தந்தை கனவை நிறைவேற்ற துடிக்கும் மகள் – தந்தையர் தின சிறப்பு கட்டுரை

தந்தையர் தினத்தன்று “என் அப்பா” என்ற தலைப்பில் நடைபெற்ற கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற எஸ்.பர்வீன் பானு அவர்களின் கட்டுரை…

நான் நடைபயில ஆரம்பித்த நாள் முதல், என்னுடனே நடந்த இரண்டு பாதங்கள், நலிவுற்றுப் போனது. காலவெள்ளத்தில் என்னை விட என் நிழல் மூப்பெய்தி கொண்டது. நான் சாமி பார்க்க ஏறி நின்ற தோள்கள், முதுமை சுமந்து, மறுமுறை குழந்தை பருவம் கொண்டு விட்டது… 

ஓடிப்போன காலத்தை ஒருமுறை கொண்டு வந்து கொண்டாடிட நினைக்கிறேன். இன்று தந்தையர் தினமாம். எந்தையை பற்றிய சிந்தைக்கும் ஏது, ஆதியும், அந்தமும்..!

எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல்… அதுசரி எப்போது நினைவு தெரிந்தது என்று எனக்கு நினைவே இல்லை. என் நினைவில் தெரிந்தது எல்லாம் உங்களுடனான நினைவுகள் மட்டுமே..

A Future Letter to My Rebellious Teenage Daughter | by Matt Rosen | The  Coffeelicious | Medium

கொஞ்சம் மெலிந்த தேகம்தான் உங்களுக்கு அப்போதும். பள்ளிக்கு கொஞ்சம் தாமதமாகிப் போனால், உங்கள் மிதிவண்டி சிவிகையில் தான் பள்ளிக்கு செல்வேன். பின்னோடு இருந்து காற்றோடு கலந்து நான் பேசிகின்ற வார்த்தைகளுக்கு, புரிந்தும் புரியாமலும் உங்கள் தலையாடும். 

  ‘ வரும்போது ஓரமாவே வரணும்.’ இந்த வார்த்தை மட்டும் இன்று வரைக்கும் நீங்கள் ஒரு இலட்சம் முறை சொல்லக் கேட்டு இருக்கிறேன். அன்றுமுதல் என் ஒவ்வொரு ஓரத்திலும், ஒவ்வொரு உயரத்திலும் நீங்களே இருக்கிறீர்கள்..

 பள்ளி கொஞ்சம் தூரம்தான். அப்பா, நீங்கள் மட்டும் முனைந்திருக்காவிட்டால், பள்ளி எங்களுக்கு வெகு தூரம்தான். ஆணின் வெற்றிக்கு பின்னாக பெண் இருப்பது நியதிகள் என்றால், ஒவ்வொரு மகளின் வெற்றிக்கும் பின்னாக, ஒரு நேர்மையான தந்தை இருக்கிறார்.

    நெகிழ்ந்து போகாமல் நெருக்கி பின்னிய நூலிழைகள் போல, எங்கள் வாழ்க்கையை பின்னித் தந்தீர்கள். அதில் சில நினைவுகளை தூசி தட்டி எடுத்து வரட்டுமா..? 

     எழுத்து கூட்டி படிக்கத் தெரிந்த காலத்திலேயே, அழைத்துப் போனது நூலகத்திற்கு தான். சித்திரக் கதைகளும், சிறுகதைகளும் தேடி எடுத்து பிரித்து ’ இதைப் படிமா..’ என்று படிப்பித்த நிமிடம் தொடங்கியது, எழுத்துக்களுடனான என் பயணம்.

    உங்கள் விரல் பிடித்துப் போய், ரயில் பார்த்த நாட்கள் எத்தனை எத்தனை..? நான் பார்த்த ரயில்கள் எங்கிருக்கிறதோ, ஆனால் அந்த நினைவுகள் ரயிலடியைப் போல, அங்கேயேதான் நிற்கிறது.

Father-Daughter Dance – Teri Schure

   ‘ அம்மாட்ட கோவிச்சுட்டு சாப்பிடாம வந்துட்டியா..? ‘ மதியநேரத்து உணவோடு பள்ளி வளாகத்தில் காத்துக் கிடந்த நாட்கள் எத்தனை எத்தனை. உணவைத் தந்துவிட்டு திரும்பி போகயிலே அந்த துக்கடா பிரிவிற்கு, எனக்குள் வெடிக்குமே ஒரு கேவல்… அந்த அறியாமை அன்பிற்கு உங்கள் அன்பை விட, சிறந்த அரியாசனம் ஏது..?

  நான் எழுத ஆரம்பித்தேன். நீங்கள் தபால்காரர் ஆகிக் கொண்டீர்கள். நான் பரிசுகள் பெற ஆரம்பித்தேன். நீங்கள் என் கரவொலி ஆனீர்கள். 

 ‘ எழுதினா போதாது பரிசு வாங்கணும்..’  செய்தேன்.

 ‘ பரிசுகள் வாங்கினா போதாது, ஒடிட்டே இருக்கணும்.’செய்தேன்.

 ‘ பரிசோடு விருதும் வாங்கணும். அதான் நல்லா இருக்கும்.’

  அதுவும் வந்து வந்து குவிந்தது. உங்கள் ஆசைகள் எல்லாம் என்மீது ஆசிர்வாதங்களாய் படிந்து படிந்து என்னை உயர்த்திக் கொண்டே இருந்தது, இருக்கிறது.

‘ சாகித்ய அகாடமி மாதிரி விருதெல்லாம் வாங்கணும் மா. நான் இருக்கும் போதே…’

   அந்த ஒற்றை வார்த்தைகளில் ஒடிக் கொண்டிருக்கிறது என் எழுத்து. அன்னைகளை பற்றி பாட ஆயிரம் கவிஞர்கள் பிறக்கிறார்கள். ஆனால் தந்தையைப் பாட, உலகத்தில் மகளைத் தவிர யார் இருக்கிறார்கள்..? கனி தரும் தரு’தான் அன்னை என்பதை நானறிவேன், அந்த தருவுக்கு நீர் தரும் வேர் அல்லவா, தந்தை..! வேர்தானே நீருக்கு ஆதாரம், நீங்களே எனக்கு ஆதாரம்.

 ஆசையை கூட அபிப்ராயமாய்ச் சொல்லும் அந்த சுதந்திரம்தானே உஙகள் அன்பிற்குள் கட்டுப்பட வைத்தது. ஒவ்வொரு மகளுக்கும் அவள் தந்தை கதாநாயகன் தான். ஆனால் எனக்கு… அப்பா கதைகளுக்கு எல்லாம் நாயகன்.

NATIONAL FATHER DAUGHTER TAKE A WALK DAY - July 7, 2022 - National Today

  விருப்பம் முதல் கோபம் வரைக்கும், ஆண்கள் முதல் பெண்கள் வரைக்கும் என் சிந்தனையில் உதித்த அத்தனையையும் நான் கொண்டு சேர்த்த கண்ணாடி நீங்களல்லவா..? என் மகிழ்வோ, துயரோ, என் ஊதியமோ, உற்சாகமோ, உங்கள் செவிக்குள் சென்று சேர்த்துவிட்டால், என் உணர்ச்சிகள் ஓய்வெடுத்துக் கொள்ளும். 

 நீங்கள் உடன்வராத இடத்துக்கு நான் சென்றதே இல்லை. நீங்கள் இல்லாத இடமும் எனக்கானது இல்லை. கருவறையில் சுமை காலக்கெடுவில் முடிந்து போனது, உங்கள் தோள்களின் சுமை உலகம் உள்ளவரைக்கும் தொடரப் போகிறது.

நான் சிவிகையில் (பல்லக்கு) செல்வதாய் உலகம் சொல்கிறது. என் கவலை எல்லாம் என்னை சுமந்து கொண்ட உங்கள் தோள் நோகுமே என்பதில் இருக்கிறது. நீங்கள் கைபிடித்து காட்டிய உலகம் அப்படியேதான் இருக்கிறது… நீங்கள் தான் மூப்பெய்திக் கொண்டு இருக்கிறீர்கள் அப்பா. எனக்கு எத்தனை கவலையாக இருக்கிறது தெரியுமா..?

குடும்பத்தையே சுமந்த உங்களுக்கு இப்போதெல்லாம் கனம் தூக்க முடிவதில்லை. உங்கள் நடைகூட முன்பிருந்த வேகத்தில் இல்லை. பேருந்து நிறுத்தத்தில் நான் வந்திறங்க மணிக்கணக்கில் காத்து நின்று கொண்டிருந்த உங்களுக்கு, இப்போதெல்லாம் சில நிமிடங்கள் நிற்பது கூட கால் நோவினைத் தருகிறது.

  உங்கள் கூரிய செவிகள் கூட, கூர்மை மழுங்க ஆரம்பித்து விட்டது. முதுமை என்ற சாபம் இல்லாத நீண்ட ஆயுள் ஏது..? முதுமை முத்தமிட்டால் என்ன, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாகவே வாழுங்கள்…

இந்த உலகம் எப்படி இருந்தால் என்ன..? நீங்கள் மகள்களுக்கு உலகமாக இருக்கிறீர்களே.. அது போதும் எங்களுக்கு. ஆஸ்திக்காக அப்பாவை கொன்றவன் பற்றிய செய்தியை படிக்கிறேன்… வேகமாய் சென்று உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்கிறேன். அந்த தளர்ந்த கரங்களை விடவா பாதுகாப்பை தந்துவிடப் போகிறது, ஆஸ்தியும், அந்தஸ்த்தும்.

