கெட்டுப்போன இறைச்சி: வசமாக சிக்கிய சோமேட்டோ!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஒரு திருமண விழாவில் பிரியாணி விருந்து அளிக்க தடபுடல் ஏற்பாடு செய்யப்பட்டது. பிரியாணி தயார் செய்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி நிறுவனம் எடுத்ததாக கூறப்படுகிறது.
அதற்காக சொமட்டோ மூலம் 3.3 டன் ஆட்டுக்கறி மற்றும் கோழிக்கறியை கொள்முதல் செய்தனர். அதன் படி கர்நாடகா மாநிலத்தில் இருந்து குளு குளு வசதியுடைய வேன் மூலம் இறைச்சியை திருமண விழாவிற்கு எடுத்துவரப்பட்டது. அப்போது ஆட்டுக்கறி வேக அதிக நேரம் ஆனதாகவும் துர்நாற்றம் வீசியதாக புகார் எழுந்தது. இதனால் பிரியாணி செய்வது பாதியில் நிறுத்தப்பட்டதால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பிரியாணியை நோக்கி காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து சமைக்காத இறைச்சியை அவசர அவசரமாக சென்னைக்கு எடுத்து வந்ததோடு உணவு பாதுகாப்பு துறையினருக்கும் முறைப்படி தகவல் அளித்தனர். அவர்கள் கிண்டியில் உள்ள ஆர்ஆர் நிறுவனத்தின் பிரதான சமையல் கூடத்திற்குச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது மாண்டியாவில் இருந்து கெட்டுப்போன ஆட்டு இறைச்சி வந்து இருப்பது உறுதியானது இதையடுத்து அவற்றை பயன்படுத்த தடை விதித்த அவர்கள் அவற்றின் மாதிரிகளையும் ஆய்விற்கு அனுப்பியுள்ளனர். இதனிடையே இறைச்சி சப்ளை செய்த சொமேட்டோ நிறுவனம் மற்றும் பிரியாணி நிறுவனத்தினரிடம் அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளது.
இந்நிலையில் 3.3 டன் ஆடு, கோழி இறைச்சிகளை சப்ளை செய்யும் மாண்டியா நிறுவனத்திடம் நேரில் சென்று ஆய்வு செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், கெட்டுப்போன இறைச்சி திருமண விழாவிற்கு வந்தது குறித்து முழுமையான விசாரணைக்கு பிறகு தெரியவரும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.