ஆம்புலன்சிலேயே பிரசவம்… ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு

சத்தியமங்கலம் அடுத்த கோட்டமாளம் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன். இவரது மனைவி லட்சுமி, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், லட்சுமிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சங்கர், மருத்துவ உதவியாளர் அஜித்குமார் ஆகியோர் கர்ப்பிணி லட்சுமியை ஏற்றிக்கொண்டு கோட்டமாளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுகொண்டிருந்தனர்.
ஆனால், திம்பம் மலைப்பாதை 16 வளைவின் அருகே சென்றுகொண்டிருந்தபோது பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் ஆம்புலன்ஸிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது.
இதில், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் லட்சும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக கூறினர்.
ஆம்புலன்ஸிலேயே மருத்துவம் பார்த்த மருத்துவ உதவியாளர் அஜித்குமார், ஓட்டுநர் சங்கர் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிகிறது. மேலும், திருமணமாகி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை பிறந்ததில் மாதவன் – லட்சுமி தம்பதியும் மகிழ்ச்சியாக உள்ளனர்.