தமிழகத்தில் 20 புதிய கலை அறிவியல் கல்லூரிகள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கி வைத்து,
உயர்கல்வித் துறையின் சார்பில் 152.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (7.7.2022) தலைமைச் செயலகத்தில், 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தவாறு 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகங்கள், தொழில் முனைவோர் மையங்கள், விடுதிகள் உள்ளிட்ட கல்விசார் கட்டடங்களையும் திறந்து வைத்தார்.

2021-22ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்குவதற்கும், மாணவர் சேர்க்கை விகிதாச்சாரத்தை அதிகப்படுத்துவதற்கும். விருதுநகர் மாவட்டம் – திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் – திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் – தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் – ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் – மானூர், திருப்பூர் மாவட்டம் – தாராபுரம், தருமபுரி மாவட்டம் – ஏரியூர், புதுக்கோட்டை மாவட்டம் -ஆலங்குடி, திருவாரூர் மாவட்டம் – கூத்தாநல்லூர், வேலூர் மாவட்டம் – சேர்க்காடு ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதேபோன்று, 2022-23ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் – மணப்பாறை, விழுப்புரம் மாவட்டம் – செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் – தளி, புதுக்கோட்டை மாவட்டம் – திருமயம், ஈரோடு மாவட்டம் – அந்தியூர், கரூர் மாவட்டம் – அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மாவட்டம் – திருக்காட்டுப்பள்ளி, திண்டுக்கல் மாவட்டம் – ரெட்டியார்சத்திரம், கடலூர் மாவட்டம் – வடலூர், காஞ்சிபுரம் மாவட்டம் – ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் புதியதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, புதியதாக அறிவிக்கப்பட்ட 20 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டு முதல் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை பெற்று பயன்பெறும் வகையில், அனைத்து வசதிகளுடன் கூடிய தற்காலிக கட்டடங்களில் 20 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரால் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி – அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்கள்;

சென்னை மாவட்டம், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 1 கோடியே 69 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடங்கள்; சைதாப்பேட்டை, கல்வியியல் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கல்வி இயக்ககம் மற்றும் சென்னை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககத்திற்கான ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடம்; சென்னை, அண்ணா பல்கலைகழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் 7 கோடியே 48 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள முதுநிலை மாணவ, மாணவியர்களுக்கான விடுதிக் கட்டடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உடற்பயிற்சிக் கூடம்.

கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது. திருநெல்வேலி – மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 43 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆடவர் விடுதிக்கான உணவகத்துடன் கூடிய நவீன சமையல் அறை மற்றும் கருவியாக்க மையம்;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி – அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 5 கோடியே 10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டடம்; என மொத்தம் 152 கோடியே 1 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்வர் திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.