ஓஎன்ஜிசி குழாய் பாதைகளுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: பி.ஆர்.பாண்டியன்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புளார் கிராமத்தில் விவசாய விளை நிலங்களில் கச்சா பரவி விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

காவிரி டெல்டாவில் ஓஎன்ஜிசி நிறுவனம் மூலம் கச்சா எடுக்கப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு வயல்வெளிகளில் குழாய்கள் பதிக்கப்பட்டு நரிமணம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லப்படுகிற பாதைகளில் விளைநிலங்களுக்கு கீழே புதைக்கப்பட்டுள்ள குழாய்கள் தமிழக அரசின் வழிகாட்டுதல்களை உரிய முறையில் பின்பற்றாமல் பூமி மட்டத்திலிருந்து 3 அடி 4 அடி ஆளத்தில் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.

இதனால் உழவு பணிகளை மேற்கொள்ள இருக்கும் போது குழாயில் அழுத்தம் ஏற்பட்டு வெடிப்பு ஏற்படுகிறது கோடை நாளில் வெப்ப தாக்கத்தால் குழாய்களில் உடைத்துக்கொண்டு கச்சா வெளியேறி விளைநிலங்களை பாழடிக்கிறது. இதனை முன்கூட்டியே கண்காணிப்பதற்கு கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அதற்கான பொறியியல் வல்லுநர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறதா? கண்காணிப்பில் இருந்தால் பேராபத்து தொடர்ந்து கொண்டே இருக்கிறது ஏன்?. இதிலிருந்து காவிரி டெல்டா விவசாயிகளை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மண்ணியல் வல்லுநர் இஸ்மாயில் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து அக்குழு ஆய்வு செய்ததாகவும், ஆய்வின் இறுதி அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து குழாய் வெடித்து கச்சா வெளியேறி விளைநிலங்களில் பரவி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. கிராமங்களில் தீப்பற்றக்கூடிய பேராபத்தும் ஏற்பட்டுள்ளது. இஸ்மாயில் குழு அறிக்கையின் அடிப்படையில் குறைபாடுகளை களைந்து அதற்கு நிரந்தர தீர்வுகாணும் வரையிலும் ஓஎன்ஜிசி குழாய் பாதையில் கச்சா கொண்டு செல்வதற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும். இஸ்மாயில் குழு ஆய்வு குறித்து அறிக்கையை வெளியிட்டு பொதுமக்கள், விவசாயிகள் உண்மைநிலையை தெரிந்துக் கொள்ளும் வெளிப்படையான விவாதத்திற்கு தமிழக அரசு உட்படுத்தவேண்டும். அதுவரையிலும் தமிழக அரசு ஓஎன்ஜிசி கச்சா கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *