தாயகத்திற்கு எதிராக செயல்படுகிறாரா ஜாக்கி சான்?

உலகின் உள்ள அனைத்து நாடுகளிலும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜாக்கி சான் 1954 ஆம் ஆண்டு ஹாங்காங்கில் பிறந்தவர். இவர் தற்போது எடுத்துள்ள முடிவால் ஹாங்காங் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
அண்மையில், சீன கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது. பெய்ஜிங்கில் நடைபெற்ற திரைப்பட சங்க விழா ஒன்றில் பங்கேற்று பேசிய ஜாக்கி சான் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
மேலும், அவர் “சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதைப் பல நாடுகளில் நானே கண்கூடாகப் பார்த்துள்ளேன். சீன குடிமகனாக இருப்பதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ஜாக்கி சான் , ஐந்து நட்சத்திரங்களை உடைய சீனாவின் சிவப்பு கோடிக்கு உலகம் முழுவதும் மரியாதை கிடைக்கிறது. அதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர ஆர்வமாக உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
ஹாங்காங்கில் ஆதிக்கம் செலுத்தும் நோக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தியுள்ள சீனாவுக்கு எதிராக ஹாங்காங்கில் போராட்டங்கள் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் சீனாவுக்கு ஆதரவாக பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 2019ஆம் ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற ஜனநாயக ஆதரவு போராட்டங்களுக்கு எதிராக ஜாக்கி சான் கருத்து தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.