டிரெண்டாகும் பில்கேட்ஸ் ரெஸ்யூம்..!! கருத்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..!!
பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் பயோடேட்டா 48 ஆண்டுகள் கழித்து தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.ஒவ்வொருவரும் தங்களுக்கான ஒரு வேலையை தேர்ந்தெடுக்க தங்களுடைய சுய விவரம் (Resume) அடங்கிய தொகுப்பை உருவாக்கி அதை அவர்களுக்கு விருப்பமான நிறுவனத்தில் கொடுப்பது வழக்கம்.
இந்த சுயவிவரம் தான் வேலை தேடுபவர் குறித்து, குறிப்பிட்ட நிர்வாகத்துக்கு அறிமுகத்தை வழங்குகிறது. இந்த நிலையில் 66 வயதாகும் உலகின் முக்கிய பணக்காரரான பில்கேட்ஸ், 48 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது தனது 18வது வயதில் முதன்முதலாக வேலைக்கு அவர் தயாரித்த சுயவிவரம் (Resume) தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து தனது கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
அதில் எனது பயோடேட்டா-வை விட தற்போது இருக்கும் இளைஞர்களின் பயோடேட்டா நன்றாக இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறேன். நீங்கள் சமீபத்திய பட்டதாரியாக இருந்தாலும் அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும் சரி, 48 ஆண்டுகளுக்கு முன்பு நான் செய்ததை விட உங்கள் விண்ணப்பம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இந்த பயோடேட்டாவில் அவரது பெயர் வில்லியம் எச். கேட்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதில் இயக்க முறைமைகள் அமைப்பு, தரவுத்தள மேலாண்மை, கணினி வரைகலை உள்ளிட்ட கல்வி தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹார்வர்ட் கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும் போது இந்த Resume தயாரிக்கப்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். இந்த Resume தற்போது வைரலாகி வருகிறது. மேலும் இது தொடர்பாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.