மதக் கலவரத்தைத் தூண்டும் போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற சக்திகள் கை இணைப்போம்! – கி.வீரமணி

மதக் கலவரத்தைத் தூண்டும் போக்கிற்கு முடிவுகட்ட மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து அனைவரும் போராடுவோம் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், “பள்ளி, கல்லூரிகளில் அனைவரும் ஒரே சீருடையை அணிய வேண்டும் என்றும், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் ஹிந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்த மாணவ அமைப்புகள் திட்டமிட்டு எதிர்ப்பு தெரிவிப்பதால், கர்நாடகாவில் சர்ச்சை உருவாகியிருக்கிறது. இதன் பின்னணி என்ன? ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க., சங் பரிவார்களின் அணுகுமுறையைத் தெரிந்தவர்களுக்கு ஓர் உண்மை உறுதியாகவே தெரியும். எதையும் மதக் கண் கொண்டு பார்ப்பது என்ற ஒன்றே ஒன்றுதான் அது.

ஒரு சிறு துரும்பு கிடைத்தால் கூட “ஈறைப் பேனாக்கி, பேனைப் பெரும் ஆளாக ஆக்கி’’ என்ற பழமொழிக்கிணங்க  ஒரு யுத்தமே நடத்திவிடுவார்கள்.

ஓடையில் மேற்பகுதியில் நின்று கொண்டிருந்த ஓநாய், ‘கீழ்ப்பகுதியில் நின்று கொண்டிருந்த ஆடு தண்ணீர் குடித்ததால் தான், குடிக்கும் தண்ணீர் குழம்பி விட்டது’ என்று ஆட்டை ஓநாய் அடித்துக் கொன்ற கதையை ஏட்டில் தான் படித்திருக்கிறோம். அந்தத் தன்மையைத்தான் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் மூலம் இப்பொழுது பார்க்கிறோம்.

முஸ்லிம் மாணவிகள் எப்பொழுதும் அணிந்து வருவது போன்றே உடை அணிந்து வருகிறார்கள்? இப்பொழுது திடீர் என்று இந்தப் பிரச்சினையை எழுப்புவானேன்? இதன் பின்னணி என்ன? கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சி இருக்கிறது என்ற பலமா? பணமா? திட்டமா? முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவித் துண்டு அணிந்து வருவோம் என்று சொல்லுவது பச்சையான ஆர்.எஸ்.எஸின் கலவர அணுகுமுறைதானே! இதன்மூலம் ஹிந்து – முஸ்லிம் பிரச்சினையை உருவாக்கி அதன்மூலம் குளிர்காயலாம் என்ற கலவரப் புத்திதானே! பல இடங்களில் செய்து பார்த்து வெற்றி கண்ட ருசி – இப்பொழுது கர்நாடகாவிலும் அரங்கேற்றப்படுகிறது.

காவி அணிந்து கொண்டு ஒரு பக்கம் மாணவர்கள் நிற்பது – அதனை மறுத்து இன்னொரு பக்கத்தில் அணிதிரண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? பள்ளிகளில் மதச் சின்னங்களை அணிந்து வரக்கூடாது என்று பேச முற்பட்டுள்ளார்கள். இவர்கள் எப்பொழுது மதச்சார்பின்மைக் கொள்கை மீது காதல் கொண்டார்கள் என்று தெரியவில்லை. முஸ்லிம்களையும், கிறித்தவர்களையும் பார்க்கும் போதுதானா? அப்படிப் பார்த்தால் மாணவர்கள், மாணவிகள் திருநீறு அணிந்து வரலாமா? நாமம் போட்டு வரலாமா? பூணூல் அணிந்து வரலாமா? உச்சிக்குடுமி வைத்து வரலாமா? என்ற கேள்வி எழாதா? இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பஞ்சாபில் சீக்கிய மாணவர்கள் அணியும் தலைப்பாகையை எடுக்கச் சொல்லுவார்களா? அதைச் செய்து பார்க்கச் சொல்லுங்கள்; என்ன நடக்கும் என்பது காவிகளுக்கு நன்றாகவே புரியும்.கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்த ஆயுத பூஜை, விஜயதசமியில் மாணவர் சேர்க்கை, அந்த நாளில் நெல் பரப்பி அதில் எழுத்துப் பயிற்சித் தொடக்கம், ஆர்.எஸ்.எஸ். பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், காலையில் மதம் சார்ந்த வழிபாடுகள், பிரார்த்தனைகள், ஜெபங்கள் ஆகியவற்றைத் தடை செய்யும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்குமா? கல்வி நிறுவன வளாகங்களில் உள்ள மதம் சார்ந்த வழிபாட்டு இடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? இஸ்லாமிய, கிறித்துவச் செயற்பாடுகளைத் தடுக்க எடுக்கப்படும் முனைப்புகள் ஹிந்து மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் பொருந்தவேண்டுமே!வீண் வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். விஷ வித்தை ஊன்றி அதன் அறுவடையைச் சுவைக்கத் திட்டமிடுகிறது காவிக் கூட்டமான சங் பரிவார்!

