ஸ்டேன் சுவாமி இறப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் ஐநா

மனித உரிமைகள் ஆர்வலரான ஸ்டேன் சுவாமி எல்கர் பரிஷத் வழக்கில் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூலை 5 ஆம் தேதி காலமானார்.
அவரது இறப்புக்கு மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐநா சிறப்பு செய்தித்தொடர்பாளர் மேரி லாலர் நேற்று(17.7.2021) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ எந்த ஒரு தகுந்த ஆதாரங்களின் அடிப்படையும் இல்லாமல் கைது செய்யப்படும் மனித உரிமைகள் ஆர்வலர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை ஸ்டேன் சுவாமியின் இறப்பு நமக்கு உணர்த்துகிறது.
40 ஆண்டுகளுக்கும் மேலாக மனித உரிமைகளுக்காகவும் சமூக நீதிக்காகவும் போராடிய கத்தோலிக்க பாதிரியாரான ஸ்டேன் சுவாமியின் இறப்பு இந்திய மனித உரிமைகள் வரலாற்றில் ஏற்பட்ட கறை.
மனித உரிமைகள் ஆர்வலரான அவரை தீவிரவாதி போல் நடத்தியதை ஒரு போதும் மன்னிக்க முடியாது. உரிமைகள் மறுக்கப்பட்டு பலியான ஸ்டேன் சுவாமி போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளது.