HR உன்ன கூப்பிடுறார்…(14)

HRன் ஆற்றுப்படுத்தும் (Counselling)கலை

ஆற்றுப்படுத்துதல் என்பது ஒரு அற்புதமான கலை, தாய்க்குரிய அன்பும் தந்தைக்குரிய பாசமும் அதில் ஊடுருவியிருக்கும். குறைகளை மட்டுமே கொட்டும் இடமல்ல அது, மாறாக நிறைகளையும் அதை நாம் தாண்டிவந்த முறைகளையும் சொல்லும் இடமும் கூட என்றுதான் நினைக்க வேண்டும். 

ஆற்றுப்படுத்துதலுக்குத் தேவையான இரண்டு, ஒன்று, சொல்பவரிடம் நம்பிக்கையும் இரண்டாவது கேட்பவரிடம் உண்மையும் இருக்கவேண்டும், இதைத்தாண்டி இன்னும் பல நல்ல கூறுகள் இருப்பது கூடுதல் சிறப்பாக அமையும். நான் போனவாரம் சொல்லியிருந்தேன். ஒருவர் மனம் நொந்து சொல்வதை/ பகிர்வதை மனம்கோணாமல் செவிசாய்க்கும் எல்லோருமே சிறந்த ஆற்றுப்படுத்துநர் (counsellor) தான் என்று. 

HR Career Path: Types of Jobs, Salary, and Qualifications | FlexJobs

இதைக்கேட்ட பலரும் அப்டினா நானும் இந்த வேலையை (counselling) செஞ்சிருக்கேன், செஞ்சிக்கிட்டும் இருக்கேன் எனச்சொன்னது பெருமிதமாக இருந்தது. ஆம், நமக்குத் தெரிந்தவர் வாழ்வில் தடுமாறும் போதோ அல்லது தடம் மாறும்போதோ அவர்களை நெறிப்படுத்துவது மற்றும் முறைப்படுத்துவது இந்த ஆற்றுப்படுத்தும் கலைக்குள்தான் வரும். 

எனக்குத் தெரிந்து நானே 15 வருடங்களுக்கு முன்பு Camera வை திருப்பி என்னை நானே ஒரு படம் எடுத்த நினைவு, அப்போது அதற்கு யாரும் செல்பி என்று பெயரிடவில்லை ஆனால் இப்போது அது மிகப்பெரிய பேசுபொருளாகி விட்டது. அதுபோல இந்த ஆற்றுப்படுத்தும் கலையை நம்மில் பலர் பலருக்கு செய்திருப்போம், அதே நேரத்தில் அதைக் கொஞ்சம் முறைசார்ந்து செய்யும்போது இன்னும் சிறப்புற அமையும்.

நிறுவனத்தில் ஆற்றுப்படுத்தும் வேலையை செய்யும் HRக்கு எந்தக்குறையும் இருக்கூடாதுதானே எனும் மெல்லிய நகைப்பு உங்களிடம் இருக்கலாம். மருத்துவர் நோயாளிகளை கவனிக்கிறார், அவருக்கு எதாவது நோய் ஏற்படும்போது இன்னொரு மருத்துவரை அணுகுவார் அல்லவா அதுபோல்தான்.

Investment in our People delivers the best results! | Dardan Security

நான் வேலைபார்த்த/பார்க்கும் இடங்களில் சில தடுமாற்றங்கள் எனக்கு ஏற்பட்டபோதெல்லாம் சரியான புரிதலோடு என்னை வழிநடத்திய பல நல்ல உள்ளங்களை நான் நன்றியோடு நினைத்துப்பார்க்கிறேன், குறிப்பாக நான் TVS நிறுவனத்தில் மனிதவளத்துறையில் இருந்தபோது சிறப்புற வழிநடத்திய மதிப்புமிகு சவுந்தர்ராஜன் VP-HR, மது ரகுநாத் CHRO, விக்டர் VP-HR மற்றும் இன்னும் பலர் இந்த வரிசையில் உள்ளனர். 

இவர்களிடம் பெற்ற இந்த ஆக்கமும் ஊக்கமும், இப்போது நான் பணிபுரியும் நிறுவனத்தில் உள்ள ஊழியர்களிடம் சிறப்பான அணுகுமுறையை கையாள வைக்கிறது. இந்த நன்றியுணர்வும் பெருமித உணர்வும் உங்களால் எத்தனையோ பேருக்கு நடந்திருக்கும் அல்லவா, அப்படியென்றால் நீங்களும் சிறந்த ஆற்றுப்படுத்துநர்தான்.

ஆற்றுப்படுத்தும் பணி பல நிறுவனங்களில் மனிதவளத்துறையினர் ஏன் கையாளுகின்றனர்?  HR என்பவர் பொதுவானவர், ஒரு நிறுவனத்தில் வெவ்வேறு துறைகள் இருக்கும் அந்தத்துறைகளையெல்லாம் ஒருங்கிணைக்கும் வேலை HR ருடையது, ஒரே பார்வை என்பதைவிட பரந்துபட்ட பார்வை இருப்பதுதான் ஆற்றுப்படுத்தும் கலைக்குத் தேவையான முக்கிய மூலக்கூறு.

AI software created to help psychotherapists enhance skills | Newsroom

அப்படியானால் அந்தந்த துறைசார்ந்த யாருமே இதில் பங்கெடுப்பது இல்லையா? முதலுதவி என்று சொல்வார்கள் அல்லவா, அதை செய்வது அவர்கள்தான், சூழல் தீவிரமாகும்போது அவர்கள் அணுகும் இடம் மனிதவளத்துறைதான்.

அதெல்லாம் இருக்கட்டும் ஏதோ ஒரு கதையோடு ஆரம்பிகிறேன்னு போனவாரம் சொன்னிங்க, கதையவே காணாம். கதை ஆரம்பிக்கிறது கவனமாகக் கேட்போம். ஆற்றுப்படுத்துதல் என்பது இப்படி இருந்தால் நலம் என்பதை எடுத்துரைக்கும் படம். இயக்குநர் பாலுமகேந்தர் அவர்கள் இயற்றிய மலையாளப் படமான

ஓலங்கள் படத்தைப் பற்றிதான் இங்கு நாம் பேசப்போகிறோம். உங்களில் சிலர் இப்படத்தை பார்த்திருக்கலாம், 1982ல் வெளிவந்த படம், நான் 2018ல் இப்படத்தை பார்ப்பதற்கான வாய்ப்புக் கிடைத்தது.

கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் வாழ்வு  சிறப்பான, மகிழ்வான குடும்பமாக அவர்களது பெண் குழந்தையோடு செல்கிறது. இப்படி இருக்கும் சூழலில் அருட்தந்தை ஜான் அவர்கள் ஒரு ஆண் குழந்தையோடு வருகிறார், இந்தக்குழந்தையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள், ஏனென்றால் இவனது தாய் இறந்துவிட்டால், இவனை நான் இன்னும் ஒரு மாதத்தில் வெளிநாட்டுக்குச் கூட்டிச்சென்று படிக்க வைக்கிறேன் அதுவரை உன்னோடே இருக்கட்டும் என்று கதாநாயனிடம் சொல்கிறார், அவரும் இந்தச்  சிறுவன் எனது இறந்துபோன  நண்பனின் மகன் என்று சொல்லி வீட்டில் தங்க வைக்கிறார், அவரது மனைவி எவ்விதப்பாகுபாடின்றி தனது சொந்தப்பிள்ளை போல கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார். 