மதச்சார்பின்மையில் நம்பிக்கையுள்ள அனைவரும் கட்சிப் பாகுபாடுகளின்றி ஒன்றுபட்டு இந்த அபாயத்தைத் தடுத்து நிறுத்த உடனடியாக முன்வர வேண்டும்.பகுத்தறிவு பேசுபவர்கள் முஸ்லிம் பெண்களின் மத அடையாளத்துக்கு வக்காலத்து வாங்கலாமா என்று சில அரைகுறைகள் உளறக் கூடும்.நாங்கள் பகுத்தறிவாளர்கள் தான். ஆண் – பெண் இருவருக்கிடையே ஆடையில்கூட வேறுபாடு கூடாது – ஜடைகள் கூடாது – பெயர்களில் கூட ஆண் – பெண் வேறுபாடு தேவையில்லை என்று சொல்லுபவர்தான் தந்தை பெரியார்.

அந்த நிலையைப் பகுத்தறிவுச் சிந்தனையையூட்டி செயலாக்கத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலை – ஒரு ஜனநாயக நாட்டில் சிந்தனைச் செழுமை மூலம்தான் இதனை உருவாக்க வேண்டும். எதையும் வேறு உள்நோக்கத்தோடு செய்தால் அதனை ஏற்க முடியுமா? ஆர்.எஸ்.எஸ்.சின் இந்தப் போக்குக்குக் காரணம் பகுத்தறிவோ, சமத்துவச் சிந்தனையோ, சீர்மையோ அல்ல; மதவெறியின் முனைப்பு. எனவேதான், வன்மையாகக் கண்டிக்கிறோம்.இன்றைக்குப் பெண்கள் பேண்ட் – சர்ட் அணிந்து வரவில்லையா? கிராப் தலையுடன் வருவது பொறுக்கவில்லையா? முஸ்லிம் பெண்களிடம் கூட இந்த நிலை – மாற்றம் வரத்தான் செய்கிறது. இவை எல்லாம் பகுத்தறிவு- முற்போக்குக் கொள்கைக்கு வெற்றிதான். மாற்றம் என்பதுதான் மாறாதது – இது அறிவியல்.

கிறிஸ்துவக் கலாச்சாரத்தைப் புறந்தள்ளி, ஹிந்துக் கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும் பிரதமர் உள்பட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் உள்பட எந்த உடைகளை அணிகிறார்கள்? வெள்ளைக்காரனின் கிறித்துவக் கலாச்சாரத்தைத் தானே பயன்படுத்துகின்றனர் – பின்பற்றுகின்றனர்.ஊருக்குத்தான் உபதேசமா? ஆர்.எஸ்.எஸில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் சிந்திக்கட்டும். நாட்டு மக்களும் சிந்திக்கட்டும்!” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

எய்ம்ஸ் விவகாரத்தில் ஒன்றிய அரசு ‘ஒன் சைட் கேம்’ விளையாடுகிறது – பிடிஆர் சாடல்

கட்சியை பொறுத்தவரை நான் அடிமட்ட தொண்டன் மட்டுமே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவது குறித்து…

அக்.29 வரை கனமழை நீடிக்கும்; இன்றைய நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் பரபரப்பு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது….

‘புதுச்சேரி வெளிச்சமாக இருக்கிறது’, மின் துறை தனியார் மயமாக்கலை பற்றி தமிழிசை

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கோயமுத்தூர் வருகை தனியார் பல்கலைக்கழக நிகழ்ச்சியில் சிறப்பு…