தம்பி விஜய்க்கு ஆதரவளிக்கும் சீமான் அண்ணன்

அண்மையில், நடிகர் விஜய் தனது ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காருக்கான நுழைவு வரியை குறைக்கக் கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், வரி என்பது பங்களிப்பு அது நன்கொடையல்ல, ரியல் ஹீரோவாக இருங்கள் என்று கூறி அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாகப் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நீதிமன்றத்தால் வழங்கப்பட்டத்தீர்ப்பு என்பது தம்பி விஜய் வரிவிலக்குக்காகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்புதானே தவிர, வரி ஏய்ப்புச் செய்துவிட்டார் என்பதல்ல. ஆனால், அத்தீர்ப்பு வந்தது முதல் தம்பி விஜய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதைப் போல ஒரு போலியான கருத்துருவாக்கம் செய்து, வலதுசாரிக்கும்பல் அவரைக் குறிவைத்துத் தாக்க முற்படுவது கண்டனத்திற்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் வரிவிலக்குச் சலுகை கேட்டதற்காகப் பொங்கித் தீர்க்கும் பெருமக்கள் பல ஆயிரம் கோடியிலான மக்கள் வரிப்பணத்தை வாரிச் சுருட்டிய லலித் மோடியும், விஜய் மல்லையாவும் நாட்டைவிட்டுத் தப்பும்போது என்ன செய்தார்கள்?
அவர்களைத் தப்பிக்கவிட்டு வேடிக்கைப் பார்த்த மோடி அரசு மீது என்ன விமர்சனத்தை வைத்திட்டார்கள்? இன்றுவரை பல லட்சம் கோடியிலான மக்களின் வரிப்பணம், வாராக்கடனாக மாற்றப்பட்டு ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்பட்டு அம்பானி, அதானி போன்ற தனிப்பெரு முதலாளிகளுக்குப் பெரும் சலுகை வழங்கப்படுகிறதே அதற்கெல்லாம் இவர்கள் எவரும் கேள்விகேட்கவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திரைப்படங்களில் தம்பி விஜய் கூறிய கருத்துகளுக்காக, தற்போதைய சூழலைப் பயன்படுத்தி, அவரைப் பழிவாங்கத் துடிப்பது என்பது மிகவும் மலிவான அரசியலாகும். அதனை முறியடிக்கவும் அவதூறு பரப்புரைகளையும், மறைமுக அழுத்தங்களையும் எதிர்கொண்டு மீண்டுவரவும் அவருக்குத் துணை நிற்பேன்.
“ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமைகொண்டு ஏறு” என்று தன் படத்தில் வரும் பாடல் வரிகள் போல, தம்பி விஜய் மிகுந்த உள உறுதியோடு முன்னேறி வரவேண்டும் என தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.