தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – மாருதி ராவ்
தமிழ்த் திரைப்படங்களில் ஒன்று,பார்வையாளனை மட்டுமல்லாமல் ஒரு வரலாற்றையும், கலச்சாரத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி மிகப்பெரிய தாக்கத்தை உருவக்கியது என்றால் அந்த பெருமை இன்றுவரை தக்கவைத்திருக்கும் ஒரே படம் “பராசக்தி”.குறிப்பாக படத்தின் நீதிமன்ற இறுதிக்காட்சி, அப்படிப்பட்ட புகழ்மிக்க அந்த காட்சியின் வல்லமைக்கு யார் காரணம் கலைஞரின் அனல் தெறிக்கும் வசனங்களா? நடிகர் திலகத்தின் அசுர வெறி நடிப்பாற்றலா என இன்று வரை பெரும் பட்டிமன்றமே நடந்து வருகிறது.
ஆனால் இரண்டையும் தாண்டி அக்காட்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு அட்டகாசமான ஒளிப்பதிவு செய்த இன்னொருவரும் காரணம் என்பதை தொழில்நுட்பம் அறிந்த ஒரு சிலரால் மட்டுமே உணரமுடியும்.அதிலும், குறிப்பாக நீதிமன்ற காட்சியின் காமிரா அசைவுகளை நினைத்துப்பாருங்கள். இத்தனைக்கும் இன்று பார்க்கும் போது படத்தொகுப்பில் பல ஒழுங்கின்மைகள் காணப்படும்.அந்த குறைகளை தெரியாத அளவுக்கு நம்மை காமிரா கோணங்களாலும் நகர்வாலும் கட்டிப்போட்டவர் மாருதிராவ்.அவரது க்ளோசப்புகள் கொஞ்சம் சொதப்பியிருந்தாலும் சிவாஜியின் மந்திரத்தன்மை மிக்க நடிப்பு பார்வையாளர்களை இவ்வளவு சென்றடைந்திருக்குமா என்பது சந்தேகமே?
இன்று பல நூறு கோர்ட் காட்சிகள் தமிழ் சினிமாவில் வந்துவிட்டன.ஆனால் சிவாஜி வசனம்பேசும்போது கையாணட் காமிரா கோணங்களுக்கு முன் அனைத்தும் தோற்று விழுந்து கொண்டேயிருக்கின்றன என்றால் அதுமிகையில்லை.அப்படிப்பட்ட அந்த பெருமைக்குரிய ஒளிப்பதிவாளர் மாருதி ராவ்
ஏப்ரல் 25,1921ல் தஞ்சையில் பிறந்த மாருதிராவ் அவர்கள் சிறு வயது முதலே காமிரா தொழில்நுட்பம் மேல் ஈர்ப்பு கொண்டிருந்தார்.பள்ளிக் காலத்திலேயே அவர் காமிராவும் கையுமாக அலைந்தவர் என விக்கிபீடியா அவரைப்பற்றி புகழ்கிறது.இவரது திறமையை முதலில் கண்டுபிடித்தவர்,அடுத்த வீட்டு நபர் என்.சி.பிள்ளை.அப்போது புகழ்பெற்ற ப்ளாஷ் ஆங்கில பத்ரிக்கை ஆசிரியராக பணிபுரிந்துவந்தார்.உடனே அவரை மெய்யபன் செட்டியாருக்கு பரிந்துரைத்து திறமைசாலி ஏதாவது சேர்த்துக்க்கொள்ளுங்கள் என அவர் முன் நிறுத்தினார்.
அப்போது மெய்யப்பன் செட்டியார் தனது சரஸ்வதி சவுண்ட்ஸ் எனும் இசைத்தட்டு விற்பனை நிறுவனத்தை விட்டு சினிமாத் தயாரிக்க பிரகதி ஸ்டூடியோஸ் என்ற பெயரில் திரைப்படங்கள் எடுத்துவந்தார். உலகப்போர் அச்சம் காரணமாக அப்போது பல நிறுவனங்கள் சொந்த ஊருக்கு இடம் பெயர்ந்த்ன.அதற்காக காரைக்குடிக்கு சென்று சில வருடங்கள் படமெடுத்து பின் போர் முடிந்தபின் சென்னைக்கு இடம் மாறியபின் வடபழனியில் பெரிய வளாகத்தில் புதிதாக ஸ்டூடியோ கட்டி அதற்கு ஏவிஎம் என பெயரும் வைத்தார்.