7 must-do things to have strong father-daughter relationship | WOW Parent

இங்கே சிதறிய வார்த்தைகள் எல்லாம் பரிசுக்கும் பாராட்டுக்கும் மட்டுமாய் சொல்லப்பட்டது அல்ல. இது ஒரு பந்தத்தின் கொடை. ஒரு தந்தையின் தாய்மை.   

உங்கள் கைபிடித்து நடைபயின்ற நாட்களை நினைத்தபடி உங்களோடு நடைபயிற்சி செல்கிறேன். 

பழையகதை பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். பலமுறை எனக்கு பழகிய கதை என்றாலும், நான் ஒவ்வொரு முறையும் புதுசாய் கேட்கிறேன். நீங்கள் புதிதாய் சொல்வது போலவே சொல்கிறீர்கள். 

எங்களுக்கு சிறு நோவு வந்தாலும், முழு இரவு உறக்கம் தொலைத்து தலைமாட்டில் அமர்ந்து கிடப்பீர்கள். நொடிக்கு நூறுமுறை உடல் சூடு அளப்பீர்கள். உங்களுக்கு மூப்பு அப்பத் தொடங்கியதில் இருந்து எங்கள் கண்களும் உறங்க மறுக்கிறது அப்பா…

   இந்த உலகம் வெகுவாய் மாறிக் கொண்டிருக்கிறது அப்பா, பந்தங்களின் மீதும், உறவுகளின் மீதான நம்பிக்கையும், கடமையும் மரத்துப் போக ஆரம்பித்து விட்டது.

    இயற்கை கொடுத்த ஒரே வாய்ப்பைக் கூட, இங்கே யாரும் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. வாழ்க்கை மறுவாய்ப்பே இல்லாதது. நாம் பார்த்த கண்ணாடிக்கு வயதாகிக் கொண்டு இருக்கிறது. வெகு கவனமாய் கையாளுகிறோம், கண்ணாடிகளை. உள்ளிருக்கும் பிம்பம் உங்களுடையது அல்லவா..?

    மறுசுழற்சியில் மீண்டும் நீங்கள் குழந்தையாகிக் கொண்டு இருக்கிறீர்கள். நீண்டநேரம் அமர்ந்து கிடந்தால் அமர்ந்தபடி உறங்கிப் போய் விடுகிறீர்கள். அந்த உறக்கத்தில் நீங்கள் அறியாமல், உங்கள் மடி சாய்ந்து கொள்கிறேன். அனிட்சையாய் உங்கள் கரம் ஆதுரமாய் தலை கோதுகிறது. உறக்கத்தில் கூட அன்பு சுரக்கும், பெருஞ்சுனையை உணர்கிறேன். அந்த முதிய விரல்களை முத்தமிட்டு கேட்கிறேன்,

” அப்பா, வயோதிகத்தின் வளைவு மறைந்து மீண்டும் இவ்விரல்களுக்கு எப்போது இளமை வரும்..?” என்கிறேன்.  

அப்பா சிரித்தபடி சொன்னார்,”பருவம் உதிர்க்கும் உடலில், முதுமைக்கு பிறகு உதிர்க்க எதுவுமே இல்லை ” என்கிறார்.

236 Father Daughter Quotes On Their Unbreakable Bond (2022)

கோடி வார்த்தையை மென்று தின்ற எனக்கு, அந்த ஒற்றை வார்த்தையை, சிந்திக்கவும், ஜீரணிக்கவும் இயலாமல் தத்தளிக்கிறேன்.

ஆனாலும் உங்களோடு இருக்கும் இந்த நாளை, என் இதயத்தில் எழுதி வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.

கிழக்கு சூரியன் கீழிறங்கிக் கொண்டு இருக்கிறான்… நடைபயிற்சிக்கு செல்ல வேண்டும்… கரங்களைத் தாருங்கள் அப்பா, அதை பற்றிக் கொண்டால் தான், என் பாதகங்கள் பூமியில் பத்திரமாய் பதியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  1. துடுப்பதி ரகுநாதன் says:

    அருமையான கட்டுரை!
    பொதுவாக எழுத்தாளர்கள் தாய் பற்றி எழுதுவது போல் தந்தை பற்றி எழுதுவதில்லை!
    பாசமுள்ள தந்தையின் அன்பு, அதுவும் பெண் குழந்தைகள் மேல் இருக்கும் அன்புக்கு ஈடு இணை இல்லை!
    இந்தக் கட்டுரை அதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது!

  2. Prema kameswaran says:

    கட்டுரை கூட கனக்கிறது உங்களின் பாசத்தின் பாரம் தாங்காமல்…