சேலம் அருகே முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசகம்; கத்திமுனையில் நகைகள் கொள்ளை!

சேலம் அருகே கத்திமுனையில் மூதாட்டியை மிரட்டி 12 சவரன் தங்க நகை கொள்ளையடித்ததால் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள குட்டப்பட்டி புதூர் நான்கு ரோட்டை சேர்ந்தவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மூதாட்டி ருக்மணி (80). இவரது கணவர் முத்து கவுண்டர் . கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். இவர்களுக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருவதால் , மூதாட்டி ருக்மணியும் தனியாக வசித்து வருகிறார். இன்று அதிகாலை 2 மணி அளவில் ருக்மணி காற்றோட்டத்திற்காக வீட்டின் கதவுகளை திறந்து வைத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது நான்கு நபர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இதில் முகமூடி அணிந்திருந்த இருவர், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ருக்மணியை எழுப்பி, கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர். சத்தம் போட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி, காதில் அணிந்திருந்த இரண்டு சவரன் எடை தோடு, மற்றும் பீரோவில் வைத்திருந்த இரட்டை வட செயின், கழுத்து செயின் என 11 சவரன் தங்க நகை என மொத்தம் 12 சவரன் நகையை
கொள்ளையடித்துக்குகொண்டு, மூதாட்டியை மிரட்டி விட்டு, நால்வரும் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றனர்.

அவர்கள் தப்பி சென்றதும் மூதாட்டி அருகில் இருந்த மகன் வீட்டு கதவை தட்டி எழுப்பி, நடந்த விவரத்தை சொல்லியதை அடுத்து , இதுகுறித்து நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ், ஓமலூர் டி.எஸ்.பி சங்கீதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். துப்பறியும் மோப்ப நாய் லில்லி, தடய அறிவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். நங்கவள்ளி பொறுப்பு காவல் ஆய்வாளர் தொல்காப்பியன் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் கத்தி முனையில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி கொள்ளையர்கள் மூதாட்டியின் கழுத்தில் கத்தியை வைத்ததால் மூதாட்டிக்கு கழுத்தில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.