பூமியின் சூட்டைக் குறைக்குமா COP-26.?

நாளுக்கு நாள் நாம் வசித்து வரும் பூமி தொடர்ந்து வெப்பமாகி வருகிறது. ஆனால், அதனைப் பற்றி உலக நாடுகள் அனைத்தும் கவனம் கொடுப்பதாகத் தெரியவில்லை. பருவநிலை மாறுபாடு மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற கவனத்தில் கொள்ள வேண்டிய பல பிரச்னைகள் இருக்க கொரோனா பரவல் ஒருபுறம் மேலும் ஒரு பிரச்னையாக சேர்ந்து கொண்டது. பருவநிலை மாற்றம் குறித்து அண்மையில் ஐநா தலைவர் கூறியதாவது, உலகம் வேகாமாக வெப்பமடைந்து வருவது உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு அபாய மணியாகவும், இன்னும் இரு தினங்களில் கிளாஸ்கோவில் நடக்க இருக்கிற COP-26 பருவநிலை மாநாடு அதற்கு தீர்வு காணப்படும் இடமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள இலக்குப்படி பசுமை இல்ல வாயுவினை இந்த நூற்றாண்டில் 2.7 சதவீதத்திற்கு குறைவாக கட்டுப்படுத்துவது சவாலான காரியம் என ஐநா தெரிவித்துள்ளது. பருவநிலை மாநாடு குறித்த கூட்டம் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெற இருக்கும் நிலையில் ஐநாவின் சுற்றுச்சூழல் அமைப்பு உலக நாடுகளின் இலக்கு குறித்து பேசியுள்ளது. அதில், கார்பன் மாசுபாடு குறித்து உலக நாடுகள் கொடுத்துள்ள இலக்குகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஐநா சுற்றுச்சூழம் அமைப்பின் நிர்வாக இயக்குநர் இங்கர் ஆண்டர்சன், உலகில் உள்ள 78 சதவீத கார்பன் மாசுபாட்டிற்கு ஜி-20 அமைப்பு நாடுகளே காரணம் என தெரிவித்துள்ளார். மேலும், உலகின் வளர்ந்த நாடுகள் அனைத்தும் கார்பன் வெளியேற்றும் அளவைக் குறைக்க வேண்டும் எனவும், அதேபோல உலகின் அனைத்து நாடுகளும் கார்பன் வெளியேற்றும் அளவினை குறைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உலகம் வெப்பமடைந்து வரும் அதே நேரத்தில் பருவநிலை மாநாடும் நடைபெற இருப்பதால் உலக நாடுகளின் மீதும், அவர்களின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதன் மீதும் சர்வதேச அமைப்புகளின் பார்வை விழுந்துள்ளது. மேலும், புவி வெப்பமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் சதவீதத்திற்கும் கீழே வைத்திருப்பது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது.
புவி வெப்பத்தை 1.5 டிகிரி செல்சியஸ் சதவீதத்திற்கும் கீழே குறைப்பதன் மூலம் உலகெங்கும் ஏற்படும் தீவிர புயல்,வெள்ளம்,காட்டுத் தீ போன்ற அபாயகரமான வானிலை நிகழ்வுகளைத் தவிர்க்கலாம். மேலும், சிறிதளவு புவியின் வெப்பம் மாறினால் கூட பல பேரிடருக்கு அது வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
2015 பாரீஸ் உடன்படிக்கையின்படி 192 நாடுகளின் உறுதி மற்றும் 2030 ஆம் ஆண்டில் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 16 சதவீத கார்பன் வெளியீடு இந்த நூற்றாண்டின் இறுதியில் 2.7 டிகிரி செல்சியஸ் அளவிற்கு அதிகரிக்கக் கூடும், மேலும் அது உலகின் பல மோசமான விளைவுகளுக்கு வழி வகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.