ஒரு பக்கம் கொரோனா; மறுபக்கம் காலரா… இரண்டையும் சமாளிக்க தமிழிசை கொடுத்த ஐடியா!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தெலுங்கானா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா இன்று மதியம் நடைபெறுகிறது. இதையொட்டி இன்று அதிகாலை கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரிக்கு மகாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.

 பின்னர் அங்கிருந்த கோயில் யானையிடம் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆசி பெற்றார். அப்போது கோயில் தீட்சிதர்கள் ஆளுநருக்கு பிரசாதம் வழங்கினர். பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்த தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர்,

ஆனி திருமஞ்சன அபிஷேக விழாவில் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது பொதுமக்களுக்கு தன்னம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் மன உறுதியையும் அளிக்கிறது. ஆன்மீக விழாக்களுக்கு வரும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து நல்ல பாதுகாப்பு இருக்கிறது. அதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

 கொரோனா தொற்று போன்ற பெருந்தொற்று வராமல் மக்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். சத்துள்ள உணவுகளையும், பாரம்பரிய உணவுகளையும் அதிகம் சாப்பிட வேண்டும். நமது பிரதமர் மோடி சொல்வதைப் போல உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். யோகா செய்ய வேண்டும். மன பலத்தோடும், உடல் பலத்தோடும் அனைவரும் வாழ வேண்டும். புதுச்சேரியில் கொரோனா தொற்று சற்று அதிகரித்து இருக்கிறது. எல்லா மாநிலங்களில்ம் அதிகரித்து வருகிறது. 

அதனால் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணிய வேண்டும். கூட்டமாக இருக்கக் கூடாது என்ற தகவலை தெரிவித்து இருக்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்து இருக்கிறோம். அரசு அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. காரைக்காலில் காலரா போன்ற திடீர் நோய் பரவியது. ஆனால் அரசு துரிதமாக செயல்பட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 

வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உரிய அறிவுரை வழங்கினேன். புதுச்சேரி முதலமைச்சர் காரைக்கால் வந்து பார்த்துவிட்டு சென்று இருக்கிறார்கள். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் ஒரு ரூபாய்க்கு முகத்கவசம் வழங்கப்பட்டது. மக்கள் முக கவசம் அணிகிறார்கள். கொரோனா 3 அலைகளை பார்த்த பிறகு மக்களே எச்சரிக்கையாக இருக்கிறார்கள் என கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.