உத்தரப்பிரதேசத்தின் ’சிலிண்டர் மகள்’!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாகத்தான் இருக்கிறது. அதிலும், வடமாநிலங்களில் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. உத்தரபிரதேசத்தின் மேற்குப்பகுதியில் உத்தராகண்ட் எல்லையில் இருக்கிறது ஷாஜான்பூர். இதன் ஹுந்தால் கேல் பகுதியில் வசிக்கும் மஷ்கூர் அகமது என்பவர் கடந்த மாதம் இறுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், அவரது மகள் ஆர்ஷி மாவட்ட நிர்வாகத்தை அனுகி உதவி கேட்டுள்ளார். ஆனால், அவர்கள் மருத்துமனையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளனர்.
தன் தந்தையை மருத்துவமனையில் அனுமதிக்க மனமில்லாத ஆர்ஷி மாவட்ட நிர்வாகத்திடம் இருந்து ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரை மற்றும் பெற்றுள்ளார். உத்தராகண்டின் என்.ஜி.ஓக்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு சிலிண்டரில் ஆக்ஸிஜனை நிரப்பி, தன் தந்தைக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்ததில் அவர் குணமடைந்துள்ளார்.
இதுகுறித்து ஆர்ஷி, “உத்தராகண்ட் என் ஜி ஓக்களால் எனது தந்தை கரோனாவிலிருந்து குணமாகி உயிர் பிழைத்தார். இதேமுறையை பயன்படுத்தி இங்கு பாதிக்கப்படும் மற்றவர்களுக்கும் ஆக்சிஜன் சிலிண்டரை அளிக்க முடிவு செய்து அளித்து வருகிறேன்” என தெரிவித்துள்ளார்.
தற்போது, உத்தரபிரதேசத்தின் ஹர்தோய், உத்தராகண்டின் உதாம் சிங் நகர் மாவட்டங்களிலிருந்து ஆக்சிஜன் சிலிண்டரை பெறும் ஆர்ஷி தனது ஸ்கூட்டியில் வைத்து தேவைப்படுபவர்களின் வீடுகளுக்கேச் சென்று விநியோகித்து வருகிறார்.
இதன் காரணமாக அவரை ஷாஜாஹான்பூர்வாசிகள் செல்லமாக ‘சிலிண்டர்வாலி பேட்டியா (சிலிண்டர் மகள்)’ என்றழைக்கத் துவங்கி உள்ளனர்.