ஆண்கள் அரை டவுசர் அணியக்கூடாது… அதிர்ச்சி உத்தரவிட்ட விநோத கிராமம்!

மனித உரிமை, பெண் சுதந்திரம் என்று அடுத்தகட்ட நகர்வுகளை நோக்கி உலகமே வேகமாக நகர்ந்துகொண்டிருக்கிற இந்தக் காலத்தில், ஆண்கள் அரை டவுசர் அணியக்கூடாது. இளம் பெண்கள் ஜீன்ஸ், டி ஷர்ட் அணியக்கூடாது என்று சில கிராமங்களில் பஞ்சாயத்தினர் கட்டளையிட்டிருக்கிறார்கள்.
இது நடந்திருப்பது உத்திரபிரதேசத்தில். அங்கு ராஜபுத்திரர்கள் அதிகம் வசிக்கிற பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில்தான் இப்படியொரு கட்டளையை பஞ்சாயத்தினர் இட்டிருக்கிறார்கள். அந்த கிராமங்களில் நடக்கவிருக்கிற பஞ்சாயத்துத் தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் ஒன்றைச் சமீபத்தில் நடத்தியிருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பல இளம்பெண்களும் ஆண்களும் மேலே சொன்ன அரை டவுசர், ஜீன்ஸ், டி ஷர்ட் என்று அணிந்து கொண்டிருந்திருக்கிறார்கள். இதைப் பார்த்துத்தான் பஞ்சாயத்தினர் இப்படியொரு கட்டளையைப் பிறப்பித்திருக்கிறார்கள்.
இதற்குக் காரணமாக அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? “அரை டவுசரும் பேன்ட்டும் டி ஷர்ட்டும் நம் நாட்டு கலாசாரத்துக்கு ஒத்துவராது. இதெல்லாம் மேற்கத்திய ஆடைகள். நம் கிராமத்து மக்கள் இந்திய கலாசார உடைகளைத்தான் அணிய வேண்டும். ஆண்கள் என்றால், பேன்ட் சட்டையோ அல்லது தோத்தி குர்தாவோதான் அணிய வேண்டும். பெண்கள் என்றால், புடவை, காக்ரா, சல்வார் கமீஸ் போன்ற ஆடைகளைத்தான் அணிய வேண்டும். எங்கள் கட்டளையை மீறி கிராமத்துக்குள் யாராவது மேற்கத்திய ஆடைகளை அணிந்தால், அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும்” என்றும் அவர்கள் அச்சுறுத்தியிருக்கிறார்கள்.