1940ல் பிரகதி ஸ்டூடியோ பெயரில் தயாரித்து வந்த சூடாமணி எனும் ஒரு தெலுங்குப் படத்தில் பயிற்சியாளராக புகைப்படக் கலைஞருக்கு உதவியாக மெய்யப்பன் அவர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.நடிகர் ஜெமினி கணேசன் அவர்களது மனைவிகளூள் ஒருவரும் இந்தி நடிகை ரேகாவின் தாயாருமான புஷ்பவல்லி தான் அந்த படத்தின் நாயகி.இரண்டவாது படம் காளமேகம், புகழ்பெற்ற நாதஸ்வர வித்வான் ராஜரத்னம் பிள்ளை அவரகள் நாயகனாக நடித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து 1945ல் ஸ்ரீவள்ளியை ஏவிஎம் தயாரிக்க அதில் ஆஸ்தான புகைப்படகலைஞராக உயர்ந்தார்.தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படங்களில் பணி புரிந்தவர். இதனிடையே வேல் பிக்சர்ஸ் தயாரித்த படத்துக்காக மும்பையிலிருந்து சென்னை வந்த ஒளிப்பதிவாளர் மார்க்கஸ் பாட்லேவுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்க இவரது திறமையால் ஈர்க்ப்பட்ட மார்க்கஸ் பாட்லே இவரை தன்னோடு மும்பைக்கு அழைத்துச்சென்றார். மும்பையில் சிலகாலம் இருந்துவிட்டு மீண்டும் சென்னை வந்து ஏவிஎம் படங்களில் ஸ்டில் போட்டோகிராபரக பணியைத் தொடர்ந்தார், இறுதியாக ஏவிஎம் தயாரித்த அண்ணாவின் “ஓர் இரவு” படம் மூலம் ஒளிப்பதிவாளாராக தன் லட்சியப் பயணத்தை துவக்கினார்.
தமிழ் சினிமாவில் அவருக்கு முன் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் என்றால் காமிரா மேதை என பலராலும் அழைக்கப்பட்ட “கே ராம் நாத்” ஒருவரை மட்டுமே குறிப்பிட முடியும்.சந்திரலேகா ஒருபடம் போதும் ராம்நாத் அவர்களின் புகழின் உயரம் காண்பிக்க.அவரைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவில் அழுத்தமான முத்திரை பதித்தவர் என்று பார்த்தால் மாருதி ராவ் அவர்கள் மட்டுமே. 1951ல் ஏவிஎம் தயாரித்த அண்ணா அவர்களின் ஓர் இரவில் துவங்கிய மாருதிராவின் ஒளிப்பதிவுப் பயணம் 1952 பராசக்தியில் உச்சத்தை தொட்டது.
பரசக்தியைத் தொடர்ந்து 1954ல் வெளியான “அந்த நாள்” திரைப்படம் அவரது திறமையை இன்னும் ஒருபடி உயர்த்தியது.வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கத்தில் பாடல்களே இல்லாமல் வந்த முதல் திரைப்படம், என்றும் அகிராகுரசேவாவின் புகழ்பெற்ற ரோஷ்மான் படத்தின் பாணியில் பல்வேறு கோணங்களில் உண்மையை தேடும் திரைக்கதையமைப்பு என்றும்,மற்றும் தமிழின் முதல் த்ரில்லர் வகைப்படம் என்றும் பல பெருமைகளைக் கொண்ட திரைப்படம் “அந்த நாள்”. அதே போல திரைமொழி மிகச்சரியாக கையாளப்பட்ட முதல் படம் என்றும் கூட சொல்லலாம். அதற்கு காரணம் மாருதிராவ் அவர்களது ஒளிப்பதிவில் செறிவான காட்சி கட்டமைவு, துல்லியமான காமிர நகர்வு மற்றும் புனைவுக்கேற்ற நாடக ஒளியமைப்பு.
ஒளி புகாத பூட்டிய வீட்டுக்குள் காட்சி நடக்கும் போது புறவெளிச்சமற்று அதேசமயம் கதாப்பாத்திரங்களுக்கு மட்டும் எங்கிருந்து ஒளி வருகிறது என தெரியாமல் காண்பிப்பது ஒளிப்பதிவாளருக்கு மிகப்பெரிய சவால்.இந்த சவாலை ஏற்று அக்காலத்திலேயே அவர் காட்டிய பிரம்பிப்பூட்டும் பிம்பங்கள் இன்றுவரை தமிழ் சினிமாவுக்கு பெருமை.
