கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

“ஊருக்கெல்லாம் குறி சொல்லுமாம் பல்லி… விழுந்துச்சாம் கழனிப்பானைக்குள்ள துள்ளிங்கற கதையால்ல இருக்கு மொசக்குட்டி!”

“என்ன சித்தப்பு… எதோ பாட்டு பாடுற போல… எந்த படத்துல இது வந்திருக்கு?”

“அடேய்,,, இது பாட்டு இல்லடா மொசக்குட்டி… சொலவடை… நம்ம அண்ணாமலைய நெனச்சதும் இந்த சொலவடை நினைவுக்கு வந்துச்சு…”

“அப்டி என்ன இந்த வாரத்துல ஒரண்டைய இழுத்திருக்காரு?”

“அவருதான் தெனமும் மைக்கப் புடிச்சுக்கிட்டு எல்லா பிரச்சனைக்கும் கருத்து சொல்றாருல்ல… ஊர்ல இருக்குற எல்லாரையும் குறை சொல்றாரு… ஆனா பாரு… அவரோட கோயமுத்தூர் ஏரியா மக்கள் நூல் விலையேற்றத்தால ஜவுளி உற்பத்தியவே நிறுத்திட்டு போராட்டத்தில் இருக்காங்க… தெனமும் நூற்றுக்கணக்கான கோடி நஷ்டத்தை சந்திக்கும் சூழல்ல இருக்காங்க… மத்திய அரசு நூலை ஏற்றுமதி செய்வதாலதான் நூல் விலை ஏறுதுன்னு எல்லாரும் சொல்றாங்க… ஆனால் இன்னும் மத்திய அரசு இதுக்கு எந்த தீர்வையும் சொல்லல…”

“அதான சித்தப்பு… கொங்கு நாடு… கொங்கு நாடுன்னு சீனப் போட்டாங்க… இப்ப கொங்கு நாட்டுல ஒரு பிரச்சனைன்னா உடனே கழண்டுக்கறாங்களே!”

“அதேதான்டா மொசக்குட்டி… கனிமொழி எம்.பி., ஜவுளி உற்பத்தியாளர்களோட போயி மத்திய அமைச்சரைப் பார்த்துட்டு வந்துட்டாங்க… ஆனா இந்த அண்ணாமலை… வானதி சீனிவாசன்லாம் அதப்பத்தி ஒரு வார்த்தை பேசவே இல்லை பாத்தியா! இதைத்தான் கொங்கு நாடு கட்சித்தலைவர் ஈஸ்வரன் கேள்வி கேட்டிருக்காரு!”

“இதுக்கெல்லாம் பதில் சொன்னாத்தான! இதுல இவரு திமுக அமைச்சர்களை வேற கலாய்ச்சிருக்காரு பாரு சித்தப்பு!”

“இதெப்ப நடந்துச்சு? என்ன சொன்னாரு அப்டி?”

“திமுக அமைச்சர்களில் 90% பேருக்கு இங்கிலீஷே தெரியாதாம்… அவங்களுக்கு தனியா ஃப்ளைட்ல கூட டெல்லிக்கு போகத் தெரியாதாம்… அப்டியே போனாலும் அவங்களால இங்கிலீஷ்ல பேசத் தெரியாததால சென்ட்ரல் கவர்மென்ட்லருந்து ஒரு ரூபா கூட தமிழ்நாட்டுக்கு வாங்க முடியாதாம்!”

“அடக்கண்றாவியே! ஆக, சென்ட்ரல் கவர்மென்டு தமிழ்நாட்டுக்கு ஒரு ரூபா கூட தரலைன்னு சொல்ல வர்றாரா? இங்கிலீஷ் தெரியாததால தரலைன்னு சொல்ல வர்றாரா? திமுக அமைச்சர்களுக்கு இங்கிலீஷ் தெரிஞ்சிருக்கணும்னு சொல்ல வர்றாரா? ஏன் இவரு வரவர என்னென்னத்தையோ பேசிட்டு இருக்காரு!”

“இவரு இப்டி பேசுனதால திமுககாரங்க, மோடி மோசமா தப்புத்தப்பா இங்கிலீஷ் பேச்சு வீடியோவையெல்லாம் எடுத்து சுத்த விட்டுட்டாங்க சித்தப்பு!”

“அதான! மோடியோட இங்கிலீஷ்னாலே தௌஜன்ட்… ஜென்ட்ரல்… கிரிக்கேட்… இப்டித்தான எக்குத்தப்பா இருக்கும்! அதுபோக டெலிப்ராம்ட்டர் இல்லாம வேற சொதப்பியிருந்தாரே!”

“அதேதான் சித்தப்பு! சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டாரு!”

“நீ சொந்த செலவில் சூனியம் வச்சுக்கிட்டதா சொன்னதக் கேட்டதும்தான் துக்ளக் விழாவில் நடந்த கூத்து நினைவுக்கு வருதுடா மொசக்குட்டி!”

“எதைச் சொல்றிங்க சித்தப்பு?”

“தமிழ்த்தாய் வாழ்த்து பாட்டுல… தமிழ் மொழியை பாராட்டுறப்ப, ஆரியர்களைக் குறைச்சு சொல்லியிருந்த வரிகளை நாகரிகம் கருதி கலைஞர் நீக்கியிருந்தாரு. அப்டி நீக்கியிருந்த பாட்டைத்தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலா நாம பாடிக்கிட்டு இருக்கோம்…”

“ஆமா சித்தப்பு… அதுல என்னாச்சு?”

“துக்ளக் விழாவுல,,, அதென்ன கலைஞர் நீக்குறது?ன்னு வீம்புக்கு கலைஞர் நீக்குன வரிகளையும் சேர்த்தே தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலா பாடினாங்க…”

“அதுல ஆரியத்தைப்போல் வழக்கொழிஞ்சு போகாத மொழின்னுதான தமிழைப் பாராட்டியிருக்கு! அது அவங்களுக்கு அசிங்கம் தான சித்தப்பு?”

“அதைத்தான்டா சொந்தச் செலவில் சூனியம்னு சொன்னேன்! அதோட பெண்களுக்கு இலவச பேருந்துக் கட்டணத்தையும் பிச்சையெடுக்குறதா சொல்லி அவமானப்படுத்தி குருமூர்த்தி பேசியிருந்தாரு… அதுக்கு உடனே முரசொலியில காரசாரமா பதிலடி குடுத்துட்டாங்க!”

“குருமூர்த்திக்கு இப்டி எடக்குமடக்கா பேசி திட்டு வாங்கிக்கறது புதுசா என்ன!”

“இதேபோல முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்னு நடந்த ஒரு விழாவும் சர்ச்சையாகிடுச்சு… அதுல, அண்ணாமலையையும் கூப்பிட்டு அவரு கையில மெழுகுவர்த்தியக் குடுத்துட்டாங்க! கூடவே பழ.நெடுமாறனும் நின்னாரு!”

“ஓ… அது அந்த நிகழ்ச்சி தானா? நாங்கூட எதோ சர்ச்சுல ஜெபக்கூட்டம் நடக்குது போல… அதுல எப்படி அண்ணாமலை கலந்துக்கிட்டாருன்னு யோசனையா பார்த்தேன் சித்தப்பு!”

“அந்த கூட்டத்துல தான் பழ.நெடுமாறன், மோடியையும், அண்ணாமலையையும் புகழ்ந்து தள்ளியிருந்தாரு! அதைத்தான் பலரும் விமர்சனம் பண்ணியிருந்தாங்கடா!”

“என்ன பண்றது சித்தப்பு… அவருக்கும் பசிக்கும்ல!”

“சரியாச்சொன்ன போ! இப்போ பில் கேட்ஸ் பண்ணுன ஒரு காஸ்ட்லியான காரியம் தான் ரொம்ப பரபரப்பா பேசப்படுது!”

“பில் கேட்ஸ்னாலே காஸ்ட்லி தான சித்தப்பு! எந்த கம்பெனிய விலைக்கு வாங்குனாரு?”

“விலைக்கு வாங்கல… வேணாம்னு விட்டுட்டாரு… அது கம்பெனி இல்ல… மனைவி! 27 வருஷமா அவரோட குடும்பம் நடத்துன மனைவிய விவாகரத்து பண்ணிட்டாரு… ஆனா அதுக்காக அவரோட சொத்து மதிப்புல பாதிய குடுத்துட்டதா சொல்லிக்கிறாங்க!”

“அவரோட சொத்து மதிப்பு எம்புட்டு சித்தப்பு?”

“தோராயமா 146 பில்லியன் டாலர் இருக்குமாம்!!”

“அம்புட்டஆ ஆ ஆ ஆ ஆ!!”

“டேய் மொசக்குட்டி… டேய்ய்ய்ய் என்ன மயக்கம் போட்டுட்டியா?!!”

-புத்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *