புத்தகப் பரிந்துரை : இது ஒரு குப்பை கதை

“பஸ்ஸ விட இதுல டிக்கெட் கம்மிதான்” னு சொல்லிக்கிட்டே எங்களை இரயிலில் ஏற்றிவிட்டார் அப்பா. எப்படிதான் இதுமேல ஏறி விழாம ஆடினாரோ ஜெயம்ரவி! என எண்ணிக்கொண்டே உள்நுழைந்தேன். கூட்டம் அதிகம். நெறிசல் குறைவு.

என் முதல் இரயில் பயணம். அகன்ற இருக்கைகள், பெரிய ஜன்னல், புளியோதரையின் தூரத்து மணம், இளம் பெண்களின் பக்கத்து சிரிப்பு, நிழலாய் தொடரும் ‘கடக் கடக்’ சத்தம் என அத்துனையும் சேர்ந்து என்னை ஒருவித மயக்கத்தில் ஆழ்த்தியது. ஒண்டிக்குடித்தனத்தைப் போன்ற பேருந்தை விட, இந்த கூட்டுக்குடும்ப பயணம் கொஞ்சம் பிடித்துதானிருந்தது. இரயில் பயணத்தின் ஆகச்சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்று எதிர் இருக்கையிலிருப்பவர்களின் வாயையைப் பிடுங்குவது, மற்றொன்று அப்படி பிடுங்குபவர்களை வேடிக்கைப் பார்ப்பது. முதல் பணியில் போதுமான திறமையில்லாததால், இரண்டாவது பணி என்னை தேர்வு செய்தது. அந்த பணியை சிறப்பாக செய்து கொண்டிருக்கையில்’இவ திருந்தவே மாட்டா, இனி இவளை நம்ம கேங்ல சேத்திக்க கூடாது’என்று பக்கத்து இருக்கையில் ஓர் இல்ல பல குரல்கள். கல்லூரி பெண்கள் சிலர் அவர்களுள் ஒருத்தி தன் வாயிலிருந்த சுயிங்கத்தை (பபுள்கம்) இரயில் சன்னல் வழியே எறிந்துவிட்டதால், அவளை திட்டிக்கொண்டிருந்தனர்.

For the love of trains: longest train journey routes in India | Times of  India Travel

‘குப்பைய குப்பத்தொட்டியிலதான் போடனும், இப்படி கண்ட இடத்துல வீச கூடாது’
என அவர்கள் பேசிக்கொண்டது பனிரெண்டு வயது சிறுமியான என் மனதில் ஆழ பதிந்தது. அன்று முதல் குப்பைக்கும் குப்பைத்தொட்டிக்குமான காதலை வளர்ப்பதில் ஒரு குட்டி அம்பியாக வாழ்ந்துகொண்டிருந்தேன் இந்த புத்தகத்தை படிக்கும் வரை.

என்ன? குப்பைக்கு ஒரு புத்தகமா?இங்கே இருக்கிற பிரச்சனையில் இது தேவைதானா?என நினைக்கிறீர்கள். சரி தானே? சந்தானம் ஒரு படத்தில் சொல்வார்,”வீட்ல குப்பை இருந்து பாத்திருக்கேன், இப்படி குப்பையில வீடு இருக்குறத இப்போதான் பாக்குறேனு”
உண்மையில் நம் எல்லாருடைய வீடும் இப்படித்தான் மாறிப்போகும் குப்பைத்தொட்டி என ஒன்றில்லாவிட்டால்.சரி குப்பையை குப்பைத்தொட்டியில் போட்டாச்சு.அடுத்தது என்ன?
அது தெருமுனையிலுள்ள அரசாங்க குப்பைத் தொட்டியை சென்றடையும்.அதன் பின்?
ஆறுகள் கடலை சேர்வது போல ஊரின் அல்லது நகரத்தின் ஒதுக்குப்புறங்களிலுள்ள மிகப் பெரிய குப்பைக் கிடங்குகளில் நம்முடைய குப்பைகள் சங்கமித்துவிடுகின்றன.

