தன் ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக அளித்த இரவு காவலர்! நெகிழ்ந்த முதல்வர்

தமிழத்தில் தற்போது பரவி வரும் கொரோனா இரண்டாவது அலையால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைச் சமாளிக்க நிவாரணம் வழங்குமாறு முதல்வர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
பொதுமக்களும் தங்களால் முடிந்த நிவாரணத் தொகையை அரசு கணக்கில் செலுத்தி வருகின்றனர். அதில், சில சுவாரசியமான சம்பவங்களும் நடந்துள்ளது.
தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சிறுக சிறுக ஆசையாய் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தைக் கூட கொரோனா நிவாரண நிதியாக குழந்தைகள் கொடுத்து வருகின்றனர். அவர்களின் செயலை ஊக்கப்படுத்தும் வகையில் முதல்வரும் அக்குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரவு நேர காவலராக வேலைபார்த்து வரும் 59 வயதான தங்கதுரை என்பவர் தனது ஒரு மாத சம்பளமான ரூ. 10,101 முழுவதையும் நிவாரணமாக கொடுக்க நினைத்துள்ளார்.
பொதுப்போக்குவரத்து இல்லாத காரணத்தால் சைக்கிள் மூலமே தலைமைச் செயலகம் வந்து முதல்வரை நேரில் பார்த்து நிவாரணத்தை வழங்க நினைத்துள்ளார். ஆனால், முதல்வரைச் சந்திக்க நேரம் கிடைக்காததால் அரசு கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதனையறிந்த முதல்வர் தங்கதுரையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து புத்தகம் ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.