புத்தகப் பரிந்துரை : நீர் எழுத்து
இயக்குனர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படம் ரிலீசுக்காக எல்லாரும் மரண வெயிட்டிங்ல இருப்பீங்களே? அப்படியே பாகுபலி பார்ட் 3 கண்ணுல வந்து போகுமே. எனக்கும் வருதே. எழுத்தாளர் கல்கி எழுதுன “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்துதான் இந்த படம் எடுக்கப்படுதுனும், அதுல ஹீரோ ராஜராஜ சோழனும் நமக்கு எல்லாருக்குமே தெரியும். ஆனா அதென்ன டைட்டில் ‘பொன்னியின்’ செல்வன்? ‘பொன்னினா’ என்ன? அரிசியா? (நாவல் படித்தவர்களுக்கு தெரியும்). சோழ நாட்டின் அரசன் ராஜராஜ சோழன். திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய அந்நாட்டின் செழுமைக்கும், வளமைக்கும் ஒரே காரணமாகத் திகழ்ந்தது ‘காவிரி’ ஆறு. அட நல்லா படிங்க ‘காவேரி’ இல்ல ‘காவிரி’. அதன் இன்னொரு பெயர் தான் பொன்னி. (அதனால் தான் பொன்னியின் செல்வன்).
சரி. பெயர் காரணத்திற்கு வருவோம். தென்பெண்ணை ஆற்றைப் போலவே, முன்பு காவிரியிலும் பொன் தாது (gold particles) அடித்து வரப்பட்டிருக்கலாம்(உபயம்: கர்நாடகா-கோலார்), அதனால் ‘பொன்னி’ எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அப்படியானால் ‘காவிரி’ என்றால் என்ன பொருள்? ‘கா’ என்றால் சோலை. தான் பாயும் இடங்களில் எல்லாம் சோலைகளை விரிக்கும் (உருவாக்கும்) தன்மை கொண்டது எனப் பொருள். நல்லாருக்குள்ள?
இப்படி செல்லும் இடங்களிலெல்லாம் சோலைகளை உருவாக்கிய காவிரியில், தற்பொழுது தண்ணீர் வரத்து குறைவதற்கு கர்நாடகாவிலிருந்து குறைவாக தண்ணீர் திறந்து விடுவது மட்டுமே காரணமல்ல, நாம் கதகதப்பாய் உறிஞ்சி குடிக்கும் காப்பியும் தான்னு சொன்னா உங்களால நம்ப முடியுதா? தேன்கூடு உடைந்து காவிரியில் கலந்துவிட்டால் தண்ணீர் மாசடைந்து விடும் என்று சிலப்பதிகாரத்தில் கவுந்தியடிகள் பதறுகிறார். இன்று கழிவுகளும் காவிரியும் கட்டிப்புரழ்வது கண்டால் கவுந்தியடிகள் என்ன ஆவரோ? மணற்பாங்கான நிலத்தில் அணை கட்டுவது கடினம், அப்படியொரு இடத்தில் காட்டாறான காவிரியை தடுத்து, அதுவும் கடைக்காலே (அஸ்திவாரம்) இல்லாமல் கல்லணை கட்டப்பட்டிருந்த தொழில் நுட்பத்தைப் பார்த்து வியந்தோம் எனக் கூறிய பிரிடிஷ் பொறியாளர் திரு. ஆர்தர் காட்டன் தற்கால அதிநவீன தெர்மாகோல் தொழில்நுட்பதை கண்டால் மூர்ச்சையாகிவிடுவாரோ?இதெல்லாம் “எங்கப்பா கத்துக்கிட்ட?” னு (ஆதவன் படத்தில் வரும் சரோஜாதேவி style ல) நீங்க கேக்குறது புரியுது. நம்ம எழுத்தாளர் நக்கீரன் எழுதிய “நீர் எழுத்து” புத்தகத்துல தான் இதையெல்லாம் படிச்சேன்.