Waste Management and Recycling wastage - Planet of Students

இதுவரையிலும் நாம் அறிந்ததே. இதற்குபின் இந்த குப்பைகளின் நிலை என்ன?
என்றாவது யோசித்தது உண்டா?சென்னை மாநகராட்சியில் மட்டும் நாளொன்றுக்கு பத்தாயிரம் டன் குப்பைகள் உருவாகின்றன. அப்படியெனில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்படும், குப்பைக் கிடங்குகளிற்கு அருகில் வசிக்கும் மக்களின் நிலை என்ன?
இப்படியே தொடர்ந்தால் சந்தானம் சொல்லும் அந்த வீட்டின் நிலை தான் நம் நாட்டிற்கு ஏற்படும். அப்படியொன்றை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?
“குப்பை சூழ் உலகு”இப்பொழுது இந்த புத்தகத்தின் தேவையும், குப்பையை பற்றி பேச வேண்டிய முக்கியத்துவமும் உணர்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். மேலே பேசலாமா?

தினமும் வீடுகளில் உருவாகும் குப்பைகளை கையாள இரண்டே வழிகள் தான். ஒன்று பெரிய பள்ளங்களில் புதைப்பது (landfill) மற்றொன்று மேம்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எரிப்பது (incineration). திடக்கழிவுகளை புதைக்கும் முறையை எடுத்துக்கொண்டால் 2047 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் உருவாகும் சுமார் 2,600 லட்சம் டன் கழிவுகளைப் புதைக்க 1400 சதுரகிலோமீட்டர் பரப்பளவு தேவைப்படுமாம். அந்த பரப்பளவு சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பை மாநகரங்களின் மொத்த பரப்புக்கு சமமாகும். மனிதர்கள் வாழ்வதற்கே இடப்பற்றாக்குறை இதில் இவ்வளவு குப்பைகளையும் கொட்ட எங்கே நிலம்? அதுமட்டுமின்றி அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளுடன் மழைநீர் சேர்ந்து அவை நிலத்தையும், நிலத்தடிநீரையும் மாசுபடுத்தும் என்பதை சொல்லிதான் தெரியவேண்டுமென்றில்லை.

Largest Landfills, Waste Sites, And Trash Dumps In The World - WorldAtlas

அப்படியானால் குப்பையை எரித்துவிடலாம் தானே? எளிமையான வழி என்று நினைத்தால், ‘கியான் சீ’ யின் கதையை சொல்லி கலவரப்படுத்துகிறார் ஆசிரியர். 1986 ம் ஆண்டு அமெரிக்காவின் பிலடெல்பியா மகாணத்திலிருந்து 14,000 டன் எடையுள்ள நச்சு குப்பைச் சாம்பலை, விவசாயத்திற்கு தேவையான உரம் எனச் சொல்லி எதாவது ஒரு நாட்டில் கொட்டிவிடுவதற்காக முன்பணமாக மட்டும் சுமார் 60 லட்சம் டாலர் பணத்தை பெற்று புறப்பட்டது ‘கியான் சீ’ என பெயரிடப்பட்ட கப்பல். ஹைட்டி நாட்டினரை ஏமாற்றி இறக்கிய நான்காயிரம் டன் நச்சு சாம்பலைத் தவிர மீதி சாம்பலை கியான் சீயால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அட்லாண்டிக் பெருங்கடலின் இரு கரைகளிலும் உள்ள எந்த நாட்டிலும் நச்சு சாம்பலை கொட்டமுடியாமல் கடலிலே இரண்டு வருடங்களுக்குமேல் அலைந்து திரிந்தது கியான் சீ.

இறுதியில் வெறும் கப்பல் தான் பிலடெல்பியாவிற்கு திரும்பியது.நச்சு சாம்பல் என்ன ஆனது? யாருக்கும் தெரியாது.அந்த சாம்பல் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தால் இருபத்திரெண்டு வருடங்கள் தொடர் போராட்டங்களின் மூலம் ஹைட்டி மக்கள் அதனை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்பியிருப்பார்கள்?ஆக, புதைத்தாலும் ஆபத்து, எரித்தாலும் ஆபத்து.