குறிப்பாக படத்தின் சில் ஹவுட் என அழைக்கப்படும் இருண்மை நிழலுருவக் காட்சிகள் முதன் முறையாக அதிகம் பயன்படுத்தப்டட படம் என்ற கூடுதல் புகழும் இப்படத்துக்கு உண்டு.சமீபத்தில் கூட அந்த நாள் படத்தில் முக்கிய பாத்திரங்கள் ஐவர் வரிசையாக நின்றபடி துப்பாக்கியை யாருக்கோ குறிவைக்கும் காட்சி ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது.தொடர்ந்து அவர் குங்குமம்,அன்னையும் தெய்வமும் என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தாலும் அவருக்கு கறுப்புவெள்ளையில் புகழ்பெற்றுத்தந்த இன்னொரு படம் மேஜர் சந்திரகாந்த். கே பாலச்சந்தரின் புகழ்பெற்ற அந்த மேடை நாடகத்தை சிறந்த சினிமா அனுபவத்துக்கு மாற்றித் தந்த பெருமை மாருதி ராவுக்கு உண்டு.கறுப்பு வெள்ளையில் ஜாலம் காட்டியவர் வண்ணப்படத்தில் என்ன பண்ணிவிடுவார் என எல்லோருக்கும் ஒரு ஐயம் இருந்துவந்தது.காரணம் அப்போது இயக்குனர் ஸ்ரீதர் ஒளிப்பதிவாளர் வின்சண்டுடன் இணைந்து காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல வண்ணப்படங்களில் அசத்தி வந்தனர்.
இந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்போல 1966ல் வந்து அசத்திய படம் “அன்பே வா” பேரைசொன்னதுமே உங்களுக்கு நினைவுக்கு வரும் அந்த பாடல்காட்சியை யாராவது மறக்க முடியுமா. “ராஜாவின் பார்வை ராணி என் பக்கம்” இன்று வரை வண்ணத்தில் எத்தனையோ பாடல்காட்சிகள் உருவாக்கப் பட்டாலும் அந்த பாடல்காட்சி தந்த பிரம்பிப்பு இன்னும் விலகவில்லை. எவி எம் தயாரித்த இப்படத்தை இயக்கியவர்,இயக்குனர் ஏ.சி திரிருலோகச்சந்தர்.இதனைத்தொடர்ந்து இதே கூட்டணி 1967ல் த்ரில்லருக்குள் களமிறங்கியது.புதுமுக நடிகர் ரவிச்சந்திரன் நடித்த அதே கண்களும் மிகப்பெரிய வெற்றி.கறுப்பு வெள்ளைதான் த்ரில்லருக்கு உதவும் வண்ணபடத்தில் த்ரில்லர் எடுபடாது என இருந்த வழக்கமான சினிமா பழங்கதை பேச்சுக்களை மாருதி ராவ் இப்படத்தில் மூட்டை கட்டினார்.தொடர்ந்து ஏவி எம் ஸ்டூடியோவுடன் இணைந்து எம் ஜி ஆரின் “எங்கள் தங்கம்” சிவாஜியுடன் “எங்க மாமா” போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.தொடர்ந்து கன்னடம், தெலுங்கு படங்களிலும் பணிசெய்து வெற்றி வலம் வந்தார்.
புதுமைகளை எப்போதும் விரும்பும் காலமாற்றம் மாருதி ராவுக்கும் கடுமையான நெருக்கடிகளை கொடுத்தது. பி என் சுந்தரம்,வின்சண்ட் போன்ற திறமையாளர்கள் இக்காலத்தில் இவருக்கு இணையாக ஒளிப்பதிவு செய்து வெற்றி வரிசை கட்டினர்.அறிஞர் அண்ணா,கலைஞர் கருணாநிதி,எம் ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா என தொடர்ந்து நான்கு முதல்வர்களின் வெற்றித்திரைப்ப்டங்களிலும் சிவாஜி கணேசன் எனும் காலத்தின் மகத்தான கலைஞனோடும் பணியாற்றிய பெருமை மிக்கவர் திரு.மாருதி ராவ் அவர்கள். எப் டி ஐ எனப்படும் இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தின் தேர்வுக்குழு தலைவராக சில காலம் பணியாற்றியவர்.தொடர்ந்து ஏவி எம் எனும் மகத்தான ஆலமரத்தின் படங்களுக்கு வாழ் நாள் முழுக்க ஒளிப்பதிவு செய்ததிலிருந்து இவரது வெற்றியின் ரகசியம் இந்த தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டு என்றால் மிகையில்லை.
– எழுத்தாளர். அஜயன் பாலா.
(தொடரும்)
பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமா வின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.