நாடாளுமன்ற நியமன உறுப்பினர் பதவி, தடகள வீரர்களுக்கும் விளையாட்டுத்துறைக்கும் கிடைத்த கௌரவம் : பி.டி. உஷா

நாடாளுமன்ற நியமன பதவி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என சேலம் வந்திருந்த இந்திய தடகள வீராங்கனை பிடி உஷா தெரிவித்துள்ளார்….

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விளையாட்டுத்துறையில் ஊக்கப்படுத்த வேண்டும் என பி.டி. உஷா வேண்டுகோள்…

சேலம் விநாயக மிஷின் ஆராய்ச்சி நிறுவன நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் சார்பாக இன்று ஏழு கிலோ மீட்டர் தூர மாரத்தான் ஓட்ட பந்தயப் போட்டி நடைபெற்றது. சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியை தேசிய தடகள வீராங்கனை பத்மஸ்ரீ பி.டி. உஷா துவக்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய அவர், மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி தனக்கு வழங்கி இருப்பது இந்திய விளையாட்டு துறைக்கு அளிக்கப்பட்ட கௌரவம் ஆகும். குறிப்பாக தடகள வீரர்களுக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் என பெருமிதம் தெரிவித்தார். தற்போதுள்ள தடகள வீரர்களில் நீரஜ் சோப்ரா நம்பிக்கை அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார்.

இதேபோன்று தடை ஓட்டம் , 100 மீட்டர் ஓட்டங்களில் வீரர்கள் நல்ல எதிர்பார்ப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் விளையாடிய காலத்தில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு விளையாட்டு துறைக்கு செய்யப்படவில்லை. தற்போது மத்திய அரசு விளையாட்டு துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. பாராளுமன்றத்தில் தனக்கு பேச வாய்ப்பளிக்கும் போது விளையாட்டு துறை சார்ந்தே கோரிக்கைகளை முன்வைப்பேன். விளையாட்டு துறைக்கு இந்திய பிரதமர் அவர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வீரர்களை ஊக்கமளித்து வருகிறார்.

வீரர்களை அடிக்கடி சந்தித்து அவர்களின் விளையாட்டுத் திறன் எதிர்கால திட்டங்கள் குறித்து கலந்துரையாடி தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறார். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு நாடு திரும்பும் வீரர்களை சந்தித்து பேசி அவர்களை கௌரவப்படுத்தி வருகிறார். இது விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. இது போன்ற நடவடிக்கைகளால் அடுத்த ஒலிம்பிக்கில் நமது வீரர்களிடம் இருந்து நிறைய பதக்கங்களை எதிர்பார்க்கலாம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published.