இத்தகைய குப்பையை கையாள மனிதன் தன் ஏழாம் அறிவை பயன்படுத்தி உருவாக்கிய மற்றுமொரு வழிமுறைதான் மறுசுழற்சி செய்வது. ஆனால், அவ்வாறு உருவாக்கப்படும் பொருள் முந்தைய பொருளை விட தரம் குறைவாகவும் சூழலுக்கு கேடும் விளைவிக்க கூடியதாகவுமே உள்ளது. அப்படியானால் மலைபோல் குவியும் இந்த குப்பைகளை என்னதான் செய்வது? உலகில் யாரிடமும் இதற்கு பதில் இல்லை.
குப்பைகளை உருவாக்கிவிட்டு அதை என்ன செய்வது என்று யோசிப்பதைவிட அதை உருவாக்காமல் இருக்கலாம் தானே? என கேட்கும் ஆசிரியர், குப்பைகளை உருவாக்காமல் இருக்க முடியுமா?அதற்கு முதலில், நாம் குப்பைகள் உருவாகும் அரசியலை தெரிந்துகொள்ள வேண்டுமென அழைக்கிறார்.அது என்ன குப்பை அரசியல்?

Recycling Of Waste Product | Water Reclamation Facility Of Paper

35 ரூபாய் மதிப்புள்ள பேனாவை வாங்கி சில ஆண்டுகள் வரை பயன்படுத்திய மக்களை, மாதம் இரண்டு 5 ரூபாய் பேனாவை உபயோகப்படுத்த வைத்திருக்கும் அரசியல் அது.
கண்டிப்பாக 35 ரூபாய் பேனா உருவாக்கத்தின் போது ஏற்படும் மாசு, 5 ரூபாய் பேனாவை விட அதிகமென்றாலும், அந்த சில வருடங்களில் நாம் பயன்படுத்தி தூக்கியெறியும் 5 ரூபாய் பேனாக்களின் குப்பை எவ்வளவு பெரியது?பேனாவிற்கு மட்டுமல்ல மலிவு விலையில் கிடைக்கிறது என நாம் பயன்படுத்தும் எல்லாவித பொருட்களின் பின்னும் இந்த அரசியல் ஒளிந்திருக்கிறது.

சரி. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாக இந்நூலின் ஆசிரியர் என்ன சொல்லியிருப்பார் என உங்களால் ஊகிக்க முடிகிறது தானே?

ஆம். விளம்பரங்களையும், எதிர் வீட்டாரையும் பார்த்து பொருட்களை வாங்கி குவித்து நம் பகட்டை காட்டாமல், தேவைக்கேற்ப குறைவான பொருட்களை மட்டும் வாங்குவதும், அப்பொருள் நீடித்த பயனளிக்குமாறு பார்த்துக் கொள்வதுமே ஆகும். உதாரணமாக சூழலிற்கு மாசில்லை என நினைத்துக் கொண்டு பல துணி பைகளை வாங்கி, தூக்கி எறிவதைவிட, நெகிழி (பிளாஸ்டிக்) பையானாலும் ஒன்றை வாங்கி அதை அடிக்கடி உபயோகப்படுத்துவதே சிறந்தது. இவையெல்லாம் சூழலை காப்பதற்கான ஒரு சிறு முயற்சியே.அப்படியானால் நிரந்தரதீர்வு?
எதிர்கால மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி அரசாங்கம் தான் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்கான அழுத்தத்தை மக்காளாகிய நாம்தான் அளிக்க வேண்டும்.
நம் வீட்டில் பயன்படுத்தி தூக்கியெறியும் குப்பைகளை கையாள்வதிலேயே இவ்வளவு அபாயங்களும், குழப்பங்களும் இருக்கும் போது மருத்துவக் கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகள், அணு உலை கழிவுகள் இப்படி நச்சுவாய்ந்த பல இரசாயண கழிவுகளை கையாள நம்மிடம் பாதுகாப்பனா வழிமுறைகள் ஏதேனும் உள்ளதா?

மேலும் விவரமாக அறிய:
புத்தகம் : இது ஒரு குப்பைக் கதை
ஆசிரியர் : ஜியோ டாமின்
வெளியீடு: பூவுலகின் நண்பர்கள்

சூரியா சுந்தரராஜன், வேளாண் பட்டதாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *