ஏழை மாணவர்கள் கல்விக்கு அடுத்த ஆபத்து… எச்சரிக்கும் வேல்முருகன்!

“மாணவர்கள், ஆசிரியர்கள் நலனுக்கு எதிரான தேசிய உயர் கல்வித் தகுதி கட்டமைப்பின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை பல்கலைக்கழக மானியக் குழு கைவிட வேண்டும்” என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொது மக்களின் கருத்துக் கேட்பதற்காக, பட்டப்படிப்புகளில் செய்யப்போகும் மாற்றங்களுக்கான பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை ஒன்றை பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதாவது, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைப்படி, கலை, அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளில் கொண்டுவரபோகும் மாற்றங்கள் குறித்த இந்த வரைவு அறிக்கை மீதானக் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தியுள்ளது.

அதில், தற்போது நடைமுறையில் உள்ள 3 ஆண்டுகள் கொண்ட பட்டப்படிப்பை, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி, மேற்படிப்பு என 5 பிரிவுகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பி.ஏ பொருளியல் பட்டப்படிப்பில் சேரும் ஒரு மாணவர் வேலைக்கு செல்ல வேண்டுமென்று விரும்பினால், பி.ஏ சர்டிபிகேட் அல்லது பி.ஏ டிப்ளமோ முடித்துவிட்டு வேலைக்கு செல்லலாம். மேற்படிப்பு படிக்க வேண்டு விரும்பினால் பி.ஏ, ஹானர்ஸ், ஆராய்ச்சி நான்காண்டுகள் படிக்க வேண்டும்.

இந்த வரைவு அறிக்கையின்படி, கலை, அறிவியல் படிப்புகளையும், பொறியியல் – தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளையும் ஒரே பார்வையில் அணுகப்படுகிறது. குறிப்பாக, ஒரு இளங்கலையில் கணிணி அறிவியல் படிக்கும் மாணவன் தன்னுடைய படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்வதாக இருந்தால், தான் படித்த கணிணி அறிவியல் சார்ந்த தொழிலை தேர்ந்தெடுப்பார். படித்த கல்வி அவருக்கு உதவக்கூடும்.

ஆனால், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் ஒரு மாணவர் தன் இளங்கலை படிப்பை முதல் அல்லது இரண்டாம் வருடத்தில் படிப்பை துறந்தால் அவர் எந்த வேலைக்கு செல்ல முடியும்? பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி பயிலும் இளங்கலை மாணவர்கள் தங்கள் முதல் வருடத்திலோ அல்லது இரண்டாம் வருடத்திலோ தங்களின் படிப்பை துறந்து வேலைக்கு சென்றால், அவர்கள் முழுமையான கல்வியை பெற முடியாத நிலை ஏற்படும்.

முக்கியமாக, கலை மற்றும் அறிவியல் கல்லூரி கற்கும் மாணவர்களை கூலித் தொழிலாளர்களாக மாற்றுமே தவிர, அவர்கள் முக்கிய துறைகளில் உயர் பதவியை பெற முடியாத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, வரைவு அறிக்கையின்படி, ஒரு பாடத்திட்டத்தில் ஐந்து பாடத்திட்டங்களை உருவாக்கினால், ஒன்றிய, மாநில அரசுகள் உயர் கல்விக்கென்று ஒதுக்கப்படும் நிதியில் பற்றாக்குறை ஏற்படும். அரசுக் கல்லூரிகளின் கட்டமைப்பை மேம்படுத்த முடியாது. பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது. இதன் காரணமாக, உயர்கல்வியில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே, தனியார் கல்லூரிகள் லாபத்தினை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போது, தேசிய உயர்கல்வி தகுதிக் கட்டமைப்பின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டால், ஏழை, எளிய மாணவர்கள் முழுமையான கல்வியை பெற முடியாது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை அடைய முடியாது. கூலித் தொழிலாளிகளின் மகன்களோ, மகள்களோ, கூலித் தொழிலாளிகளாகவே மட்டுமே பணியாற்ற முடியும்.

எனவே, மாணவர்கள், ஆசிரியர்கள் நலனுக்கு எதிரான தேசிய உயர்கல்வி தகுதி கட்டமைப்பின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை பல்கலைக்கழக மானியக் குழு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது” என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

chennai high court

டோல்கேட் ஊழியர்கள் வேலை நிறுத்தம்  தொடர்பாக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

திருச்சி – சென்னை தேசிய நெடுந்சாலையில் திருமாந்துறை, மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடிகளில் ஊழியர்கள்…

கிரானைட் தொழிற்சாலையில் பிளேடு அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பரிதாப பலி

ஒசூர் அருகே கிரானைட் தொழிற்சாலையில் கற்களை வெட்ட பயன்படுத்தும் பிளேடு அறுந்து விழுந்து…