பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – நாடகத்தின் விலை = ஒரு லிட்டர் பெட்ரோல்
ஊர் அப்படி ஒன்றும் பெருசா இருக்காது. ஆனா, அந்த ஊருக்கான ரயில்வே ஜங்ஷனோ இந்தியாவிலேயே 7வது நீளமான ஜங்ஷன். இரண்டு பக்கமும் உள்ள ப்ளாட்ஃபார்ம்களில், திருவாரூரிலிருந்து 4 திசைகளுக்கும் போகக்கூடிய ரயில்கள் ஒரே நேரத்தில் நிற்பது, மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டரின் எல்லா ஸ்க்ரீன்களும் ஹவுஸ்ஃபுல் ஆனது போல இருக்கும்.
ஏதாவது ஒரு ரயிலில், தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்ற மாநாட்டிற்கு வரவேண்டியவங்க வந்து இறங்குறாங்களான்னு அந்த இளைஞன் தேடித் தேடிப் பார்த்தான். எதிர்பார்த்தவங்க யாரையும் காணோம். மனசு படபடக்குது. அந்த நேரத்தில்தான், அந்த இளைஞனைவிட 2 வயது மூத்த இளைஞர் ஒருவர் ரயிலில் இருந்து இறங்குகிறார்.
ஓடிப்போய் அவரை வரவேற்று, அந்த இளைஞரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறான் இந்த இளைஞன். அந்த இளைஞரும் அதே போல கைகளைப் பற்றிக் கொள்கிறார். அதுக்கப்புறம் முக்கால் நூற்றாண்டு காலம் அந்தக் கைகள் விலகவேயில்லை. “நீ அடிச்சி ஆடு.. நான் தடுத்து ஆடுறேன்”னு சொல்லி வச்ச மாதிரி, இரண்டு பேரும் சேர்ந்து ஆடிய அரசியல் ஆட்டம் எதிரிகளைத் தெறிக்க விட்டது. இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றியது. ரயில் நிலையத்தில், கலைஞரின் கைகளைப் பற்றியவர் பேராசிரியர் அன்பழகன். அவரைத் தொடர்ந்து கே.ஏ.மதியழகனும் வந்துட்டாரு. மாணவர் மன்ற மாநாடு நல்லபடியா நடந்தது.
கலைஞரோட திறமைகளும் அதை அவர் வெளிப்படுத்துற வேகமும் சீனியர்களை அசர வைத்தது. “மனுசனா, ராட்சசனா” என்று நினைச்சவங்க உண்டு. ராட்சசன்தான். அதாங்க, அரக்கன். திராவிடப் பேரரக்கன். எப்ப, எப்படி சம்பவம் செய்யணும்னு அவருக்குத் தெரியும்.
சினிமா, டிராமான்னா மக்கள் கூட்டமா வர்றாங்க. கதையை ரசிக்கிறாங்க. நாலு பெண்கள் கூட்டு சேர்ந்தாலும் கதை பேசுறாங்க. ஆம்பளைங்க அள்ளிவிடுற கதைகளை டீக்கடையில், தெருமுனையில் கேட்க முடியுது. பத்திரிகையில் எழுதுவதுபோல, மேடைகளில் பேசுவதுபோல பெரியார் கொள்கைகளை நாடகத்துக்கேற்ற கதையா எழுதுனா எப்படி இருக்கும்ங்கிறது கலைஞரோட யோசனை. ஏற்கனவே அண்ணா அதுக்கான ஒரு ரோடு போட்டுக்கிட்டிருந்தாரு. தம்பி கலைஞர் அதில் சைக்கிள் விட ஆரம்பிச்சாரு.
‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்பதுதான் கலைஞரோட நாடகத்தின் டைட்டில். சொந்த அனுபவம் அதில் இருக்கும். கொள்கை முழக்கம் கூடுதலா இருக்கும். குடும்பத்தாருக்கோ கலைஞர்மேல கோபம்தான் இருந்தது.
“டவுனுக்குப் போனா ஒழுங்கா படிச்சி, நல்ல வேலைக்குப் போயிடுவான்னு நினைச்சித்தான் திருக்குவளையிலிருந்து திருவாரூருக்கு கூட்டிட்டு வந்தோம். இவன் இப்படி எதையாவது கிறுக்கிக்கிட்டே இருக்கானே”ன்னு சொந்தபந்தங்கள் பேசுது. இந்தப் பையனோட தலையெழுத்து இப்படி ஆயிடிச்சேன்னு கவலைப்பட்டவங்களும் உண்டு.
தன்னாலும் சம்பாதிக்க முடியும்ங்கிறதை சொந்த பந்தங்களுக்குக் காட்டுறதுக்காக தன்னோட நாடகத்தை ஒரு கம்பெனிக்கு வித்துட்டாரு கலைஞர். அதுக்கு கிடைச்ச தொகை, 100 ரூபாய். அந்தக் காலத்துக்கு அது பில்லியன்தான். இப்ப ஒரு லிட்டரு பெட்ரோல்கூட போட முடியாத அளவுக்குப் பண்ணி வச்சிருக்காரு, புண்ணியவாரு மோடி.
விழுப்புரத்தில் நாடகம் போடுறாங்க. கலைஞரே அதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரு. பார்த்த வந்தவங்க எல்லாரும், “நாடகம் நல்லா இருக்கு”னு சொல்றாங்க. ஆனா, பார்க்க வரும் கூட்டம் கம்மியாத்தான் இருக்கு. நாடகத்தோட டைட்டிலை மாத்தணுமான்னு கம்பெனிக்காரங்க யோசிக்கிறாங்க. உள்ளூருல இருநத பெரியார் தொண்டர்களோ, “நாடக டைட்டில் சரியாத்தான் இருக்கு. நாடக கம்பெனி பேருதான் சரியா இல்லே. அதனாலதான் கூட்டம் வரலே”ன்னு சொல்றாங்க.
‘திராவிட நடிகர் கழகம்’. இதுதான் கம்பெனி பேரு. மக்களுக்கு ஆதிதிராவிடர்கள்ங்கிறதுதான் தெரியும். அந்தப் பேரைக்கூட ஊர்க்காரங்க தங்களோட வாயால சொல்ல மாட்டாங்க. அவங்க வாய் மேலேயே போடுற மாதிரி, கோபம் வரும் அளவுக்குத்தான் ஆதிதிராவிடர்களைக் கூப்பிடுவாங்க. நாடக கம்பெனி பேருல, ‘திராவிட’ அப்படின்னு இருந்ததும், “இந்தக் கருணாநிதியும் அவனோட கூட்டமும் அந்த ஆளுங்க’ளான்னு ஊர்க்காரங்க பேசிக்க ஆரம்பிச்சாங்க.
பெரியாரோட இயக்கம், சாதி கூடாதுன்னு சொல்லுது. சாதியில எவனும் மேலேயும் இல்லை.. கீழேயும் இல்லைன்னு சொல்லுது. மாநாடு நடத்துனா அதிலே ஆதிதிராவிடர்களை சமையல் செய்யச் சொல்லி, எல்லாருக்கும் சாப்பாடு போடுது. இது அந்த சாதிக்காரங்களுக்கான கட்சிதான்டான்னு ஊருக்காரங்க பேசுறது வழக்கம்.
ஒரு பையன் தன்னோட பேரை ‘திராவிடச் செல்வன்’னு மாத்திக்கிட்டான். அவங்க வீட்டுல செம கோபம். “பெரிய சாதில பொறந்துட்டு, என்ன மாதிரி பேரு வச்சிருக்கிறே. இனி நீ சேரியில போய்ப் படுத்துக்க’ அப்படின்னு அவன் வீட்டுல அம்மா-அப்பா எல்லாரும் திட்டுன காலம் அது. இதெல்லாம்தான் விழுப்புரத்தில் கலைஞரோட நாடகத்துக்கு கூட்டம் வராதபடி செய்திடிச்சி.
“பக்கத்திலே இருக்கிற பாண்டிச்சேரியில நாடகம் போட்டா என்ன?”னு யோசனை வந்தது. அது, பிரெஞ்சுக்காரன் ஆட்சியில இருக்கிற இடம். அவங்க பழக்கவழக்கம் வேற. அங்கே பொழுதுபோக்குங்கிறது ‘தண்ணி’ பட்டபாடு. கலை மேல ஆர்வம் அதிகம். நாடகத்தை அங்கே போட ஆரம்பிச்சாங்க. நல்ல கூட்டம். 25 நாள் தொடர்ந்து ‘பாக்ஸ் ஆபீஸ்’ நிரம்பி வழியுது. பாண்டிச்சேரி தெருக்களில் கலைஞர் நடந்து போனா, “சிவகுரு.. சிவகுரு..”ன்னு மக்கள் கூப்பிடுறாங்க. அதுதான் அவர் நடிச்ச கதாபாத்திரத்தோட பேரு.
“கேரக்டராவே மாறிட்டாருய்யா நம்ம ஆளு”ன்னு ஒரே பாராட்டு. நாடகம் மட்டுமில்ல, பெரியார் இயக்கத்தோட பொதுக்கூட்டம், பத்திரிகைகளுக்கு கட்டுரைன்னு பாண்டியில் கலைஞர் செம பிஸி. அந்த சமயத்தில்தான் பாண்டிச்சேரியில் பெரியார் இயக்கத்தோட மாநாடு நடக்குது.
கலைஞர் எந்தப் பள்ளியின் மாணவரோ, அந்தப் பள்ளியின் ஹெட்மாஸ்டரே வர்றாரு. நம்ம last bench ஸ்டூடன்ட்டுக்கும் அந்த மாநாட்டுக் குழுவில் ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்படுது.
அப்புறம் என்ன? இனிமேதானே பாக்கப் போறீங்க.. முழு ஆட்டத்தை!
(அலப்பறை தொடரும்)