஏஜெண்ட் சிவக்குமார் வில்வபதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு 50 டன் நூல் பங்களாதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்றும் 1கிலோ நூலின் விலை 205 / – வீதம் 50 டன்னுக்கு 1 கோடியே 25 லட்சம் என்று பேரம் பேசி முடிக்கப்பட்டது. எனவே அதற்கான அக்கிரிமெண்டில் கையெழுத்து போட வேண்டும் ஆகையால் உடனடியாக வில்வபதியை டெல்லிக்கு வருமாறு சிவக்குமார் அழைத்துள்ளார்.

இதனையடுத்து வில்லபதி மற்றும் மில்லில் வேலை பார்த்து வந்த அக்கவுண்டன்ட் வினோத் குமார் ஆகியோர் கடந்த ஐந்தாம் தேதி டெல்லி கிளம்பிச் சென்றார். அதன் பின் கடந்த 8ம் தேதி வில்வபதி தனது மில்லில் வேலை பார்த்து வரும் மேனேஜர் சண்முகவேலை செல்போனில் தொடர்பு கொண்டு பதட்டத்துடன் மில்லில் இருப்பு உள்ள நூல் பண்டல்களை உடனடியாக டெல்லிக்கு அனுப்பி வைக்குமாறு கூறி விட்டு உடனடியாக செல்போன் தொடர்பை துண்டித்து விட்டார்.

அதன்பின் வில்வபதி அன்றைய தினமே மருமகன் தர்மபிரகாஷ், வில்வபதியின் சம்மந்தி சிவக்குமார் ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு தன்னை டெல்லியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்தி வைத்து ரூபாய் 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பதட்டத்துடன் கூறினார். சிறிது நேரம் கழித்து மேனேஜர் சண்முகவேலிடம் பணத்தை ரெடி பண்ணி வைக்குமாறு கூறினார்.

இதனை அடுத்து சண்முகவேல் உடனே தாடிக்கொம்பு மில் ஓனர் வில்வபதியை பணம் கேட்டு கடத்தி விட்டதாக புகார் அளித்தார். போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையை சேர்ந்த திண்டுக்கல் மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி டெல்லி சென்றுள்ளனர். பஞ்சாலை அதிபர் ஒருவர் பணத்திற்காக கடத்தப்பட்டிருப்பது இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.