HR உன்ன கூப்பிடுறார்… (12)

Assessment – ஒரு பெருமைமிகு தருணம்

Appraisal(மதிப்பீடு) பற்றிய மெல்லிய புரிதலும், எப்படியெல்லாம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்படுகிறது, ஏன் எதிர்மறைக் கண்ணோட்டத்தில் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது என்பது பற்றி சென்றவாரம் பார்த்தோம். நிறுவனத்திற்கும், அங்கு வேலைபார்ப்பவருக்கும் அவை எப்படி ஒரு பாலமாகவும், பலமாகவும் செயல்படவேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம். ஆனால் அப்படி செயல்படுத்தப்படுகிறதா?  அணுகும்முறையிலும், எதிர்கொள்ளும் விதத்திலும்தான் அப்ரைசலை நாம் உள்வாங்கி புரிந்துகொள்ள இயலும். இந்த சிறுமுயற்சியில் நீங்களும் பங்குகொள்ள ஆசையா? வாருங்கள் சேர்ந்தே அந்த முயற்சியை எடுப்போம்.

அப்ரைசல் என்பது நிறைய மதிப்பிடுதலும் (Assesment) கொஞ்சம் சரிசெய்தலும் (Adjustment) அடங்கிய கலவை என்று சொல்லலாம். நாம் ஏற்கனவே பேசியிருந்தோம், மதிப்பீடு வேண்டும் ஒப்பீடு வேண்டாம் என்று, அந்த மனவோட்டத்திலேயே இதை புரிந்துகொள்ள முயற்சிப்போம். நான் யாருனு அப்ரைசல் நேரத்துல காட்டுறேன் எனும் வீராப்பு இருபக்கமுமே இருக்கும் (அதாவது மதிப்பிடுபவர்–Apprasiser மற்றும் மதிப்பிடப்படுபவர்- Appraisee). இந்த அணுகுமுறை இருவருக்குமே நல்லதல்ல, சரியான அணுகுமுறையும் அல்ல. பிறகு எப்படி? “நான்தான் அதிகாரம் படைத்தவன் என்று உங்களை நீங்களே உணர்த்த விரும்பி மற்றவர்களைக் காயப்படுத்த வேண்டும் எனும் எண்ணம் இருந்தால், நீங்கள் மிகவும் பலவீனமான மனிதர்” எனும் மிகப்பெரிய புரிதலை கொஞ்சம் நினைவுக்குள் கொண்டுவருவோம்.

கீழ்க்காணும் முறைகளில் இவை எடுத்துச் செல்வது நலம் பயக்கும்.

·         என்ன செய்தோம்

·         எப்படி செய்திருக்கலாம்

·         நிறுவனம் அடைந்த பலன்

·         சிறப்பான செயலுக்கான பாராட்டு

·         பிழைகளுக்கான திருத்தம்

·         எதிர்காலத் திட்டமிடல்

·         வளர்ச்சிக்கான பாதையை வகுத்தல் (நிறுவனம் மற்றும் ஊழியர்).

இதைத்தாண்டி பேசப்படுகிற ஒவ்வொரு வார்த்தையுமே தேவையற்ற சண்டைகளையும், கசப்பான சூழலையும்தான் ஏற்படுத்தும். அதெல்லாம் இருக்கட்டும், மேற்சொன்னவற்றில் சம்பள உயர்வு (Increment), பதவி உயர்வு (Promotion) இதெல்லாம் வரவேயில்லையே எனக்கேட்கலாம். ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். மதிப்பிடுதல் (Appraisal) முடிந்த பிறகு இதெல்லாம் கொடுக்கவேண்டும் எனும் கட்டாயம் கிடையாது, அதேநேரத்தில் இவற்றை முழுவதுமாக இல்லையென ஒதுக்கிவிடுவது நிறுவனத்துக்கு நல்லதுமல்ல. எல்லாக் காதலும் திருமணத்தில்தான் முடியவேண்டும் என்பதல்லவே, புரிந்து பிரிந்து செல்வதும் ஒருவித முதிர்ச்சியடைந்த பண்புதானே, அதுபோலத்தான் இதுவும். என்ன பணி விலகல் கடிதம் (Resignation) கொடுத்துட்டு போகச் சொல்றிகளாக்கும் எனும் மெல்லிய புன்னகை வருகிறதா? நமக்கான, நம் வளர்ச்சிக்கான முடிவுகள் அனைத்துமே நாம் உணர்ந்து அல்லது நம்மைவிட மேல்நிலையில் உள்ளவர்களிடம் கலந்தாலோசித்து எடுப்பது நல்லது.

அதைவிடுத்து பிறருக்குப் பாடம் புகட்டப்போகிறேன், என்னை யாரென்று காட்டப்போகிறேன் எனும் விதண்டாவாத போக்கில் சென்றால் பாதிப்பு நமக்குத்தான் நிறுவனத்துக்கு அல்ல என்பதை மனதில் ஒரு ஓரத்திலாவது நிறுத்திவையுங்கள். நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது, நாம் எப்படி செயல்படவேண்டும், அப்படி செயல்பட நாம் எதிர்நோக்க இருக்கும் சவால்கள் என்னென்ன என்பதைப்பற்றிய ஒரு அழகிய புரிதல் கொண்ட நல் வாய்ப்பாக அப்ரைசல் இருக்கவேண்டும் என்றுதான் பண்பட்ட HRகள் விரும்புவதுண்டு, ஆனால் அதைத்தாண்டி சிலபல இனிப்பான/கசப்பான நிகழ்வுகள் நடப்பது என்பது இயல்புதான், அதையும் சரிசெய்து, இலக்கு நோக்கிப் பயணிக்கும் உந்துவிசையயைத் தருவது மனிதவளத்துறையில் உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.

அப்ரைசலில் என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதுபற்றி இங்கு பாடமெடுக்க எனக்கு விருப்பமில்லை, ஆனால் அதனுடைய சாராம்சம் உங்களுக்குக் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். நீங்கள் சொல்வதைப்பார்த்தால் இதனால் நிறுவனத்துக்கு மட்டுமே அதிகப் பலன்கள், தனிப்பட்ட நபருக்கு அவ்வளவாக இல்லையே எனக் கேட்கலாம் அப்படியெல்லாம் இல்லை. இது ஏதோ நிறுவனத்துக்கு மட்டுமே பொருந்தக்கூடிய வழிமுறை அல்ல, நம் தனிப்பட்ட வாழ்வுக்கும் உறவு மற்றும் நட்புக்கும் பொருத்தும். நம் செயல்பாடு, நம் வளர்ச்சி, எதையெல்லாம் சரிசெய்யவேண்டும், எவற்றையெல்லாம் களையவேண்டும், திட்டமிடலில் உள்ள நிறை குறைகள், நம்மை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்ல வேண்டிய பயணத்திட்டம், நமக்கும் நம்மை வழிநடத்துவருக்கும் (Team Leader) உண்டான சரியான புரிதல், நாம் அவர்மீதும் அவர் நம்மீதும் வைத்திருக்கும் சில எதிர்மறையான எண்ணங்களை உடைப்பதற்கு உண்டான அழகிய தருணம், இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கான வளர்ச்சிதான் இந்த வளர்ச்சியில்தான் நிறுவனத்தின் வளர்ச்சியும் அடங்கியுள்ளது. அடடா இவ்வளவு நல்ல விசயங்கள் உள்ளதே என உங்களுக்குள் ஒரு நீர்பாய்ச்சல் ஓடட்டும் அது நீங்கள் எதிர்நோக்கும் முன்னேற்றத்தை உங்களுக்குத் தரட்டும்.

தொடர்ந்து பயணிப்போம்…

முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.

*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  1. Short and sweet worthy article to understand more about the concept Appraisal.. Thanks so much for sharing .

  2. ரெஜினா சந்திரா says:

    சிறப்பு தோழர். நல்ல வழிகாட்டுதல்.