அப்படினா இது காவிரியைப் பற்றிய புத்தகமா?
காவிரியைப் பற்றி மட்டுமல்ல, வைகை, பாலாறு, தாமிரபரணி, நொய்யல், சிறுவாணி இப்படி தமிழக ஆறுகள் பலவற்றின் இயற்கை பெயர்களும், வடமொழி பெயர்களாக திரிந்துள்ளது பற்றியும், அதற்கு புனையப்பட்டுல புராணங்கள் பற்றியும், அந்த நதிகளைச் சுற்றியுள்ள பண்பாட்டு கூறுகளைப் பற்றியும், அவற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைகள், அணைக்கட்டுகளால் தூண்டப்படும் நிலநடுக்கங்கள், இணைந்துள்ள துணையாறுங்கள், ஆறுகள் இணைப்பு பற்றிய நன்மை, தீமைகள், வெட்டப்பட்டுள்ள கால்வாய்கள் மற்றும் அவற்றின் தற்கால நிலை பற்றியும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளார்.
அப்படினா! இது “தமிழக ஆறுகளைப்” பற்றிய புத்தகமா?
அட தமிழக ஆறுகள் மட்டுமல்ல, தமிழகத்தில் எவ்வளவு குளங்கள் உள்ளது? அவற்றை எந்த காலத்தில் எந்த மன்னர் வெட்டினார்? அதிலுள்ள தொழில்நுட்பங்கள் என்ன? அகழி, இலஞ்சி, நீராழி, கயம், கிடங்கு, குட்டை, குட்டம், பெருங்குட்டை, குண்டம், குண்டு, சிறை, சுனை, சேங்கை, தடம், தடாகம், புனற்குளம், பொய்கை, வலயம், வாவி… இப்படி நீளும் குளங்களின் தன்மைக்கு ஏற்றார்போல் உள்ள பெயர்கள் என்ன? மேலும் தமிழகத்தில் உள்ள ஏரிகள், கரை, மதகு, கலிங்கல், கோடி போன்ற அதன் உறுப்புகள், நீர் கசிவதை தடுக்கக் அமைக்கப்படும் ஊடுசுவரே இல்லாமல் உருவாக்கப்பட்ட ஏரிகள், பாசனத்திற்காக அவற்றில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் பற்றியெல்லாம் கூறுவதோடு, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என ஒவ்வொரு திணைக்கும் அதன் தன்மைக்கு ஏற்றவாரு வெவ்வேறு வகையான ஏரிகளை பழந்தமிழர்கள் ஏற்படுத்திருப்பதையும் அதை வண்டு கூட மாசுப்படுத்தி விடாமல் மிகவும் சிரத்தை எடுத்து பராமரித்திருந்தது பற்றியும் கூறும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது.
அப்படியானல், இது “தமிழக நீர்நிலைகள்” பற்றிய புத்தகமா?
நானும் அப்படி தான் நெனச்சேன். ஆனால் ஆறு, ஏரி, குளங்களோடு சேர்த்து நமது வீட்டுக்குழாய்களின் ரத்த ஓட்டமான கரப்புநீர் (நிலத்திலுள்ள நீர்). ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெய்யும் மழைநீர் நிலத்தடியில் நீரகமாக மாறியுள்ளது. அதன் தற்பொழுதைய நிலை. நிலத்தடி நீரை உபயோகப்படுத்ததான் கிணறு வெட்டும் முறை பயன்பாட்டிற்கு வந்தது. ஆனால் கிணறு வேறு, கேணி வேறு என்று கூறும் ஆசிரியர் கிணறுகளின் சில வகைகளையும் பட்டியலிட்டுள்ளார். இதையெல்லாம் கூட விடுங்க. ஆறு, ஏரி, குளம் இவையெல்லாம் எவ்வாறு மாசடைந்து வருகின்றன? இந்த புத்தகத்தில் இவர் கூறியதை படித்ததும் நாமெல்லாம் போர்வெல் போட்டு சுத்தமான தண்ணியதான குடிச்சிட்டு இருக்கோம்னு மனச தேத்திட்டு இருந்தேன். ஆனா, போர் போடும்போது தண்ணீரைத் தேடி போர்வெல் கீழே போக போக அடியாழத்தில் இருக்கும் பாறைகளில் இயல்பாக இருக்கும் புளுரைடு, க்ளோரைடு, நைட்ரேட், பெர்ரஸ் போன்ற சில தனிமங்கள் நீரில் கரைந்து வந்து பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக ஆசிரியர் கூறும்போது என் அடிவயிரைப் போலவே, கண்டிப்பாக உங்களுக்கும் கலக்கும்.
அப்போ, தமிழக நீர்வளம், அவற்றின் வரலாறு, பண்பாடு மற்றும் தற்காலத்தில் அவற்றின் மாசுபாடு பற்றி பேசும் புத்தகம். சரிதானேனு கேக்குறீங்க?
பாதி சரி. அப்போ மீதி?
உயிர்களுக்கு ஆதாரமாக விளங்கும் நீர், சர்வதேச அரசியலால் பாட்டிலுக்குள் அடைப்பட்டு புட்டி நீராகும் நீர் வணிகம், தண்ணீர் அரசியல், நீர் ஏன் நீராக இருக்குனு சொல்லும் நீர் அறிவியல், வெப்ப மண்டல பகுதியைச் சேர்ந்த தமிழக மக்களின் அனைத்து சடங்கு சம்பிரதாய விழாக்களும் இயல்பாகவே நீரைச் சார்ந்து அமைய, நெருப்பு பண்பாடு உள்ளே வந்ததும், மின்சாரத்தை கடத்தாத தூய நீரில் சாதியம் கறைந்து தீட்டுக் கடத்தியாக மாறுவது, மழை உருவாகும் அறிவியல், தென்னிந்தியாவின் மழைபொழிவை பாதிக்கும் சர்வதேச புவியியல் நிகழ்வுகள், மழை, பணி, வெயில், காற்று, பருவக்காலங்கள் என அத்தனை குறித்தும் சொல்லபட்ட பழமொழிகள், தமிழக நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட கதைகள் என தண்ணீரின் 360 டிகிரியையும் (இது அந்த நேரேதிர் 360 டிகிரி அல்ல, மெய்யான 360 டிகிரி 😉) ஆவணப்படுத்தும் இப்புத்தகம் ஆசிரியரின் கூற்றைப் போலவே “தமிழகத்தின் தண்ணீர் ஆவணம் தான்”
“நீரின்றி அமையாது உலகு” என சங்க காலத்தில் முழங்கும் திருக்குறள் முதல் சமீபத்தில் வெளியான உலக வங்கி முதலான பன்னாட்டு நிறுவனங்களின் அறிக்கை வரை, நீர் அரசியலை அலசி எடுத்துள்ள ஆசிரியர், பிரச்சனைகளை மட்டும் கூறி பாழுங்கிணற்றில் தள்ளிவிடாமல், தமிழகம் முதல், அண்டை மாநிலங்கள், அயல் நாடுகள் வரை நீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்ட வெற்றிக் கதைகளையும், சில பரிந்துரைகளையும் கூறி, வறண்ட நாவிற்கு உயிர் நீர் ஊற்றியுள்ளார் 🙏🏽.
எல்லோரும் படித்து விழிப்புணர்வு அடைய வேண்டிய முக்கியமான புத்தகம். என்றாலும் அரசு அதிகாரிகளும் (எதிர்கால அதிகாரிகளும்), அரசியல்வாதிகளும் படிக்க வேண்டிய முக்கியமான புத்தகம்.
நூல்: நீர் எழுத்து
ஆசிரியர்: நக்கீரன்
வெளியீடு: காடோடி
விலை: 250
WhatsApp order: 8072730977