அமலாக்கத்துறை அதிரடி..! விவோ நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை..!!

விவோ நிறுவனத்திற்கு தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், டெல்லி, உத்தரப்பிரதேசம், மேகலாயா உள்ளிட்ட இடங்களில் உள்ள விவோ தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த விவோ விநியோக அமைப்பின் மீது, டெல்லி காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

போலி நிறுவனங்கள் வழியாக பணப் பரிவர்த்தனை செய்யும் நோக்கில், போலி ஆவணங்கள் தயாரிக்க பட்டிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும், தாங்கள் தயாரிக்கும் போன்களுக்கு தனித்தனி ஐஎம்இஐ எண்ணை கொண்டிருக்க வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 2017-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், விவோ நிறுவனத்தின் 13,500 ஸ்மார்ட்போன்கள் ஒரே ஐஎம்இஐ எண்ணைக் கொண்டிருந்தது 2020-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதையடுத்து, உத்தரப் பிரதேச காவல்துறை, விவோ நிறுவனம் மீது வழக்கு பதிவு செய்தது. ஏற்கனவே விதிக்கு புறம்பான முறையில் அந்நிய பரிவர்த்தனைகள் ஈடுபட்டதாகக் கூறி ரூ.5,551 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த ஆண்டில் அமலாக்கத் துறையின் சோதனைக்கு உள்ளாகும் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.