Psychotherapy Vector Vector Art & Graphics | freevector.com

நாட்கள் நகர்கிறது, திடீரென்று ஒருநாள், இறந்துபோனதாக சொன்ன அந்த நண்பர் (ஜார்ஜ்) எதேச்சையாக வீட்டிற்கு வருகிறார். கதாநாயகிக்கு சந்தேகம் வருகிறது. ஆறு வருட திருமண வாழ்வில் விரிசல் விழுகிறது. இப்போது சிறிது பின்னோக்கிச் செல்வோம் (சிறு Flashback).

இளமைக்காலத்தில் கதாநாயகன் வேறொரு ஊரில் இருந்தபோது ஒரு பெண்ணோடு காதல் ஏற்படுகிறது, சூழல் காரணமாக இருவரும் பிரியவேண்டிய நிலை, அவர்களது காதலுக்குச் சான்றாக இச்சிறுவன் பிறக்கிறான். இச்சிறுவன் பிறப்பதற்கு முன்பே கதாநாயகன் அப்பெண்ணைப் பிரியவேண்டிய (ஏமாற்றவில்லை) சூழல் ஏற்படுகிறது. சிறுவன் பிறந்த பிறகு அப்பெண்ணும் இறந்துவிடுகிறார். அவ்வூரில் உள்ள அருட்தந்தைதான் (Fr.John) அச்சிறுவனை வளர்க்கிறார். 

இவ்விசயம் அனைத்தும் அவரது நண்பர் மூலமாக கதை நாயகிக்குத் தெரியவந்ததும், தனது மகளை மட்டும் தன்னோடு கூட்டிக்கொண்டு கோபத்துடன் தாய்வீட்டிற்கு சென்றுவிடுகிறார். 

நடந்த அனைத்தையும் தன் தாயிடம் விவரிக்கிறார். ஆற்றுப்படுத்தும் கலைக்கே உண்டான விதை கதாநாயகியின் தாயினுடைய சொல்லில்தான் அடங்கியுள்ளது. இங்குதான் கிளைமாக்ஸ், நடந்த அனைத்தையும் பொறுமையோடு கேட்டபிறகு அந்தத் தாய் “உன் கணவருடைய நண்பரின் பிள்ளை என்று சொன்னதுக்கே இவ்வளவு பாசத்தோடு கவனித்தாயே, இப்போது அந்தப்பிள்ளையே உன் கணவருடையது தான் எனத் தெரிந்துகொண்டாய், ஆதலால் இன்னும் அதிக பாசத்தோடு கவனித்துக்கொள்” என்கிறார்.

Women Psychologist Stock Illustrations – 393 Women Psychologist Stock  Illustrations, Vectors & Clipart - Dreamstime

இங்கு நீங்கள் கேள்வி கேட்கலாம், அந்தக் கதாநாயகன் செய்தது துரோகம் இல்லையா? என்று, நடந்தவற்றைப் பற்றி மட்டுமே மீண்டும் மீண்டும் பேசினால் வாழ்வில் மீண்டு வருவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியே பேசினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை, தீர்வை நோக்கி நகர்வதே நல்ல ஆற்றுப்படுத்தலுக்கு இருக்கவேண்டிய தலையாய பண்பு.

அதைத்தான் இந்தக் கதையின் இறுதியில் தாயினுடைய சொல் மூலம் இயக்குநர் வைத்திருப்பார். இந்தப் பண்பு மாண்புமிக்கது. அந்த மாண்பை யாரெல்லாம் கடைபிடிக்கிறார்களோ அவர்கள் அனைவருமே நல்ல ஆற்றுப்படுத்துநர்தான்.எனது பணியில் நான் கடைப்பிடித்த இந்த ஆற்றுப்படுத்தும் மாண்பை அடுத்தவாரம் உங்களோடு பகிர்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  1. Weekly write up is interesting and inspiring.

  2. The way you narrate the titiled subject and making it interesting to read is awesome. Expecting more……

  3. Daniel Rajanyagam says:

    Nice your linguistic is good ?

  4. Sivaramakrishnan R says:

    ????