தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – நடிகவேள் எம்.ஆர்.ராதா

தமிழ் சினிமாவில் சிவாஜியின் பாதிப்பில்லாத நடிகர்கள் என எவரையும் குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. ஆனால் அப்படிப்பட்ட நடிகர் திலகமே வியக்கும் அளவுக்கு தன் தனித்த நடிப்பால். புகழ்பெற்றவர் தான் நடிக வேள் எம் . ஆர் ராதா என்று சொன்னால் மிகையில்லை . பலே பாண்டியா படத்தில் வரும் மாமா மாப்ளே எனும் ஒரு பாடல் போதும் .அதில் சிவாஜி எம் ஆர் ராதா நடிப்பில் யார் பெஸ்ட் என்ற பட்டிமன்றமே நடத்தலாம். அந்த அளவுக்கு தன் தனி நடிப்பால் அனைவரையும் ரசிக்க வைத்து இன்றுவரை அழியாப்புகழை அடைந்தவர் எம் ஆர் ராதா அவர்கள். இன்னும் சொல்லப்போனால் அந்த சிவாஜிக்கே நடிப்பில் குருவாக இருந்து தன் சரஸ்வதி நாடக சபாவில் சேர்த்துக்கொண்டு வழிகாட்டியாகவும் குருவாகவும் இருந்தவர்.
அவரது பலமே அவரது நடிப்பு பாணிதான் . புருவங்களை சுருக்கி வில்லத்தனம் காட்டுவதிலாகட்டும், சட்டென குரலை மாற்றி நக்கல் நையாண்டி செய்வதிலாகட்டும் இந்திய அளவில் ஏன் உலக அளவில் கூட அவருக்கு முன் மாதிரிகள் இல்லை . ஓரளவு குறிப்பிட்டு சொல்வதானல் ஹாலிவுட் நடிகர் ஜேமஸ் காக்னியை சொல்லலாம் . பப்ளிக் எனிமி வொய்ட் ஹீட் போன்ற கறுப்புவெள்ளை கால படங்களில் நடித்து புகழ் பெற்றவர். அவரும் சிறு வில்லனாக நடித்து பின் எதிர்நாயகனாக நடிப்பால் கவர்ந்தவர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை சாமிநாயக்கன் தெருவில் வசித்த ராஜ கோபால் நாயுடு – ராஜாம்பாள் தம்பதிகளின் 2-வது மகனாக 1908-ல் பிறந்தவர். எம்.ஆர்.ராதா மூன்றாம் வகுப்பு வரைதான் படித்தார். நாடகத்தில் நடிக்கும் ஆசை சிறு வயதிலேயே வந்துவிட்டதால், மேற்கொண்டு படிக்கவில்லை. “டப்பி” ரங்கசாமி நாயுடு கம்பெனி, சாமண்ணா கம்பெனி, ஜெகந்நாத அய்யர் கம்பெனி என்று பல்வேறு நாடகக் குழுக்களில் ராதா நடித்தார்.
நடிப்புடன், கார் டிரைவர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன் ஆகிய வேலைகளையும் ராதா கற்றுக்கொண்டார். நவாப் ராஜமாணிக்கம், சி.எஸ். ஜெயராமன், கே.சாரங்கபாணி, யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை, பி.டி.சம்பந்தம் ஆகியோரும், இவருடன் நாடகத்தில் நடித்து வந்தனர். இத்தனை பேர் நடித்தாலும் எம். ஆர் ராதா மட்டும் தான் நாடக உலகில் ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். மேடையில் அவர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் கைதட்டலில் கூரை எகிறும். . ரசிகர்களை குஷிப்படுத்த மேடையில் திடீரென புல்லட் பைக்கை ஓடி வந்து சாகசங்கள் செய்வார் . இப்படி தன்னை வித்தியாசப்படுத்தி காண்பிப்பதில் முனைப்பாக இருந்தார் .

பிறகு சொந்தத்தில் நாடகக் கம்பெனி தொடங்கினார். “ரத்தக்கண்ணீர்”, “தூக்கு மேடை”, “லட்சுமிகாந்தன்”, “பம்பாய் மெயில்”, “விமலா”, “விதவையின் கண்ணீர்”, “நியூஸ் பேப்பர்”, “தசாவதாரம்”, “போர் வாள்” போன்ற நாடகங்களை நடத்தினார். இவற்றில் மிகவும் புகழ் பெற்றது “ரத்தக்கண்ணீர்”.
3,500 தடவை மேடை ஏறிய நாடகம் இது. இதில், செய்தித்தாளை ராதா படிக்கும் ஒரு சீன் வரும். அன்றாடம் வரும் செய்தித்தாளை கையில் வைத்துக்கொண்டு, அதில் வரும் செய்திகளைப் படித்து “கமெண்ட்” அடிப்பார்.
இதற்காகவே, ரத்தக்கண்ணீர் நாடகத்தை பலமுறை பார்த்தவர்கள் ஏராளம். ராதா நாடகங்களில் பிரமாண்டமான காட்சிகள் எதுவும் கிடையாது. ஒரு கறுப்புத்திரை; ஒரு வெள்ளைத்திரை. இதை வைத்துக்கொண்டே, தன் நடிப்பு ஆற்றலைக் கொண்டு, நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விடுவார்.
ஈ.வெ.ரா.பெரியார் மீதும், அவருடைய கொள்கைகள் மீதும் மிகுந்த பற்று உடையவர், ராதா. தன் நாடகங்கள் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பினார். நாடகத்தில் ராதாதான் ராமர்! ஒரு கையில் மதுக்கலயம், இன்னொரு கையில் மாமிசம்! நையாண்டி வசனங்கள் ஏராளம். இப்படி தொடர்ந்து பெரியாரின் கருத்துக்களை நாடகமாக போடுவதால் ஆட்சியாளர்களின் கோபத்துக்கு ஆளானார் அவரது நாடகங்கள் என்றாலே போலீசுக்கு தலைவலி . பல நாடகங்களை பாதியில் நிறுத்தி கைது செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக அவரது 6 நாடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
திருச்சியில் “போர்வாள்” என்னும் நாடகம் நடத்தியபோது ராதாவுக்கு “நடிகவேள்” என்ற பட்டத்தை பட்டுக்கோட்டை அழகிரி வழங்கினார். 1962-ல் “கலைமாமணி” பட்டம், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தினரால் வழங்கப்பட்டது.
சினிமாவில் அவருக்கு முதல் படம் , “ராஜசேகரன்” 1937ல் வெளியானது . இதில், மாடியில் இருந்து, கீழே குதிரை மீது குதிக்கும் காட்சியில் நடித்தபோது, கால் எலும்பு முறிந்துவிட்டது. குணம் அடைந்த பிறகு “பம்பாய் மெயில்” என்ற படத்தில் நடித்தார். பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி, நாடகங்களில் நடித்து வந்தார்.

இதன்பிறகு தான் பராசக்தி வெற்றியைத் தொடர்ந்து நேஷனல் பிகசர்ஸ் பெருமாள் முதலியார் தயாரிக்க 1954ல் ரத்தக்கண்ணீர் வெளியாகி அவருக்கு மிகப்பெரிய பேரும் புகழையும் பெற்றுத்தந்தது
மூன்று ஆண்டுகளுக்குப்பின் லட்சுமி பிக்சர்ஸ், எம்.ஆர்.ராதாவை கதாநாயகனாக நடிக்க வைத்து “நல்ல இடத்து சம்பந்தம்” என்ற படத்தைத் தயாரித்தது. இதில் ராதாவுக்கு ஜோடியாக சவுகார் ஜானகி நடித்தார். 1959-ல், சிவாஜி கணேசனுடன் எம்.ஆர்.ராதா இணைந்து நடித்த “பாகப்பிரிவினை” மகத்தான வெற்றி பெற்றதுடன், எம்.ஆர். ராதாவின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. சிவாஜியுடனும், எம்.ஜி.ஆருடனும் இணைந்து ஏராளமான படங்களில் ராதா நடித்தார். குறுகிய காலத்தில் 150 படங்களில் நடித்து முடித்தார்.
7 ஆண்டு ஜெயில்
1967 தேர்தலுக்கு முன், எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். இந்த சம்பவம், தமிழ்நாட்டையே குலுக்கியது. சிகிச்சைக்குப்பின், இருவரும் குணம் அடைந்தனர். எம்.ஆர்.ராதா மீது தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு 5 ஆண்டாக குறைக்கப்பட்டது. 1974-ல் விடுதலையானார்.

மீண்டும் சினிமா
விடுதலையாகி வெளிவந்ததும், மு.க.முத்துவுடன் “சமையல் காரன்” படத்தில் நடித்தார். தொடர்ந்து “டாக்சி டிரைவர்”, “பஞ்சாமிர்தம்”, “வண்டிக்காரன் மகன்”, “ஆடு பாம்பே” ஆகிய படங்களில் நடித்தார். மேலும் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்தார்.
1979 செப்டம்பரில் திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் உள்ள வீட்டில் ராதா தங்கியிருந்தார். அந்த சமயத்தில் அவர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் இன்றி, 17-9-1979 காலை, 71-வது வயதில் ராதா காலமானார்.
எம்.ஆர்.ராதா இளமைப்பருவம் முதலே தந்தை பெரியாரின் கொள்கையில் ஆழ்ந்த பற்றும், பிடிப்பும் கொண்டவர். அதனால்தான் என்னவோ தந்தை பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17-ந்தேதி மரணம் அடைந்தார்.